அமைச்சுப் பதவியை தூக்கி எறிய எந்த நேரமும் நான் தயார் : அமைச்சர் றிஷாட் பதியுதீன்

-ஊடகப்பிரிவு.

முஸ்லிம் சமூகத்திற்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின் ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை எனவும் வேண்டுமெனில் அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் எந்த நேரமும் தயாராக இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் மேலும் கூறியதாவது, 

முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதியிடமும் பிரதமரிடமும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டும் அத்தனை பேர்களிடமும்  மிகவும் ஆணித்தரமாகவும் பக்குவமாகவும் முஸ்லிம் அரசியல் சக்திகளும், சமூக இயக்கங்களும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்திய போதும் நாசகாரிகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. 

அமைச்சுப்பதவியை வகிப்பதால் நாங்கள் அடங்கிப்போகவேண்டும் என்று எவரும் தப்புக்கணக்குப் போட முடியாது சமூகத்திற்கான பாதிப்புக்கள் நிறுத்தப்படும் வரை நாங்கள் ஓயப்போவதும் இல்லை.

முஸ்லிம்களை துன்புறுத்திவரும் பொதுபல சேன போன்ற இனவாத இயக்கங்கள் இலங்கையின் சுதந்திரத்துக்குபின்னரானதும் முன்னரானதுமான வரலாற்றை ஆழமாக படித்துப்பார்க்கவேண்டும்.

முஸ்லிம்களும் முஸ்லிம்களின் தலைவர்களும் நாட்டுக்காக செய்த தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் அவர்கள் தெரிந்து வைதிருக்க வேண்டும். ஆங்கிலேயர் முதல் அதன் பின்னர் உருவான தீவிரவாத இயக்கங்கள் நாட்டைத் துண்டாட முற்பட்ட போது  முஸ்லிம்கள் அதனை எதிர்த்துப் போராடிய வரலாறுகளை இவர்கள் உணரவேண்டும். சிங்கள -முஸ்லிம் உறவுக்காக முஸ்லிம் சமூகத்தின் முன்னோடித் தலைமைகளான டாக்டர் டி பி ஜாயா முதல் எம் எச் எம் அஸ்ரப் வரை பட்ட கஸ்டங்களின் வரலாறுகளை இவர்கள் படிக்க வேண்டும்.முஸ்லிம்கள் என்றுமே முஸ்லிம் தலைமைக்கும் அந்தந்த காலப்பகுதியில் ஆட்சி செய்த அரசுக்கும் கட்டுப்பட்டே வாழ்ந்திருகின்றார்கள்.

வன்முறைமீது என்றுமே நாட்டம் கொள்ளாத இந்த சமூகத்தை பொறுமை இழக்கச் செய்து இன்னுமோர் அழிவுக்கு இந்த நாட்டை இட்டுச் செல்வதற்கு இனவாதிகள் துடியாய்த் துடிக்கின்றார்கள். இதன் மூலம் முஸ்லிம்களின் பலத்தையும் பொருளாதார வளத்தையும் ஒட்டுமொத்தமாக தர்ப்பதே இனவாதிகளின் உள்நோக்கமாக இருக்கின்றது. இந்த அரசு இவர்களின் நாசகார செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம் என்றார்.

இந்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபக உபவேந்தர் எம் எல் ஏ காதர்,கிபத்துள் கரீம் உட்பட பலர் பங்கேற்றனர்.