சவுதி உடனான பல பில்லியன் டொலர் மதிப்புள்ள ஒப்பந்தங்களுடன் அமெரிக்கா அதிபர்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் வெளிநாட்டு பயணம் ரியாத்திலிருந்து தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்கா – செளதி அரேபியா இடையே இன்று (சனிக்கிழமை) பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 

இன்று (சனிக்கிழமை) காலை உள்ளூர் நேரப்படி, செளதி தலைநகரில் மன்னர் சல்மான், அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை வரவேற்றார். 

அதிபர் டிரம்பின் 8 நாள் பயணத்தில் இஸ்ரேல், பாலத்தீன பிராந்தியங்கள், பிரஸ்ஸல்ஸ், வத்திக்கான் மற்றும் சிஸிலி ஆகிய இடங்கள் இடம்பெறுகின்றன. 

அமெரிக்காவில் எஃப் பி ஐ இயக்குநர் ஜேம்ஸ் கோமியை அதிபர் பதவிநீக்கம் செய்ததை தொடர்ந்து அவர் எதிர்ப்புகளை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பதை கண்டறியும் விசாரணை குழுவிற்கு சிறப்பு வழக்கறிஞர் ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு டொனால்ட் டிரம்ப் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருந்தார். 

சம்பளமின்றி வெள்ளை மாளிகையில் ஆலோசகராக பணியாற்றும் டிரம்பின் மகள் இவான்கா இந்த பயணத்தில் டிரம்புடன் வருகை புரிந்துள்ளார். மேலும், டிரம்பின் அமைச்சரவையில் முக்கிய அங்கம் வகிக்கும் இவான்காவின் கணவரான ஜேரட் குஷ்னரும் இந்த பயணத்தில் இடம்பெற்றுள்ளார். 

செளதி அரேபியாவுக்கு சமீபத்தில் வருகை புரிந்த பிரிட்டன் பிரதமர் தெரீஸா மே மற்றும் ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல் ஆகியோரை போன்று மெலனியாவும், இவான்காவும் தலையைமறைக்கும் துணியை அணியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

2015 ஆம் ஆண்டு ஜனவரியில், அமெரிக்காவின் முதல் பெண்மணியாக இருந்த மிஷெல் ஒபாமா செளதி சென்ற போது தலையை மறைக்கும் துணியை அணியவில்லை என்பதற்காக டிரம்ப் அவரை விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி -BBC