உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும் படைத்தவன் இறைவன். கண்ணுக்கு தெரியாத உயிரினம் முதல் உருவத்தில் மிகப்பெரிய உயிரினங்கள் வரை பல்வேறு வகையான அமைப்பில் உயிரினங்களை இறைவன் படைத்துள்ளான். ஆனால் இறைவனின் படைப்பில் மிகவும் அற்புதமானது மனிதன். வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத பல்வேறு சிறப்புகளுடன் மனிதனை இறைவன் படைத்துள்ளான். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘அத்தியின் மீதும், ஜெய்த்தூனின் மீதும் சத்தியமாக, தூர்ஸினாய் மலைத்தொடரின் மீதும் சத்தியமாக, அபயமளிக்கும் இந்த நகரத்தின் மீதும் சத்தியமாக, நிச்சயமாக நாம் மனிதனை மிக்க அழகிய அமைப்பில் படைத்திருக்கிறோம்’ (திருக்குர்ஆன் 95:1-4)
அருள்மறையாம் திருக்குர்ஆனில் அல்லாஹ் தனது கட்டளை களைச் சொல்லும் போது சிலவற்றை மிக அழுத்தமாக சொல்ல நினைத்தால், சிலவற்றின் மீது சத்தியம் செய்து சொல்வதுண்டு. அப்படிப்பட்ட செய்திகளில் மிகுந்த உண்மைத்தன்மையும், பல அத்தாட்சிகளும் இடம் பெற்றிருக்கும்.
அப்படிப்பட்ட ஒரு செய்தியாகத் தான் மனித படைப்பை பற்றி ஏக இறைவன் குறிப்பிடுகின்றான். ‘மனிதனை அழகிய அமைப்பில் படைத்திருக்கின்றோம்’ என்று சொல்வதிலும் கூட ஒரு மறை பொருளை வைத்துச் சொல்கிறான்.
‘அழகு’ என்பது கண்ணோட்டங்களைப் பொருத்தது. ஒருவருக்கு அழகாய்த் தெரிவது, பிறருக்கு பிடிக்காமல் போகலாம். நிறங்களில், தோற்றங்களில், வடிவமைப்புகளில் அழகுணர்ச்சி வேறுபட்டு நிற்கலாம். அதில் உண்மையும் இருக்கலாம்.
இந்த வசனத்தில் ‘அழகிய அமைப்பில்’ என்ற சொல்லாடல் கையாளப்பட்டிருப்பதால் அழகையும் அமைப்பையும் இரண்டையும் சேர்த்தே அல்லாஹ் குறிப்பிடுகின்றான். மனிதன் அழகானவன், அழகிய வடிவத்தில் படைக்கப்பட்டிருப்பவன். உச்சந்தலை முதல் உள்ளங்கால்கள் வரை உள்ள உடல் உறுப்புகள் அனைத்தும் மனிதனுக்கு பயன்படும் வகையில் இறைவன் அமைத்திருக்கின்றான். வெளி உறுப்புகள், உள் உறுப்புகள் என்று எத்தனையோ உடல் உறுப்புகள் அற்புத படைப்பாய் அமைந்து மனித வாழ்க்கைக்கு உதவுகிறது.
சிரிப்பு, அழுகை, துக்கம், மகிழ்ச்சி, கோபம், அமைதி, என்று உருவமில்லா எத்தனை உணர்ச்சிகள். ஒன்றோடொன்று வேறுபட்ட தன்மை கொண்டாலும் குறிப்பிட்ட நிகழ்வுகளில் சரியான காலகட்டத்தில் அவை தன்னையறியாமல் வெளிப்படும் தன்மையை அளித்திருக்கிறான் ஏக இறைவன். இதோ தனது படைப்பு குறித்து திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்:
“உங்கள் தாய்மார்களின் வயிற்றில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களைப் படைக்கின்றான். அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன்” (39:6).
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக மனிதனின் முதலும் முடிவும் பற்றிய அறியாத அந்த கால சூழ்நிலையில் கருவறைத் தத்துவத்தை சொன்னது திருக்குர்ஆன். இன்று விஞ்ஞானம் மெய்ப்பிக்கின்ற அறிவியல் செய்தியை அன்றே அறிவித்தது திருக்குர்ஆன்.
மனிதன் விலை மதிப்பற்றவன் மட்டுமல்ல. அவன் தனித்தவனும் கூட. இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரும் ஒரு விஷயத்தில் தனித்தன்மை கொண்டவர்களாகவே படைக்கப்படுகிறார்கள். எல்லா வகைகளிலும் ஒத்து போகின்ற இரட்டை பிறவிகளும் இந்த ஒரு விஷயத்தில் வேறுபட்டு நிற்பர். அதுதான் மிக அற்புதமான விரல் ரேகைகள்.
உலகம் தோன்றிய காலம் தொட்டு இன்று வரை எண்ணிலடங்கா மனித உயிரினங்கள் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒருவருக்கு கூட கைரேகை ஒன்றாய் அமையவில்லை. இதன் மூலம் அல்லாஹ்வின் படைப்பாற்றல் எவ்வளவு நுணுக்கமானது என்பதை அறிந்துகொள்ளலாம்.
இதையே திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:
“ஆம்! அவனுடைய விரலின் நுனியைக் கூட மிக துல்லியமாக அமைப்பதற்கு நாம் ஆற்றல் பெற்றுள்ளோம்” (75:4).
ஜனன மரணங்கள் எத்தனை நிகழ்ந்தாலும் இந்த நிகழ்விற்கு முடிவு இருக்காது. அதுமட்டுமல்ல மனிதனின் தனித்தன்மையை நிரூபிக்க இன்றைய அறிவியல் ரேகையையும், மரபணுக்களின் தொகுப்பையும் மட்டுமே நம்பியுள்ளது.
மனிதன் மரணம் அடையக்கூடியவன் தான். இருந்தும் மறுமை நாளில் அவன் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவான். அப்போது அவனது நன்மைகள், தீமைகளுக்கு ஏற்ப அவனுக்கு சொர்க்கம் அல்லது நரகம் பரிசாக வழங்கப்படும்.
‘இறந்த பிறகு அடக்கம் செய்யப்படும் மனித உடல் சில மாதங்களில் மண்ணோடு மண்ணாக மட்கிப்போகும். அப்படிப்பட்ட மனிதன் மீண்டும் எப்படி உருவாக்கப்படுவான்’ என்ற கேள்வி ஆதி தொட்டு இன்றுவரை நிலைத்திருக்கின்ற ஒன்று. அருள்மறை திருக்குர்ஆன் இதற்கு இவ்வாறு பதிலுரைக்கின்றது:
“இறந்து, உக்கி மண்ணாய் போன அவனுடைய எலும்புகளை நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் என்று மனிதன் எண்ணிக்கொண்டிருக்கின்றானா?” (75:3).
அல்லாஹ்வின் தூதர் அருமை நாயகம் நபிகள் நாயகம் அவர்கள் சொன்னார்கள்:
“மனிதனின் உடலில் எலும்பு ஒன்று உள்ளது. அதை பூமி ஒருபோதும் புசிக்காது. அதை வைத்தே மீண்டும் மறுமையில் அவன் படைக்கப்படுவான்”.
அப்போது அருகில் இருந்த தோழர்கள் கேட்டனர் ‘அது எந்த எலும்பு என்று எங்களுக்கு விளக்கிச் சொல்ல முடியுமா?’
அதற்கு நபிகளார் பதில் அளிக்கும்போது, ‘உள்வால் எலும்பின் நுனி’ என்றார்கள். (முஸ்லிம்-5662)
ஜெர்மன் விஞ்ஞானி ஹான்ஸ் ஸ்பீமேன் என்பவர் உள்வால் எலும்பு நுனி குறித்து தீவிரமாக ஆராய்ந்தார். அதனை பல ஆயிரம் டிகிரி வெப்பத்தில் எரிக்கவும், வீரியம் மிக்க அமிலங்களின் கலவை கொண்டு அதனை கரைக்கவும் முயற்சி செய்தார். அதில் சிறு மாறுதலைக் கூட அவரால் செய்ய முடியவில்லை. ஆராய்ச்சியின் முடிவாய் திருக்குர்ஆன் வார்த்தைகளை உண்மைபடுத்தி உலகிற்கு அறிவித்தார்.
இப்படி எத்தனையோ அத்தாட்சிகளைக் கொண்டு அற்புத படைப்பாய் மனிதனை அல்லாஹ் படைத்திருக்கின்றான். சிந்தித்து பார்க்கும் மக்கள் அவனுக்கு சிரம் பணிய வேண்டாமா?
“இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும், உயிரினத்தில் இருந்து பரப்பி இருப்பதிலும் நம்பிக்கையில் உறுதியான சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன” (45:4) என்ற திருக்குர்ஆன் வசனம் முடிவான கருத்தையும் நம்முன்னே பதிவு செய்கிறது.
எனவே அத்தகைய சிறப்பு மிக்க படைப்பாக நம்மை உருவாக்கிய ஏக இறைவன் அல்லாஹ்வை வணங்கி, அவன் காட்டிய வழியில் நடந்து இம்மையிலும், மறுமையிலும் இறைவனின் திருப்பொருத்தத்தை பெற நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நம்மை படைத்த இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும்.