புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பின் ரஷியாவுடன் அமெரிக்கா நெருங்கிய நட்புறவுடன் உள்ளது. ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும் அடிக்கடி டெலிபோனில் பேசி உலக நடப்புகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அவர்கள் இருவரும் திடீரென டெலிபோனில் பேசிக் கொண்டனர். இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இரு தலைவர்களும் பேசும் போது மத்திய கிழக்கு நாடுகளில் தீவிரவாதத்தை ஒழிப்பது குறித்து ஆலோசித்தனர். நீண்ட நாட்களாக உள் நாட்டு போரினால் சிரியா அவதிப்பட்டு வருகிறது. மக்கள் சொல்லெண்ணா துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.
எனவே அந்த நாட்டில் நடைபெறும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இறுதியாக வடகொரியாவின் அணு ஆயுத சோதனை குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள கடும் ஆபத்து குறித்தும் இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.
வருகிற ஜூலை மாதம் ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. அப்போது இருவரும் நேரில் சந்தித்து விரிவான பேச்சு வார்த்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு அவருடன் ரஷிய அதிபர் புதின் இதுவரை 3 தடவை டெலிபோனில் பேசியுள்ளார்.