இவ்வாட்சி மக்களால் நிராகரிக்கப்படுகிறது என்பதனை ஜனாதிபதி தன் வாயாலேயே ஏற்றுக்கொண்டுள்ளார் :நாமல்

ஆட்சியை கவிழ்க்க இனித்த சமூக வலைத்தளங்கள், இன்று ஆட்சிய விமர்சிக்கும் போது கசக்கின்றதா?

 

 

தற்போதைய ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சமூக வலைத் தளங்கள் தன்னை மிகக் கடுமையாக விமர்சிப்பதாக கூறித் திரிவதானது இவ்வாட்சி பொது மக்களால் நிராகரிக்கப்படுகிறது என்ற செய்தியை அவரது வாயாலேயே ஏற்றுக்கொள்வதாக அமைந்துள்ளதாக ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

இன்று உலகில் சமூக  வலைத்தளங்களின் தாக்கம் அதிகம் உள்ளமை மறுக்க முடியாத உண்மையாகும். கடந்த ஆட்சி மாற்றத்தின் போது சமூக வலைத்தளங்களின் தாக்கம் மிகவும் உச்சத்தில் நின்றமையை அவதானிக்க முடிந்தது. பல சிறிய விடயங்கள் மிகவும் பூதாகரமான விடயங்களாக மக்களுக்கு வெளிக்காட்டப்பட்டன. எம்மை நோக்கி பல கேள்விகளும் எழுப்பப்பட்டன. இதற்கு எம்மால் இயன்றளவு பதில் வழங்க முயற்சித்த போதும் மக்கள் அவற்றையெல்லாம் ஏற்கும் மனோ நிலையில் இல்லாதவாறு மக்கள் மனங்கள் ஊடகங்கள் வாயிலாக மாற்றப்பட்டிருந்ததன. ஜனாதிபதி மைத்திரி தனது வெற்றியின் ஆரம்ப காலத்தில் ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அதிகமதிகம் புகழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே ஊடகங்கள் தற்போதைய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக  மாறியுள்ள போது அவற்றை தற்போதைய ஆட்சியாளர்கள்  விமர்சிப்பதையும் முடக்க எத்தனிப்பதையும் அவதானிக்க முடிகிறது. இங்கு தான் நாம் அனைவரும் மிக முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய விடயமுள்ளது. நாம் செய்த சில விடயங்களை விமர்சித்த மக்கள் அதனை இவ்வாட்சியாளர்களிடம் எதிர்பார்க்கவில்லை. அனால், இன்றைய ஆட்சியில் எம்மை மக்கள் எதற்காக விமர்சித்து புறந்தள்ளினார்களோ அதனை விட பன் மடங்கு விமர்சன வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். ஊழல் வாதிகளை தங்களோடு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கின்றனர்.

எம்மை விமர்சித்த அதே  மக்கள் இப்போது இவ்விரு ஆட்சிக் காலங்களையும் ஒப்பிட்டு பார்க்கும் போது எமது ஆட்சியை சரி காண்கிறார்கள். அன்று சமூக வலைத்தளங்கள் எம்மை நோக்கி  எழுப்பிய வினாக்களை இன்று இவ்வாட்சியாலர்களிடம் கேட்கும் போது பதில் அளிக்க முடியாது தவிக்கின்றனர். அப்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக இவ்வாட்சியை நோக்கிய விமர்சனங்களை முன் வைக்கின்றனர். அன்று இனித்த சமூக வலைத்தளங்கள் இன்று கசக்கின்றதென்றால் அது யாருடைய தவறென்பதை மக்கள் இலகுவாக அறிந்துகொள்ள முடியும். இதன் மூலம் புலப்படுகின்ற விடயம் என்னவென்றால் இன்று இவ்வரசின் மதிப்பானது மக்களிடத்தில் பூச்சிய நிலைக்கு சென்றுவிட்டது என்பதாகும்.

மக்களும் பல விடயங்களில் எம்மை நோக்கி வருகின்ற வீதங்களில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த மே தின கூட்டத்தில் நாம் எதிர்பார்க்காதளவு மக்கள் ஒன்று கூடியிருந்தனர். இவைகள் எல்லாம் உண்மைகளை அறிந்து மக்கள் எம்மோடு கை கோர்ப்பதை அறிந்துகொள்ளச் செய்கிறது. இலங்கை மக்கள் எம்மோடு ஒன்றிணைவதை  சமூக வலைத்தளங்களை விமர்சிப்பதாலேயோ அல்லது அவற்றை முடக்குவதாலேயோ ஒருபோதும் தடைசெய்ய முடியாது என்ற செய்தியை ஜனாதிபதி மைத்திருக்கு இவ் ஊடக அறிக்கையினூடாக சொல்ல விரும்புகிறேன்.

ஊடகப் பிரிவு –