கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லீம்களையும், பல உரிமைகள் தொடர்பிலான அபிலாசைகளை உள்ளடக்கிய முஸ்லீம்களின் எதிர்கால அரசியலையும், சமூக கலாச்சார விழுமியங்களையும் பாதுகாக்கும் நோக்கில் காலத்தினதும், மக்களினதும், தேவைகளை கவனத்தில் கொண்டு மர்ஹூம் அஷ்ரபின் பாசறையில் வளர்ந்த, முன்னாள், இந்நாள் முஸ்லீம் காங்கிரஸ் போராளிகளினாலும், சகல முஸ்லீம் கட்சிகளினாலும் ஒன்றிணைந்து உருவாக்கப்படுவதே இந்த முஸ்லீம் கூட்டமைப்பாகும்.
இனம், மதம், மொழி அடிப்படையில் முஸ்லீம்கள் முடக்கப்படுவதும், புறக்கணிக்கப்படுவதும், தாக்கப்படுவதும், முஸ்லீம்களின் உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்படுவதும், காலத்துக்கு காலம் நடந்தேறி வருகின்ற கதையாகும், ஆனால் இத்தொடர் கதையின் வளர்ச்சியில் எதிர்கால நிலைப்பாடானது, இறுக்கமாக திட்டமிடப்பட்ட புதிய மரபுகளின் சேர்க்கையால், முஸ்லீம்களைத் தாக்கும் வியாபாரம் அரங்கேற்றப்படும் என்பது திண்ணம். எனவே இணைந்த இக்கட்சிகளின், அல்லது முஸ்லீம் கூட்டமைப்பின் வரவானது அல்லது பலமானது, எதனையும் எதிர் கொள்ளும் வகையில் சிறப்பாக அமைய வேண்டியது எமக்கு முக்கிய தேவையாகவுமுள்ளது.
மர்ஹூம் அஸ்ரப், ஹஸனலி ,முஸ்லீம் காங்கிரஸ் போராளிகள் உட்பட, வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லீம்கள் எவ்வளவோ தாங்க முடியாத பயங்கரவாத, இனப் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துப் போராடி, மாண்டு, உயிர் தப்பிய கதைகள் ஏராளம். புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்புக்களின் உயிரைக் காவு கொள்ளும் சித்திரவதையில் இருந்து, இவர்களால் தினமும் வழங்கப்படுகின்ற பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட சிகிச்சையில் இருந்து, மீண்டுவருகின்ற வழியில், பொது பல சேனா போன்ற கட்டமைப்பான கூட்டமைப்புக்களின் படுகுழிகளில் விழ வேண்டிய கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டிருப்பது வேதனைகளுக்குரிய விடயமாகும்.
மகிந்த அரசிலும், மைத்திரி ரணில் அரசிலும் முஸ்லீம்களை நோக்கிய தாக்குதல்களும், தாக்கங்களும், வித்தியாசமின்றி “பழைய குருடி கதவைத் திறடி” என்ற கோணத்தில் ஆட்சியும், அதிகாரமும் முன்னெடுக்கப்படுகின்றது. முஸ்லீம்களின் பொருளாதாரம் அழிக்கப்படுவதோடு, தினமும் ஒரு கடைக்கு தீ வைக்கப்படுகிறது. ஊடகங்களினால் முஸ்லீம்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சனைகள் தொடர்பான நோக்கு, அவதானத்துடனான பார்வை, கொடுக்கின்ற குரல் எதிர்பார்த்ததையும் விட மிகவும் குறைவு, எமது முஸ்லீம்களின் உரிமைகளுக்கான வெளிநாடுகளின் குரல்களுக்கும் பஞ்சமேற்பட்டுள்ளது, மனித உரிமை மீறல்களை தட்டிக் கேட்கும் அமைப்புக்களும் மிகவும் மெதுவாகவே தட்டுகிறது, முஸ்லீம்களை பின்தொடரும் டயஸ்போறாக்களின் செறிவூட்டல்கள் பின்புலமாக முன்னேறியுள்ளது. இன்று உலகளாவிய ரீதியில் முஸ்லீம்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பது ஒரு பிழைப்பாகி விட்டது. ஆக மொத்தத்தில் முஸ்லீம்களை மனிதாபத்துடன் பார்ப்பதற்கு பதிலாக பகடைக் காய்களாக பாவிப்பவர்களே அதிகமாகவுள்ளனர்.
இந்நிலையில் தான் எங்களது இருப்பிடத்தினையும், எதிர்கால சந்ததிகளின் வாழ்க்கையினையும் பற்றி தீர்மானிக்க வேண்டிய பொறுப்புள்ளவர்கள் எனும் நிர்பந்தத்துக்குள் நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஆனால் ஏற்கனவே மர்ஹூம் அஸ்ரப் இது போன்ற பல சந்தர்ப்பங்களில் கண்ட முடிவில்லாத சிக்கல்களுக்கும், தொடர்கின்ற சமூக அழுத்தங்களுக்குமான தீர்வினை முஸ்லீம் காங்கிரசின் தாரக மந்திரமாக்கி “எமது மக்கள்” என்ற பார்வையில் தூரநோக்கு சிந்தனையின் மூலம் “எம்மை நாமே ஆளவேண்டும்” என்ற உபாயத்தில் உறுதிகண்டு, கரையோர மாவட்டம் (தென்கிழக்கு அலகு) அல்லது நிலத் தொடர்பற்ற நிர்வாக அலகு எனும் முஸ்லிம்களுக்கான உரிமை வேண்டுதலை எமது சமூகத் தேவைகளாக அரசுகளுக்கு முன்வைத்தார். ஆனால் இவ்வேண்டுதல் முன்வைக்கப்பட்ட போது இருந்த ‘ஆக்ரோஷம்’ மக்களை நோக்கிய அரசியலைச் செய்த மர்ஹூம் அஷ்ரபின் மறைவிற்கு பின்னர், வியாபார மயப்படுத்தல் அரசியலைச் செய்த ஹக்கீமினால் 17 வருடங்களும் வெறுமனே காலம் நகர்த்தப்பட்டு, மலினமடைந்து இன்று பேச்சுருவில் மாத்திரமே காணப்படுகிறது. முஸ்லீம்களின் தேர்தல் வாக்குகளும் அதன் வெற்றிகளும் முஸ்லீம்களுக்கு எந்தப் பிரயோசனத்தையும் கொடுக்காததுடன், மக்கள் தெளிவுள்ள மந்தைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். முஸ்லீம் காங்கிரஸில் அஷ்ரபின் சிந்தனையோடு மக்களுக்காக செயற்பட்டவர்கள் இன்று வெளியேற்றப்பட்டு, ஹக்கீம் அணி மேலோங்கி செழிப்படைந்து காணப்படுகிறது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், இளைஞர் சேவைகள் மன்ற காரியாலயம் என்பன கல்முனையை விட்டு அகற்றப்பட்டுள்ளதுடன், ஹக்கீம் அணியின் அனுமதியுடன் மாயக்கல்லி மலையில் வைத்த, எடுக்க முடியாத சிலைக்கு அடுத்ததாக, சிங்கள மன்னர் ஆட்சி காலத்தில் சிங்கள சிங்காரத் தோப்பாக இருந்த நிந்தகம தான் நிந்தவூராக மாறியுள்ளது என பேரினவாதிகளிடம் ஆடைத் தொழிற்சாலையினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பிரதி அமைச்சர் பைசால் காசிம் போட்டுக் கொடுத்ததை நினைவூட்ட வேண்டியுள்ளது. இவைகள் தான் முஸ்லிம்களாகிய நாங்கள் இன்று கை மேல் காணுகின்ற பலனாகவுள்ளதுடன். தற்பொழுது அஷ்ரபின் கட்சியும் சிதைவடைந்து, சொத்துக்களும் சூறையாடப்பட்டு மங்கிக் காணப்படுவதால் சகல நிகழ்ச்சித் திட்டங்களும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தின் தேவையிலுள்ளோம். எனவே தனியாக கொடுக்கின்ற குரலினை விட எல்லோரும் சேர்ந்து கொடுக்கின்ற குரலுக்கு சக்தி அதிகம் என்பதை மக்களும் விரும்புவதால், 17 வருடங்களாக நாங்கள் ஹக்கீமிடம் தொலைத்த அரசியல் சுதந்திரத்தை மீண்டும் பெற, அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டியது காலத்தின் கட்டாயமாகவும், கிழக்கின் தேவையுமாகவுள்ளது.
தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் பலனாக பல காணிகளை மீட்டுள்ளார்கள், எத்தனையோ பிரச்சனைகளுக்கு தீர்வு காணுகின்றார்கள், புனரமைப்புக்களுடன் பல வீதிகள் அமைக்கப்படுவதுடன், புதிய வீட்டுத் திட்டங்கள், சமூக நலத் திட்டங்கள், வெளிநாட்டு உதவிகள் என சாதனைகளின் பட்டியல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, இன்னும் இரண்டு வருடத்துக்குள் தமிழ் மக்களின் இனப் பிரச்சனைகளுக்கான தீர்வும் வெளிநாடுகளின் உதவியுடன் முடிவிற்கு வரவுள்ளது. ஆனால் ஹக்கீமின் தலைமைத்துவத்தில் முஸ்லிம்களாகிய நாங்கள் தொடங்கிய இடத்திலேயே இன்றும் இருக்கின்றோம். முஸ்லீம்களின் முன்னேற்றம் என்பது வரையறுக்கப்பட்டு முஸ்லீம் காங்கிரஸ் ஹக்கீம் அணி அனுபவிக்கும் சொகுசுக்கும், வாங்கும் பணத்துக்கும், அடிக்கும் ஜலராவுக்கும் கணக்கு சரி காணுகின்றது.
ஹஸனலி இரண்டு வருடங்களுக்கு தாற்காலிகமாகவே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார் என கண்டிக் கூட்டத்தில் ஹக்கீம் பேசியதையும், தமிழ் இனப்பிரச்சனை தீர்வுக்கு அரசு இரண்டு வருடங்களை கால அவகாசமாக கேட்டதையும், இதனை வெளிநாடுகளும், தமிழ்த் தரப்பும் ஏற்றுக் கொண்டதையும் நோக்கும் போது அனைத்து நகர்வுகளிலும் இந்த “இரண்டு வருடம்” மறைமுக வலைப்பின்னலான தொடர்புகளைக் கொண்டிருப்பதை காணலாம். இந்த இரண்டு வருட காலத்தில் இனப்பிரச்சனைத் தீர்வு முடிவிற்கு வரும் போது, முஸ்லீம்களுக்குரிய தீர்வும் உறுதிப்படுத்தப்பட வேண்டும், ஆனால் சொந்த குடும்ப வாழ்க்கையிலும், பொது அரசியல் வாழ்க்கையிலும் நேர்மையை கடைப்பிடிக்க முடியாத, ஹரீஸ் எம் பி சொன்னது போல் 6500 கோடி ரூபாவிற்கு மேல் செல்வத்தைக் கொண்டுள்ள “அரசியல் வியாபாரி” ஹக்கீமால் கிழக்கு மாகாண மக்களுக்கு கரையோர மாவட்டமோ (தென்கிழக்கு அலகு) அல்லது நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகோ கிடைக்கும் என்பது பகல் கனவாகவே காணப்படும்,
மாறாக கரையோர மாவட்டமோ (தென்கிழக்கு அலகு) அல்லது நிலத்தொடர்பற்ற நிர்வாக அலகோ இல்லாத தீர்வு ஏற்படுத்தப்படுமாயின் இங்கு முஸ்லீம்கள் படுகுழியில் தள்ளப்படுவதற்கு சமமான சன்மானம் ஹக்கீமுக்குள்ளது என்பதை அன்று நோர்வேயிடம் ஹக்கீம் பெற்ற பணம், இன்று முற்பணமாக மாறி இதை உறுதிப்படுத்துகிறது. இந்த போகத்துக்குப் பின் இக்கட்சி ஹக்கீமுக்கு தேவைப்பட அவசியமில்லை என்ற படியால் தாராளமாக ஹஸனலி பொதுச் செயலாளராகவும், பஷீர் தவிசாளராகவும் ஏனையோரும் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படலாம், என்பது இங்கு புதைத்து வைக்கப்பட்டுள்ள ரகசியமாகும். எனவே முஸ்லீம்கள் விழித்தெழுவது மட்டு மல்லாது, கிழக்கினை பாதுகாக்க இணைகின்ற கட்சிகள் ஏற்றத்தாழ்வான விட்டுக் கொடுப்புக்களுடன் பல சமப்படுத்தல்களை தமக்குள்ளே ஏற்படுத்திக் கொண்டு ஒன்று சேர வேண்டும். அப்போது தான் எமது சமூக தேவைகளை வென்று பெற முடியும். இப்படியொரு இக்கட்டான சூழ்நிலை வரலாம் என்று தான் “முஸ்லீம் காங்கிரஸினால் சமூகத்துக்கு பிரயோசனமில்லை எனின் இக்காட்சியை அழித்துவிடு ” என மர்ஹூம் அஷ்ரபினால் துஆவும் கேட்கப்பட்டுள்ளது
முஸ்லீம் கட்சிகள் கூட்டமைப்பாக எந்தத் தேர்தலில் களமிறங்கினாலும் அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்கின்ற வல்லமையினைப் பெறுவதோடு, தமிழ்க் கூட்டமைப்பிற்கு இருக்கின்ற அதே வலிமையினை இனப் பிரச்சனை தொடர்பான பேச்சு வார்த்தை மேடையில் முஸ்லீம் கூட்டமைப்பும் பெறுவதுடன் ,உரிமைகள், உடைமைகள் அடங்கிய எங்களது கோரிக்கைகளையும், எதிர்கால சந்ததிகளின் அபிலாசைகளையும், விழுமியங்களையும் முஸ்லீம் கூட்டமைப்பின் மூலம் வென்றெடுக்கக் கூடிய வாய்ப்பு தலை தூக்குகின்றது என்பது அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மையாகும்.
அமீர் மௌலானா