சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்யப்போவதாக, இன்று நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்தின் முடிவில் கருணாநிதி அறிவித்தார்!

150525084936_dmk_meeting_640x360தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. மேல் முறையீடு செய்யும் என அக்கட்சியின் தலைவர் மு. கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

தி.மு.கவின் மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் முடிவில், சொத்துக் குவிப்பு வழக்கில் தி.மு.க. மேல் முறையீடு செய்யப்போவதாக அறிக்கை மூலம் கருணாநிதி தெரிவித்தார்.

அந்த அறிக்கையில், சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென கர்நாடகத்தின் தலைமை வழக்கறிஞரும் சிறப்பு வழக்கறிஞரும் பரிந்துரைத்திருக்கும் நிலையில், கர்நாடக அரசு மேல் முறையீடு செய்யுமென நம்புவதாகக் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் பங்கேற்க தி.மு.கவிற்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் இரண்டு முறை தெரிவித்திருப்பதால், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.கவும் மேல் முறையீடு செய்யும் என கருணாநிதி இந்த அறிக்கையில் கூறியுள்ளார்