கிழக்கின் அரசியலும் முஸ்லிம் கூட்டமைப்பும்

பிரித்தாளும் தந்திரம் என்பது உலக வரலாற்றில் பல்வேறு யுத்தங்களுக்கும் பேரிழப்புக்களுக்கும் இட்டுச் சென்றிருக்கின்றது. ஆபிரிக்கா கண்டத்திலும், மத்திய கிழக்கிலும், ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் கூட வேறு வேறு வடிவங்களில் பிரித்தாளும் உத்தி கையாளப்பட்டிருக்கின்றது. ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களை ஒருவொருக்கொருவர் மோதவிட்டு இந்தியாவை தமது கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியில் வெற்றி பெற்றனர். இதுபோல பல காலனித்துவ நாடுகளிலும் பிரித்தாளும் தந்திரம் ஆதிக்க சக்திளால் தமது நலனுக்காக உபயோகப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது.

பிரித்தாளும் தந்திரம் என்னென்ன பெயர்களில், வேறு தோரணைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், பொதுவாக எல்லாப் பிராந்தியங்களிலும் அதனது விளைபயன் ஒரே தன்மை கொண்டதாக இருந்திருக்கின்றது. அதாவது, யார் யார் பிரித்தாளும் தந்திரத்தை அமுல்படுத்தினார்களோ அவர்கள் இதில் அதிக நன்மையை, இலாபத்தை அனுபவித்துக் கொண்டனர். ஒரு சிறுபிள்ளை கார்ட்டுன் விளையாட்டில் ஹீரோவையும் வில்லனையும் மோதவிட்டு விட்டு, கைகொட்டிச் சிரிப்பது போன்று, இந்த வெளிச் சக்திகள் உள்நாட்டில் உள்ள இனக் குழுமங்கள், ஆட்சியாளர்கள், அரசியல் பிரிவினரை மோதவிட்டுவிட்டு புதினம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், பிரித்தாளும் தந்திரத்திற்குள் அகப்பட்டுப் போன சமூகங்கள் சிதைந்து சின்னாபின்னமாகின. இது ஒரு நரித் தந்திரம் என்பதை உணராத மக்கள் அப்பாவிகளாக இருந்து பெரும் உயிரிழப்புக்களையும் சொத்திழப்புக்களையும் சந்தித்தமையே வரலாறு.

முஸ்லிம் அரசியல் உத்தி

இலங்கையின் பெருந்தேசிய அரசியலில் மட்டுமல்ல இனங்களுக்கு இடையிலான அரசியலிலும் பிரித்தாளும் தந்திரமே மறைமுகமாக பிரயோகிக்கப்படுகின்றது. மக்கள் இதை அறிந்து கொண்டால் அவர்கள் இதில் தெளிவு பெற்றுவிட்டால், தமது பிழைப்பு படுத்துவிடும் என்று பொய்யாக வேறு வேறு காரணகாரியங்கள் சொல்லப்படுகின்றன. மிகக் குறிப்பாக, முஸ்லிம்களின் அரசியலிலும் பிரித்தாளும் உத்தி இன்று கையாளப்படுகின்றது. தம்முடைய ரசிகர்களை கட்டிப்போட்டு வைக்கும் சினிமா நட்சத்திரங்கள் போல தமக்கு வாக்களிக்கும் மக்களை, ஆதரவாளர்களை, கட்சிக்காரர்களை தம்மோடு வைத்திருப்பதற்காக இந்த தந்திரம் மிக நுணுக்கமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இதற்காக மக்கள் பிரதேச வாரியாகவும் கட்சி அடிப்படையிலும் பிரிக்கப்பட்டு ஒருவித மாய உலகிற்குள் வைத்து ஆளப்படுகின்றனர். ஒரு ஹிப்னோடிஸ வைத்தியரைப்போல மக்களை சிந்திக்கவிடாது, தாம் சொல்வதே தாரக மந்திரம் என்று நம்புபவர்களாக, தம்மை மட்டுமே சரி காண்பவர்களாக வைத்திருப்பதற்கு முஸ்லிம் கட்சித் தலைவர்களும், தளபதிகளும், அரசியல் சிப்பாய்களும் கூட பழகியிருக்கின்றார்கள்.

இவ்வாறு மக்களை எல்லா அடிப்படைகளிலும் பிரித்துப் பிரித்து அரசியல் செய்வதால் அரசியல்வாதிகளும் தலைவர்களும் வளர்கின்றார்களே அன்றி, மக்களுக்கு ஆன பயன் ஒன்றும் கிடையாது என்ற உள்மன உணர்வு ஏற்படத் தொடங்கி நெடுங்காலமாயிற்று. நாம் மேலே குறிப்பிட்டது போல, எவ்வாறு உலக சரித்திரத்தில் பிரித்தாளும் தந்திரம் அதை ஆள்பவர்களுக்கு இலாபத்தையும் ஆளப்படுபவர்களுக்கு இழப்புக்களையும் தந்ததோ அதுபோலவே முஸ்லிம்களின் அரசியலிலும் பாதிப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அரசியல்வாதிகள் இலாபமடைந்திருக்கின்றார்கள், வளர்ந்திருக்கின்றார்கள், பணம் உழைத்திருக்கின்றார்கள். மக்கள் இன்னும் வாக்களிக்கும் இயந்திரங்களாகவே இருக்கின்றார்கள்.

வரலாற்று படிப்பினை

இவ்வாறு மக்களைப் பிரித்து பிரித்து அரசியல் செய்வதற்காக வேறு வேறு கூடாரங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பதாலும், அவர்களிடையே ஒற்றுமை இல்லை என்ற காரணத்தினாலும் அவர்களை அரசாங்கங்கள் பிரித்தாளுவதனாலும், இலங்கை முஸ்லிம்களின் சமூக, அரசியல், பொருளாதாரத்தில் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை. காணிப் பிரச்சினை தொடக்கம், இனவாத ஒடுக்குமுறை வரை எந்தவொரு சிறிய – பெரிய விடயத்திலும் ஒரு அங்குலம் கூட முன்னேறவும் முடியவில்லை.
பெரும்பான்மைக் கட்சிகள் எதுவுமே ஒருக்காலும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளை தங்கத் தட்டில் வைத்து நீட்டப் போவதில்லை. இதற்கு தமிழர் விடுதலைப் போராட்டம் நமக்கு முன்னுள்ள உதாரணமாகும். ‘தனித்தனியாக அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் தம்மால் எதையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாமல் போய்விட்டது. எனவே மக்களது அபிலாஷைகளை நிவர்த்தி செய்து வைப்பதற்காகவே பல முரண்பாடுகளைக் கொண்டிருந்த ஆயுத, அரசியல் அமைப்புக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பாக ஒன்றுசேர்ந்ததாக’ கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சும்பந்தன் அண்மையில் கூறியுள்ளார். இது முஸ்லிம்களுக்கு ஒரு படிப்பினையாகும். எனவே, இப் பின்னணியில் முஸ்லிம் கட்சிகள் அரசியல்வாதிகளுக்கு இடையிலும் ஒரு கூட்டமைப்பு உருவாக வேண்டியதன் அவசியம் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது.
நடைமுறைச் சாத்தியவளம்

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பு அல்லது முஸ்லிம் கூட்டமைப்பு எனும் போது அது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து உருவாகுவதே ஒப்பீட்டளவில் இலகுவானதாக அமையும். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாக வைத்து அரசியல் செய்யும் மக்கள் பிரதிநிதிகளே தனித்துவ அரசியலில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருக்கின்றனர். தனித்துவ அரசியலை அறிமுகப்படுத்திய அஷ்ரஃப் காலத்து முஸ்லிம் காங்கிரஸின் பாசறையில் வளர்ந்தவர்களாகவும் உள்ளனர்.

இவ்விரு மாகாணத்திற்கும் வெளியில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் முஸ்லிம்களுக்கான தனித்துவ அடையாள அரசியலின் வழிவந்தவர்கள் அல்லர். இன்னும் சொல்லப்போனால், அநேகர் பெருந்தேசியக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி போன்றவற்றின் கீழ் அரசியல் செய்பவர்கள் மட்டுமன்றி, கணிசமான சிங்கள மக்களின் வாக்குகளையும் நம்பி இருக்கின்றவர்கள். எனவே நாடு இன்றிருக்கின்ற நிலைமையில், தென்னிலங்கை முஸ்லிம் அரசியல்வாதிகளையும் உடனடியாக முஸ்லிம் கூட்டமைப்பின் செயற்படு உறுப்பினர்களாக உள்வாங்குவது நடைமுறைச் சாத்தியமற்றதாகவே தோன்றுகின்றது.
வட மாகாணத்தைப் போலன்றி கிழக்கில் முஸ்லிம்கள் சரிக்கு சமமாகவும் செறிவாகவும் வாழ்கின்றனர். ஓரளவுக்கு அரசியல் பலமும் தக்கவைக்கப்பட்டுள்ளது. எனவே கிழக்கில் இருந்து வடக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளையும் இணைத்துக் கொண்டு ஒரு முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவது பற்றி இப்போது கருத்துக்கள் முன்வைக்கப்படுகி;ன்றன. அதற்கு இன்னுமொரு ஏதுவான காரணியாக கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தையும் குறிப்பிட முடியும்.

தலைமைத்துவ இடைவெளி

இக் கட்டுரையில் குறிப்பிடப்படும் அரசியல் தலைமைத்துவம் என்பது கிட்டத்தட்ட முக்கால்வாசியான கிழக்கு முஸ்லிம்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு தலைமைத்துவம் என்பதாக கருதப்பட வேண்டும். அந்த வகையில், கிழக்கு முஸ்லிம்களின் பிற்கால அரசியல் தலைமைத்துவங்களில் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் முதன்மையானவர். அதற்கு முன் பின்னான அரசியல் தலைவர்களை அளவீடு செய்வதற்கான ஒரு அளவுகோலாக அவர் இருக்கின்றார். இந்த மக்களுக்கு அவர் என்றுமில்லாத சிறந்ததொரு தலைமைத்துவத்தை வழங்கியிருந்தார். அவரது இறப்பிற்குப் பின்னர் அந்த இடைவெளியை எந்த அரசியல்வாதிhயாலும் சரியாக நிரப்ப முடியவில்லை என்பதே உண்மையாகும்.

குறிப்பாக, மு.கா. கட்சி இன்னும் மக்கள் மனங்களில் வேரூன்றி இருந்தாலும் அதனது இன்றைய தலைமைத்துவம் மீதான அதிருப்தி நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. தலைவருக்கு துதி பாடுகின்றவர்களும் கூட ரகசியமாக அவரை விமர்சிக்குமளவுக்கு நிலைமைகள் உள்ளன. கிழக்கில் அஷ்ரஃப் கொண்டிருந்த வகிபாகத்தை, அதன்பின்னர் ஹக்கீம் சரியாக நிரப்பவில்லை என்பதே, அண்மைக்காலத்தில் கிழக்கில் உருவாகியிருக்கின்ற கிளர்;ச்சிகள், புதுஅணிகள், பிளவுகளுக்கு அடிப்படைக் காரணம் என்றும் சொல்லலாம்.

எனவே, மு.கா. தலைவர் இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருப்பதாலும் அந்தக் கட்சியின் ஏனைய அரசியல்வாதிகள் மற்றும் கிழக்கில் உள்ள ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகள் பொதுவாக தத்தமது சொந்த அரசியலில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருப்பதாலும், மக்களுக்கு ஒரு பிரச்சினை என்று வருகின்ற போது, மக்களை தலைமை தாங்குவதற்கும், சிதறிக்கிடக்கின்ற சின்னச்சின்ன அரசியல்வாதிகளை தனக்குப் பின்னே ஒன்றுதிரட்டுவதற்கும் தகுதியுள்ள ஒரு தலைமைத்துவம் கிழக்கில் இல்லை என்ற எண்ணம் முஸ்லிம் சமூக சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்களிடையே வலுவடைந்து வருகின்றது.

இந்த களநிலைமைய ஏதுவாகப் பயன்படுத்தி கிழக்கை மையமாகக் கொண்டதாகவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகளை ஒன்றாக இணைத்து ஒரு முஸ்லிம் கூட்டமைப்பு அல்லது அதற்கு இணையான ஒரு முன்னணியை உருவாக்குவது பற்றிய மந்திராலோசனைகள், கருத்துப் பரிமாற்றங்கள் இப்போது இடம்பெற்று வருகின்றன. வடக்கு,கிழக்கின் அரசியல்வாதிகளைஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கான இப் பணியில் பல சிவில் அமைப்புக்களும், சமூகநலன் விரும்பிகளும் முன்னரை விட சற்று உத்வேகமாக தொழிற்பட்டுக் கொண்டிருப்பதை அறிய முடிகின்றது.

நல்ல சமிக்கை

வடக்கு, கிழக்கில் பிறந்த அல்லது அரசியல் செய்கின்ற அரசியல்வாதிகளை ஒன்றாக ஒரு மேடையில் அமர வைப்பது சாத்தியமில்லை என்றே பேசப்பட்டு வந்தது. ஆனால் அதற்கான சாத்தியங்களும் களநிலைமைகளும் மாறி வருகின்றன. அந்த அடிப்படையில், அண்மையில் அம்பாறை மாவட்டம் இறக்காமம் பிரதேசத்தில் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை கிழக்கு மக்கள் அவையம் ஏற்பாடு செய்திருந்த போது, அதில் தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, மு.கா.வின் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசன்அலி, அக்கட்சியின் முன்னாள் தவிசாளர் பசீர் சேகுதாவூத், மக்கள் காங்கிரஸை சேர்ந்த பிரதியமைச்சர்; அமீர்அலி, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் என பலர் வந்திருந்தனர். எனவே, பிரித்தாளும் உத்தியின் அடிப்படையில் துருவப்பட்டுப் போயுள்ள வடக்கு, கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதிகள் திருமண வீடுகளில் மட்டுமன்றி இதுபோன்ற நிகழ்வுகளிலும் சந்தித்துக் கொள்ள முடியுமாக இருந்தால், ஏன் மக்கள் நலனைக் கருத்தி;ற் கொண்டு கூட்டமைப்பாக அணிதிரள முடியாது?

முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பு என்று பேசப்படுகின்ற போதெல்லாம், இது முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கான சதி என்று கிணற்றுத்தவளை போன்ற சிலர் கூறுவதுண்டு. சிறுபிள்ளைத்தனமான இக்கருத்துக்களை கவனத்திற் எடுக்கத் தேவையில்லை. ஏனெனில் மு.கா.வை அழிப்பதற்கு வெளியில் இருந்து யாரும் திட்டம் தீட்டத் தேவையில்லை. கட்சியின் எம்.பி.க்களின் எண்ணிக்கையை குறைத்து, மக்கள் செல்வாக்கை குறைத்து, ஊழலும் மோசடியும் இன்னும் பல வெட்கக் கேடான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படும் நிலைக்கு கட்சியை இட்டுச் சென்று கொண்டிருப்பவர்களில் பலர் கட்சிக்கு வெளியில் இருப்பவர்கள் அல்லர்.

முஸ்லிம் கூட்டமைப்புக்காக ஒன்றுசேர்வார்கள் என்று பேசப்படுகின்ற றிசாட் பதியுதீன், அதாவுல்லா, ஹசன்அலி, பசீர் போன்றவர்கள் மு.கா. தலைவருக்கு எதிரானவர்களாக இருப்பதால் இது மு.கா.வுக்கு எதிரான கூட்டு மாதிரி தெரியலாம். இவ்வாறு ஒரு கூட்டணி கிழக்கில் உருவாகினால் தமக்கு பெரும் சவாலாகிவிடும் என்று பயந்து கொண்டிருக்கின்ற மு.கா. தலைவர் ஹக்கீமுக்கு சார்பான அணியினர் கிளப்பிவிட்டுள்ள ஒரு பிரசாரமாகவும் இது அமையக்கூடும்.

ஆனால் உண்மையான முஸ்லிம் கூட்டமைப்பு என்பது மு.கா. என்ற கட்சிக்கு எதிரானதாக இருக்க முடியாது. மாறாக முஸ்லிம் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் உள்ளடங்கலாக எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளையும் உள்ளடக்கியதாகவே இருக்க வேண்டும். அப்படியென்றாலேயே அது முழுமை பெறும். கிழக்கில் அரசியல் செய்கின்ற பிரதான முஸ்லிம் கட்சியை புறந்தள்ளிவிட்டு ஒரு தேசியக் கூட்டமைப்பை உருவாக்கவும் கூடாது என்ற நிலைப்பாடே இதுவரை இருந்தது.

ஆனால், மு.கா.வின் ஒரு சில உறுப்பினர்கள் கூட்டமைப்பை உருவாக்குவதில் விருப்பம் கொண்டுள்ளனர். ஆயினும் அக்கட்சியின் தலைவர் றவூப் ஹக்கீம் முஸ்லிம் கூட்டமைப்புக்கு சார்பான கருத்து எதனையும் இதுவரை பகிரங்கமாக வெளியிடவில்லை. அக்கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் சொன்னது போல சிங்கள மக்களின் வாக்குகளையும் நம்பி இருப்பவர் மு.கா. தலைவர். எனவே, அவர் முஸ்லிம் கூட்டமைப்பில் இணைந்து கொண்டால் சிக்கல்கள் உருவாகலாம் என்பது போன்ற பல நியாயங்களும் அவரிடம் இருக்கலாம்.

எது எவ்வாறிருப்பினும், மு.கா. தலைவர் இதற்கு முன்வரவில்லை என்பதற்காக கிழக்கை மையமாகக் கொண்டு ஒரு முஸ்லிம் கூட்டமைப்பை உருவாக்குவதற்கான காலத்தை இன்னும் பிற்போட முடியாது. அந்த வகையிலேயே, றிசாட், ஹசன்அலி, பசீர், அதாவுல்லா உள்ளிட்ட பலரிடையே ரகசியப் பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாக அறியமுடிகின்றது. இந்தப் பின்னணியிலேயே இறக்காமம் கூட்டத்தில் இதில் பலர் ஒன்றாக கலந்து கொண்டுள்ளனர். இதனை ஒரு நல்ல ஆரம்ப சமிக்கையாக எடுத்துக் கொண்டு கூட்டமைப்பை நிறுவவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.

முஸ்லிம்களிற்கு ஒரு அடையாளத்தை வழங்கிய தாய்க் கட்சி என்ற அடிப்படையில் மு.கா.வை காப்பாற்ற வேண்டிய தேவை வடக்கு, கிழக்கில் உள்ள ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்கின்றது. ஆனால், பதவிகளில் இருந்து கொண்டு தொடர்ந்து மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை காப்பாற்ற வேண்டிய தேவை மக்களுக்கு கிடையாது என்பதை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். இந்நிலையில், தேர்தல் நெருங்கி வரும் காலத்தில் மக்கள் காங்கிரஸூம் தேசிய காங்கிரஸூம் தமக்கிடையேயுள்ள பிராந்திய அதிகார பனிப்போர்களை கைவிட்டு ஓரணியில் திரள்கின்ற சமகாலத்தில் ஹசன்அலி, பசீர் சேகுதாவூத் உள்ளிட்ட வேறு பலரும் சேர்ந்து ஒரு கூட்டமைப்பாக உருவெடுக்கின்ற போது அது ஒரு பலமிக்க சக்தியாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இதனால் மு.கா.வுக்கு சவால் ஏற்படலாமே தவிர கட்சி அழிந்து விடும் என்று கூறுவது முட்டாள்தனமானது. அது பயம் கலந்த இயலாமையின் வெளிப்பாடாகவும் நோக்கப்படலாம். உண்மையில் மு.கா. கட்சி மக்களுக்காக செயற்பட்டால் அது மக்களால் நேசிக்கப்படுவதுடன் புதிய கூட்டமைப்பை மக்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். இது தலைகீழாக நடந்தால், அதாவது மு.கா. இன்னுமின்னும் தனது செயற்பாடுகளை திருத்திக் கொள்ளாமல் இருந்து, அப்பணியையும்; கிழக்கு மக்களுக்கு தலைமை தாங்கும் வகிபாகத்தையும் கூட்டமைப்பு செய்யுமாக இருந்தால் கூட்டமைப்புக்கு ஆதரவு அதிகரிக்கும் என்பதே யதார்த்தமாகும்.

எனவே, நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அவல நிலை, முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றுபடாமையால் ஏற்பட்டுள்ள இழப்புக்கள், கிழக்கில் ஏற்பட்டிருக்கும் தலைமைத்துவ வெற்றிடம், மக்கள்சார்பு அரசியலின் பின்னடைவு, மாமூல் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு என்பவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு, தங்களது சுய இலாபங்களுக்காக அல்லாமல் மக்களின் விடிவுக்கான சக்தியாக முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக வேண்டும்.

கிழக்கை மையமாகக் கொண்டும் வடக்கு,கிழக்கு அரசியல்வாதிகளின் பங்குபற்றுதலோடும் நிறுவப்படும் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கில் தனது கால்களை உறுதியாக ஊன்றிக் கொண்டு, அதற்கு வெளியிலுள்ள முஸ்லிம்களின் அபிலாஷைகளையும் நிவர்த்தி செய்வதற்காக பாடுபட வேண்டும் என்பதே சமூகநலன் பற்றி தூரநோக்காக சிந்திப்போரின் பெருவிருப்பாக இருக்கின்றது.
நல்லெண்ணமென்றால்…. அது வெற்றியளிக்கும்.

• ஏ.எல்.நிப்றாஸ் (வீரகேசரி 04.06.2017)