பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடங்களை வழங்க விசேட கலந்துரையாடல்

நாட்டில் பல பாகங்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடங்களை வழங்குவது தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது.

அத்துடன், இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட செயலாளர்களினால் காணித் தேவை மற்றும் அடையாளம் காணப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனை தொடர்ந்து அரச காணிகளை பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அரச காணிகள் போதுமானதாக இல்லாத பட்சத்தில் தோட்ட நிறுவனங்களின் வசம் உள்ள தனியார் காணிகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் தொடர்பில் ஆராயுமாறும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சஜித் பிரேமதாச, நவின் திஸாநாயக்க, கயந்த கருணாதிலக்க உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளனர்.