முகமாலை சம்பவம் -தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நாங்கள் கருதக் கூடாது: பொன்சேகா

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினர் நாளைய தினம் தனியாக படை வீரர்களை நினைவுகூர மேற்கொண்டுள்ள நடவடிக்கை அருவருக்கத்தக்க நடவடிக்கை என முன்னாள் இராணுவ தளபதியான அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் ஒரு தேசிய நிகழ்வை ஏற்பாடு செய்திருக்கும் நிலையில், அவர்கள் தனியாக நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளனர்.

இது மகிந்த ராஜபக்ச தமது ஆட்சிக்காலத்தில் எம்மையும் இராணுவத்தினரையும் பழிவாங்கி சிறையில் அடைத்ததை நினைவுகூர ஏற்பாடு செய்துள்ள நிகழ்வாக இருக்கலாம். அதேவேளை இனப்படுகொலை வாரத்தை அனுஷ்டிக்க போவதாக கூறி ஜனாதிபதியை வடக்கு வரவேண்டாம் என சிவாஜிலிங்கம் கூறியமையானது கள்ளு அருந்திய ஒருவர் பூனையை பிடித்து தரையில் அடித்த கதை போன்றது.

சிவாஜிலிங்கத்திற்கு செவி கொடுக்கக் கூடிய மக்கள் வடக்கில் இல்லை. அவர் அனாதையான நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதி.இதனால், அவர் கூறும் கதைகளால் தேசிய பாதுகாப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை.எவரும் இறந்து போன தமது உறவினர்களை விளக்கேற்றி, ஆலயத்திற்கு சென்று வழிபட்டு நினைவுகூரலாம். அதற்கு உரிமை உள்ளது.

ஒரு கொலைக்காரன், பயங்கரவாதி, கொடியன் இறந்தால், அவர்களின் உறவினர்களுக்கு அவர்களை நினைவுகூர உரிமையுள்ளது. இப்படியான விடயங்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், முகமாலை பிரதேசத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கி பிரயோக சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட சரத் பொன்சேகா,

பொலிஸ் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்த சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்னர் பிலியந்தலையிலும் நடந்தது.அதற்கு முன்னர் களுத்துறையில் சிறைச்சாலை பேருந்து மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.இவற்றை செய்யும் குழுக்கள் நாட்டில் எந்த பகுதியிலும் இருக்கலாம். யாழ்ப்பாணத்திலும் எமக்கு தெரிந்த வகையில் ரௌடி குழுக்கள் உள்ளன. அவர்களை பிடித்து அடக்கி, தண்டிக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. பாதாள உலக குழுக்கள், ரௌடி குழுக்கள் மேற்கொள்ளும் இப்படியான சட்டவிரோத நடவடிக்கைகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என நாங்கள் கருதக் கூடாது எனவும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.