தனியார் வைத்தியசாலைகளின் கட்டணங்கள் ஒழுங்குபடுத்தப்படும் : ராஜித சேனாரத்ன

தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக தங்கும், பரிசோதனை ஆகியவற்றிற்கான கட்டணங்களை ஒழுங்குபடுத்த உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

தனியார் வைத்தியசாலைகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரத்தின் படி அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார். 

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். 

முழு இரத்தக் கொள்ளளவு (FBC) பரிசோதனைக்கு 800-900 ரூபா வரை அறவிடுவதாகவும், அதனை 250 ரூபா வரை குறைக்க முடியும் என்றும் டெங்கு நோய்க்காக செய்கின்ற அன்டிஜன் பரிசோதனைக்காக 4000 ரூபா வரை அறவிடுவதாகவும், அதனை 1000 ரூபா வரை அதிகரிக்க முடியும் என்றும் அமைச்சர் கூறினார். 

அதன்படி இன்று தனியார் வைத்தியசாலைகளின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி திங்கட்கிழமை அளவில் நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார். 

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட விஷேட வைத்திய நிபுணரிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது, டெங்கு நோயாளர்களுக்கு வலி நிவாரண மருந்து வழங்குவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். 

பெரசிடமோலைத் தவிர வலி நிவாரண மருந்து வழங்குவது உயிராபத்தை ஏற்படுத்தும் என்றும், சில வைத்தியர்கள் இதனை வழங்குவதாகவும், இந்த வைத்தியர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.