நிஜ வாழ்க்கை


Mohamed Nizous

உயர்தரம் வரைக்கும்
ஒன்றாய்ப் படித்தோர்
நுங்கு தொடக்கம்
நூடில்ஸ் வரைக்கும்
பங்கு போட்டு
பழகித் திரிந்தவர்
அப்புறம் பிரிவார்
ஆளுக்கொரு திசை.

இரண்டு தசாப்தம்
விரண்டு ஓடும்.
நாற்பதைத் தாண்ட
ஞாபகம் தளிர் விடும்.
கூடப் படித்த
குட்டிகள் பொடியன்கள்
தேடிப் பார்க்க
நாடும் மனசு.
பள்ளி ஞாபகம்
பனியாய்க் கொட்ட
ஒவ்வொரு ஆளும்
எவ்வாறு இருக்கிறார்
விசாரிக்கும் போது
விசனமே மிஞ்சும்.

ஒருத்தன் பெரிய
வருத்தத்தில் என்பார்.
இன்னொரு நண்பன்
இன்னாலில்லாஹி.
யாவாரத்தில் சிலபேர்
இருக்கிறார் பிஸியாய்
நாலஞ்சு பேரு
வேலைல இருக்கான்.
பிஞ்ச ட்ரவுசருடன்
பஞ்சத்தில் படித்தவன்
இறைவன் உதவியால்
நிறைவாய் இருக்கான்.
அள்ளாwho என 
அலட்சியமாய் கேட்டவன்
பள்ளியும் கையுமாய்
பக்தியாய் இருக்கான்.
கெட்டிக் காரன் என
பட்டப் பேர் பெற்றவன்
விதியில் விழுந்து
விக்கித்து நிற்கிறான்.
அழகி என்று
அழைக்கப் பட்டவள்
உலகை விட்டே
ஒடிப் போய் விட்டாள்.
மெல்லிடையாள் என
சொல்லப் பட்டவள்
ஊதிப் பெருத்து
உரல் போல் ஆனாள்.
நரையுடன் சிலபேர்
திரையுடன் சிலபேர்
இரண்டு தசாப்தம்
விரண்டு ஓடி
வாழ்க்கையைப் புரட்டி
வைக்கும் பாடமாய்.

இதுதான் வாழ்க்கை
இதுதான் நிஜம்
இப்போது படிப்போர்
இதனை உணர்ந்தால்
தப்பான வழியில்
தாவிட மாட்டார்…!