டில்லி அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது சென்னை

210269.3

எட்டாவது ஐ.பி.எல்., தொடரை வெற்றிகரமாக துவக்கியது சென்னை அணி. டில்லி அணிக்கு எதிரான நேற்றைய லீக் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது சென்னை. கடைசி பந்து வரை போராடிய மார்கல், போராட்டம் வீணானது.இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் டுமினி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

ரெய்னா ஏமாற்றம்: சென்னை அணிக்கு வழக்கம் போல பிரண்டன் மெக்கலம், டுவைன் ஸ்மித் ஜோடி துவக்கம் கொடுத்தது. இம்முறை டில்லி அணிக்காக களமிறங்கிய ஆல்பி மார்கல் வீசிய முதல் ஓவரில், ஸ்மித் 3 பவுண்டரிகள் விளாசினார்.
கூல்டர் நைல் ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய மெக்கலம் (4), அடுத்த பந்திலேயே அவுட்டானார். ‘புது மாப்ளே’ ரெய்னா (4) வந்த வேகத்தில் ‘போல்டான’ போதும், சென்னை அணி 6 ஓவரில் 59/2 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக ரன்கள் சேர்த்த ஸ்மித் (34), இம்ரான் தாகிர் சுழலில் சிக்கினார்.
குறைந்த ரன்வேகம்: 24 பந்தில் 32 ரன்கள் எடுத்த டுபிளசி அவுட்டான பின் சென்னை அணியின் ரன்வேகம் அப்படியே குறைந்தது. ஜடேஜா 18, பிராவோ 1 ரன்னுக்கு அவுட்டாக, சென்னை அணி 120 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது.
துவக்கத்தில் பந்துகளை வீணடித்த கேப்டன் தோனி (30), கடைசி ஓவரில் 2 சிக்சர் அடித்து ஆறுதல் தந்தார். சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. மோகித் சர்மா (2), அஷ்வின் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.
சபாஷ் நெஹ்ரா: எளிதான இலக்கைத் துரத்திய டில்லி அணிக்கு நெஹ்ரா சிக்கல் கொடுத்தார். இவரது 2வது ஓவரில் கவுதம் (4), அகர்வால் (15) என, இருவரும் அவுட்டாகினர். தொடர்ந்து அசத்திய நெஹ்ரா, ஸ்ரேயாசையும் (7) அவுட்டாக்க, டில்லி அணி 39 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது.
மார்கல் அரைசதம்: கேதர் ஜாதவ் (20) ஏமாற்ற, ரூ. 16 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங், 9 ரன்னுக்கு அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். டுமினியும் (5), கூல்டர் நைல் (5). அமித் மிஸ்ரா (4) என, வரிசையாக அவுட்டாக சென்னை அணிக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
‘திரில்’ வெற்றி: டில்லி அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டன. பிராவோ வீசிய இந்த ஓவரின் முதல் இரு பந்தில் ஒரு பவுண்டரி உட்பட 5 ரன்கள் எடுத்தார் மார்கல். அடுத்த பந்தில் இம்ரான் தாகிர் (2) அவுட்டானார்.
4வது பந்தில் சிக்சர் விளாசிய மார்கல், அடுத்த பந்தில் 2 ரன் எடுக்க ‘டென்ஷன்’ அதிகரித்தது. கடைசி பந்தில் 6 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மார்கல், பவுண்டரி மட்டும் அடிக்க, சென்னை அணி 1 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.
டில்லி அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 149 ரன்கள் மட்டும் எடுத்து போராடி வீழ்ந்தது. மார்கல் (73 ரன், 55 பந்து), ஜோசப் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.