அம்பாறை, இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலையடிவாரத்திலுள்ள காணிகளை இரண்டாவது தடவையாகவும் ஆக்கிரமிக்கும் முயற்சியை நேற்று வியாழக்கிழமை பௌத்த பிக்குகள் மேற்கொண்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்னர் அப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றை நிறுவியிருந்த நிலையில் நேற்றைய தினம் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கு பௌத்த பிக்குகளும் மேலும் சிலரும் முயற்சிகளை மேற்கொண்டனர்.
எனினும் ஸ்தலத்திற்கு விரைந்த இறக்காமம் பிரதேச மக்கள் மேற்படி விகாரை அமைக்கும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்ததுடன் பொலிஸாரின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.இச் சம்பவம் காரணமாக இப்பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. இதனையடுத்து பொலிஸார் தலையீடு செய்து விகாரை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தினர்.
செவ்வாய்க்கிழமை மாலை இம் மலையடிவாரத்திற்குச் செல்வதற்கான வீதியையும் விகாரை அமைப்பதற்கான காணியினையும் கனரக வாகனங்கள் மூலமாக பௌத்த பிக்குகள் முன்னின்று செப்பனிட்டுள்ளனர். இது தொடர்பில் காணிச் சொந்தக்காரர் ஒருவர் தமண பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இந்நிலையிலேயே நேற்று வியாழக்கிழமை காலை மலையடிவாரத்தில் விகாரை நிர்மாணப் பணிகளை பிக்குகள் முன்னெடுத்துள்ளனர். இதனையடுத்து பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டதற்கிணங்க, உடனடியாக பிரதேச மக்கள் மாயக்கல்வி மலையடிவாரத்திற்கு சென்று பௌத்த தேரர்களிடம் தமது ஆட்சேபனையை முன்வைத்தனர்.
இந் நிலையிலேயே அம்பாறை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, தமண பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹர்ஷ சில்வா ஆகியோர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.அதன் பின்னர் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் அனைவரும் இறக்காமம் பிரதேச செயலாளர் காரியாலயம் சென்று செயலாளர் எம்.எம். நஸீரைச் சந்தித்து நடந்த விடயங்களை எடுத்துக் கூறினர்.
இதேவேளை, விடயம் அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன், இறக்காமம் பிரதேச அபிவிருத்திக் குழு தலைவர் எஸ்.ஐ. மன்சூர், சுகாதார அமைச்சினது இணைப்புச் செயலாளர் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர், முன்னாள் பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ. நைஷார், சட்டத்தரணி பாறூக் ஆகியோர் ஸ்தலத்திற்கு வருகை தந்து தமது பிரதேச மக்களின் எதிர்ப்பினை பௌத்த பிக்குகளிடம் முன்வைத்தனர்.
இவ்வேளையில் வருகை தந்த தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் தொல்பொருள் பிரதேச எல்லைக்கு வெளியே தனியார் காணியில் நிர்மாணப் பணிகள் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தனர். எனினும் இதற்குரிய எல்லையை சீரான முறையில் வரையறை செய்யும் முகமாக இறக்காமம் பிரதேச செயலாளரை ஸ்தலத்தில் நின்ற அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல அழைத்தபோது பிரதேச செயலாளர் வருகை தர மறுத்துவிட்டார்.
இதனையடுத்து நீதிமன்றத்தின் மூலம் சமரச முடிவுக்கு வரும்வரை சகல நிர்மாணப் பணிகளையும் நிறுத்துமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பௌத்த பிக்குகளை கேட்டுக் கொண்டார். இதனையடுத்து அங்கு சுமுக நிலை ஏற்பட்டது.
Vidivelli