அண்மைக்காலமாக நாட்டில் இனவாதம் பரப்பும் நடவடிக்கைகளில் அதி தீவிரமாக ஈடுபட்டிருந்த பொதுபல சேனா அமைப்பானது சிலகாலம் அமைதியானது.
இதன் தலைவர் ஞானசார தேரருக்கு எதிராகவும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக அமைதியாக இருந்த அவர் மீண்டும் தனது அடாவடித் தனத்தையும், இனவாதத்தையும் வெளிக்காட்ட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இன்றைய தினம் அமைச்சர் மனோகணேசனைச் சந்திப்பதற்காக அவருடைய அலுவலகத்திற்கு ஞானசார தேரர் உட்பட பிக்குமார்கள் சிலரும் சென்றிருந்தனர்.
அவர் சென்ற வேளை அமைச்சர் அலுவலகத்தில் இல்லாதமையினால் ஞானசார தேரர் கடுமையான கோபம் அடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்களுடன் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இதன்போது “நாட்டின் பிரதமரையும், ஜனாதிபதியையும் கூட நாங்கள் விமர்சனம் செய்கின்றோம். ஆனால் அவர்களைச் சந்திக்க எமக்கு நேரம் ஒதுக்கப்படுகின்றது”
“ஆனால் இவர் யார், எம்மை புறக்கணிக்கதற்கு உடனடியாக வரச்சொல்லுங்கள் என கடுமையான தொணியில் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பிக்கு ஒருவரும் “வருகின்றாரா இல்லையா எனக் கேளுங்கள் இல்லையேன், அலுவலகத்தை முற்றுகையிடுவோம் எனக் கூறுங்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக அமைச்சரின் அலுவலகத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிக்குகள் குழு அதிகாரப்போக்கினையும் அங்கு மேற்கொண்டுள்ளனர்.