ஊடகவியலாளர் கொலை தொடர்பாக வடக்கு முதலமைச்சர் தனக்கு பதிலளித்ததை பார்க்கவில்லை: கந்தையா சிவனேசன்

பாறுக் ஷிஹான்-
 
(சம்பந்தப்பட்டவரை நான் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னிலை விளக்கம் கேட்டேன் என்பதை கூறி அதை செய்தியாக்கியுள்ளேன்.)
ஊடகவியலாளர் சிவராம் கொலையில் தொடர்பு உள்ளதாகவும் இதனால் தான்  அமைச்சுப் பதவிக் கோரிக்கையை நிராகரித்து வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் வெளிவந்துள்ள செய்தியை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின்  வடக்கு மாகாண சபை உறுப்பினர் கந்தையா சிவனேசன் மறுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்  சம்பந்தப்பட்ட உறுப்பினரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர் கேள்வி- வடக்கு மாகாண சபை அமைச்சு தொடர்பாக நீங்கள் முதலமைச்சருக்கு சுயவிபரக்கோவை ஒன்றை அனுப்பினீர்களா?
மாகாண சபை உறுப்பினர்-இல்லை
ஊடகவியலாளர்-அவ்வாறு இல்லையெனில் ஏன் தற்போது உங்களை பற்றி ஒரு செய்தி வெளிவந்துள்ளது.இது உண்மையா?
மாகாண சபை உறுப்பினர்- முதலமைச்சரின் செயலகத்தில் இருந்து   மின்னஞ்சல் ஊடாக    சகல மாகாண சபை உறுப்பினர்களுக்கும் சுயவிபரக்கோவையை அனுப்புமாறு கோரியிருந்ததை அறிந்தேன்.அந்த சுயவிபரக்கோவை எனக்கும் கிடைத்திருந்தது.இது    அமைச்சு விடயத்திற்கா வேறு நோக்கத்திற்காக  என்று எனக்கு தெரியாது.ஆனால் எனது சுயவிபரக்கோவையை உடனே அனுப்பினேன். ஆனால்   தற்போது வெளிவந்துள்ள செய்தி (ஊடகவியலாளர் சிவராம் படுகொலை தொடர்பானது) குறித்து   எனக்கு தெரியாது.அத்துடன் 
நான் அனுப்பிய சுயவிபரக்கோவைக்கு முதலமைச்சர் என்ன பதில் அனுப்பினார் என்று கூட இன்னும் பார்க்கவில்லை .
ஊடகவியலாளர்-    அப்படியாயின் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது நீங்கள் வெளிநாட்டில் இருந்துள்ளீர்களே உண்மையா?
மாகாண சபை   உறுப்பினர்-படுகொலை நடைபெற்ற வேளை நான் இலங்கையிலேயே இருந்தேனா இல்லையா என்று எனக்கு தெரியாது.ஆனால் வெளிநாடுகள் பலவற்றிற்கு சென்று வந்துள்ளேன்.சம்பவம் நடைபெற்ற வேளை உள்நாட்டிலா வெளிநாட்டிலா இருந்தேன் என்று ஆராய வேண்டும்.மேலும் ஊடகவியலாளர் படுகொலை தொடர்பாக எனக்கு இதுவரை எவ்வித விசாரணைக்கும் அழைப்பு விடுக்கவும் இல்லை.எனவே தேவையற்ற விடயங்களை சில ஊடகங்கள் பரப்புகின்றன என  குறிப்பிட்டார்..
ஊடகவியலாளர்-தனிப்பட்ட முறையில் அமைச்சு வேண்டும் என்று நீங்கள் விண்ணப்பித்தீர்களா?
மாகாண சபை உறுப்பினர்-இல்லை.ஆனால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு அமைச்சு வேண்டும் என்று பொதுவாக முதலமைச்சருக்கு சுட்டிக்காட்டினேன்.அங்குள்ள மக்கள் நிலைமையினை சுட்டிக்காட்டி இருந்தேன்.இது தவிர அண்மையில் மறைந்த பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் ஜயாவின் கனவும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வழங்க வேண்டும் என்பதே.
ஊடகவியலாளர்-முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சக ஆளும்கட்சி உறுப்பினர் து.ரவீகரனுடன் அமைச்சு பதவிற்காக முரண்பட்டதாக சொல்லப்படுகின்தே ?
மாகாண சபை உறுப்பினர்-இப்ப தான் இந்த விடயம் குறித்து கேள்விப்படுகின்றேன்.நான் யாருடனும் முரண்பட்டது கிடையாது.இந்த செய்தி தவறானது.சம்பந்தப்பட்ட மாகாண சபை உறுப்பினரை கேளுங்கள் என கூறினார்.
ஊடகவியலாளர்-நன்றி 
இவ்வாறாக குறித்த தொலைபேசி உரையாடல் முடிவுறுத்தப்பட்டது என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
மேலும் கடந்த ஜுன் மாதம் 14 ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து ஆளும்கட்சியில் அங்கம் வகிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கந்தையா சிவநேசன் என்ற இந்த மாகாண சபை உறுப்பினர் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கு நிபந்தைனையற்ற ஆதரவினை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மாகாண சபை உறுப்பினர் புளொட் அமைப்பினை சேர்ந்தவராவார்.
 மேற்குறித்த விடயமானது அண்மையில்   வடக்கு மாகாண சபையில் வெற்றிடமான அமைச்சுப் பதவிகளை நிரப்புவதற்காக  தன்னை ஆதரிக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து சுயவிவரக் கோவையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.
இந்நிலையில்   சுயவிவரக் கோவை அனுப்பிய உறுப்பினர்களில் கந்தையா சிவநேசன் என்ற  மாகாண சபை உறுப்பினருக்கு  அனுப்பி இருந்த சுயவிபரக்கோவைக்கு   வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார் எனவும்    அதில் அந்த உறுப்பினருக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடியாமல் இருப்பதாகவும்  அதற்கு   காரணம்    ஊடகவியலாளர் சிவராம் கொலையில்  மாகாண சபை உறுப்பினருக்கு    தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் – கருதப்படுவதால் தான் இவ்வாறாக  அமைச்சுப் பதவியை வழங்க முடியாமல் இருக்கின்றது என்று  பதிலளித்துள்ளதாக தெரிவிக்கபட்டு அது செய்தியாக தற்போது வெளிவந்தள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.