தேசிய அரசில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்ற முடிவை மேற்கொள்ளவுள்ள சில SLFP உறுப்பினர்கள்

தேசிய அரசிலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் சிலர், முக்கிய நிபந்தனைகள் அடங்கிய விசேட அறிக்கை ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் விரைவில் கையளிக்கவுள்ளனர்.

இந்த அறிக்கைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி வழங்கும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே தேசிய அரசில் நீடிப்பதா அல்லது வெளியேறுவதா என்ற முடிவை மேற்படி உறுப்பினர்கள் எடுக்கவுள்ளனர்.

தேசிய அரசுக்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வாறு செயற்படவேண்டும், அதன் கொள்கைத் திட்டம் எப்படி அமையவேண்டும், தனியார் மயமாக்கலுக்கு முழு எதிர்ப்பையும் வெளியிடவேண்டும் என்பது உட்பட மேலும் பல விடயங்கள் அறிக்கையில் உள்ளடக்கப்படும். அது தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது என டி.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய அரசை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஒகஸ்ட் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில், அதை 2020 வரை நீடிப்பதா அல்லது எத்தகைய முடிவை எடுப்பது என்பது குறித்து சு.கவுக்குள் கருத்தாடல் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையிலேயே மைத்திரி அணியிலுள்ள உறுப்பினர்கள் சிலர் டி.பி.ஏக்கநாயக்க தலைமையில் ஒருங்கிணைந்து முக்கிய பல நிபந்தனைகளை முன்வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதிருப்தி நிலையில் இருக்கும் மேற்படி உறுப்பினர்களுள் சிலர் மஹிந்த அணியான பொது எதிரணியுடனும் இரகசியப் பேச்சுகளை நடத்திவருகின்றனர்.

அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நேரில் சந்தித்தனர் என தகவல்கள் கசிந்துள்ளன.

மேலும், மைத்திரி அணியிலுள்ள 18 சு.க. உறுப்பினர்கள் தேசிய அரசிலிருந்து விலகி சுயாதீனமாக இயங்கத் தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்கவை மேற்கோள்காட்டி அண்மையில் தகவல் வெளியாகியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.