அம்பாந்தோட்டை துறைமுகத்தை ஒருபோதும் விற்கமாட்டோம். துறைமுக ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வினை பெற்றுத்தருவோம் என துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துள்ள அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக திட்டம் மற்றும் அங்குள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை ஆராயும்பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க சென்றிருந்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
மாகம்புர துறைமுகத்தை விற்பதற்கு ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்படாது. துறைமுகத்தின் பாதுகாப்பை உறுதி செய்து நாடு முகங்கொடுகின்ற கடன் சுமையை குறைத்து தேசிய தேவைக்கு முன்னுரிமை வழங்கும் புதிய முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இச்செயற்றிட்டத்தின் பொழுது துறைமுகத்தில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களினதும் தொழில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காணப்படுகின்ற சட்ட சிக்கல்களை மனிதாபிமான முறையில் தீர்ப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்போது துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் தலைவர் சுகத் ஹதுன்கே உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண் டுள்ளனர்.