ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா தொடர்பாக அதிகமான குற்றச்சாட்டுகள் மற்றும் புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கர் வீட்டில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர்.
சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் அவருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் பங்களா, கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி நெடுச்சாலையையொட்டி உள்ள கெங்கு ரெட்டி தெருவில் இருக்கும் அமைச்சரின் சகோதரி வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று காலை 6 மணி அளவில் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புகுந்து சோதனை நடத்தினர்.
இந்நிலையில், திருவல்லிக்கேணியில் உள்ள விஜயபாஸ்கர் உதவியாளர் நைனார் வீட்டில் இருந்து ரூ.2.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வருவான வரித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.