அமைச்சர் ஹக்கீம் செல்லுமிடமெல்லாம்,மக்கள் அவரை கேள்விகளால் துளைத்தெடுத்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் நேற்று இறக்காமம் சென்ற அமைச்சர் ஹக்கீமை நோக்கியும் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.இன்று இறக்காமத்திற்கு அமைச்சர் ஹக்கீம் வருகிறார் என்றவுடன் கட்சி பேதமின்றி இறக்காமத்து மக்கள் அனைவரும் மிகவும் அதிகமான எதிர்பார்ப்புகளுடன் வந்தனர்.
அமைச்சர் ஹக்கீமின் பேச்சில் அவர்கள் எதிர்பார்ப்புக்கள் அனைத்தும் தகர்ந்தன.எந்தவிதமான உறுதி மொழிகளையும் அவரால் வழங்க முடியவில்லை.எப்படி உறுதி மொழி வழங்குவார்? ஏற்கனவே பிரதமர் ரணிலுடன் பேசி அங்கு வைக்கப்பட்ட சிலை ஒரு வார காலத்தில் அகற்றப்படுமென கூறியிருந்தார்.இன்று வரை அதனை அகற்ற முடியவில்லை.இப்போது மீண்டும் பிரதமர் பெயரை பாவிக்காமல் ஜனாதிபதியின் நாமம் பாவிக்கப்படுகிறது.
இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னுமொரு விடயம் என்னவென்றால் இவ்விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தனையும் சம்மதப்படுத்தி மு.காவினர் செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.சம்பந்தனோ இதற்கும் தனக்கும் சம்பந்தம் இருப்பதாக எங்கும் பகிரங்கமாக கூறவுமில்லை குரல் கொடுக்கவுமில்லை.இதனை வைத்து சிந்திக்கும் போது சம்பந்தனின் பெயரும் ஹக்கீமால் அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.இதனை சம்பந்தன் பெரிய விடயமாக தூக்கி பிடித்திருந்தால் ஊடகவியலாளர் மாநாடுகளில் இவ்வரசை கிழித்து தள்ளி இருப்பார்.
குறிப்பாக அமைச்சர் ஹக்கீம் ஜனாதியுடனான பேச்சில் தனக்கு நம்பிக்கையுள்ளது போன்று குறிப்பிடுகிறார்.அதாவது இப் பிரச்சினை இத்தோடு தீர்ந்துவிடுமென உறுதியாக அவரால் கூற முடியவில்லை.ஒருவர் பொது பல சேனா முதலாம் அல்லது இரண்டாம் திகதி வரப்போவதாக கூறியுள்ளது.மக்கள் கொதித்து நிற்கின்றனர்.அவர்கள் வந்தால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும் என கூறுகிறார்.ஹக்கீமோ “அங்க ஒண்டும் கொதிப்படைய மாட்டார்கள்” என்ற அலட்சியப் பாணியில் பதில் வழங்குகிறார்.இங்கு அமைச்சர் ஹக்கீம் பொது பல சேனாவை வர விட மாட்டோம்,தடுப்போம் என்றல்லவா பதில் வழங்கியிருக்க வேண்டும்.இக் கூற்றானது அவர் இறக்காம மக்களை எவ்வாறு கணக்கு போட்டு வைத்துள்ளார் என்பதை அறிந்து கொள்ளச் செய்கிறது.
அமைச்சர் ஹக்கீமிடம் சிலை வைக்க பணம் வாங்கியதான கேள்விகளும் எழுப்பப்படுகின்றன.காலா காலாமாக மு.காவை ஆதரித்து வந்த இறக்காமத்து மக்களும் ஹக்கீம் கூறுவதை கேட்டுக்கொண்டிருக்காது கேள்வி எழுப்பும் மனோ நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமையானது அமைச்சர் ஹக்கீமின் அழிவிற்கான நாள் நெருங்கிவிட்டதை கூறிச் செல்கிறது.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.