முதலமைச்சர் ஏற்காவிடினும் மாற்றுத் தலைமை உருவாகும் :சுரேஸ் பிரேமசந்திரன்

தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்காவிடினும் ஏதேனும் ஒருவகையில் மாற்றுத் தலைமை உருவாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மாற்றுத் தலைமை உருவாகுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். 

சமகால அரசியல் நிலவரம் குறித்து மட்டக்களப்பில் நேற்றைய தினம் கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

 

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை தேவைதானா என்ற கருத்து தற்போது எழுந்துள்ளது. எனினும், “உடனடியாக மாற்றுத் தலைமை தேவையில்லை. கூட்டமைப்பின் தலைவர் தவறுகள் விட்டிருந்தால் அவருடன் பேச முடியும்” என வடமாகாண முதலமைச்சர் கருத்து வெளியிட்டுள்ளார்.வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி, அரசியலமைப்பு, சுயாட்சி என்பன தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களாகும்.

எனினும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களாக தமிழரசுக் கட்சி கைவிட்டுள்ளது. ஆனால் இந்த விடயங்களில் உறுதியாக இருக்கின்றேன் என வடமாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

இவ்வாறான நிலையில், மாற்றுத் தலைமை ஒன்று அவசியம் இல்லை என வடமாகாண முதலமைச்சர் கூறியுள்ளார்.

இது அவரின் சொந்த கருத்தாக இருக்கலாம். எனினும், வடமாகாண சபை கொண்டு வந்துள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதானால் நிச்சயமாக மாற்றுத் தலைமை ஒன்று அவசியம்.

 

“தேர்தல் விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மாகாண சபையில் தாம் வைத்த அரசியல் தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என முதலமைச்சரின் கருத்துகள் வேறுபடுகின்றன.இதனை தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ளாமல் இருக்கின்ற நிலையில், புதிய மாற்றுத் தலைமை அவசியம் என்பது உண்மை.இந்நிலையில், தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமையை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஏற்காவிடினும் ஏதேனும் ஒருவகையில் மாற்றுத் தலைமை உருவாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.