கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அப்துல் றசாக் (ஜவாத்) எனது நல்ல நண்பன். அவர் உள்ளதை உள்ளபடி பேசக் கூடியவர்.ஆனாலும் முட்டாள் தினத்தின் முன்; பின் திகதிகளில் அவர் பேசிய பேச்சுகள் பல போராளிகளின் மனங்களைப் புண்படுத்தியுள்ளன.
தலைவர் அஷ்ரஃப் தீகவாப்பியில் மலர்தட்டு வைத்துக் கும்பிட்டார்.
ஜூம்ஆ தொழாமல் இருந்து விட்டார். நானும் தான் கூட இருந்த என்றெல்லாம் பேசினார்.
நேற்றும் ஒரு கூட்டத்தில் பேசினேன். இதைப் பேசக் கூடாதுதான் என்று தடுமாற்றத்துடன் பேசினார். அவருடைய அந்தத் தடுமாற்றம் அவரது நெஞ்சில் ஈட்டிபாய்ந்ததைக் காட்டி நின்றது.
மு.கா.தலைவர் றஊப் ஹக்கீம் ஜவாதின் பேச்சை இமை கொட்டாது ரசணையுடன் ரசித்துக் கொண்டிருந்தார்.
புகார்தீன் ஹாஜியாரிடம் பணிபுரிந்த ஒருவரை மர்ஹூம் குத்தூஸ் அவர்களின் மருமகனாக சம்பந்தம் பேசி, தேசிய பட்டியல் எம்.பியாக்கி, பாரளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக்கி, கட்சியின் செயலாளராக்கி அழகு பார்த்த, இன்று முஸ்லிம் சமூகத்தின் தலைவன் என்று மார்தட்டும் அளவுக்கு வழிகோலிய ஒரு தலைவனை தனது கண்முன்னே ஒருவர் பேசுவதையும் மரணித்துப் போனவரைப் பற்றிப் பேசுகிறாரே அதனைத் தடுத்து நிறுத்துவோம் என்ற எண்ணமில்லாமல் பல்லிழித்துப் பார்த்துக் கொண்டிருந்த ஹக்கீமின் தலைமைத்துவப் பண்பை என்னவென்று சொல்வது?
ஹக்கீமின் பாணியில் சேதாரமில்லாமல் ஜவாத் பேசினார் என்பார்.
எனக்குத் தெரிய தலைவர் அஷ்ரஃப் மேடை ஒன்றில் பிறிதொரு அரசியல்வாதியைப் பற்றி ஒருவர் தவறாகப் பேசும் போது அதனைத் தடுத்து நிறுத்தி பேசியவரை ஆசனத்தில் அமர வைத்தார். இதுதான் மனிதப் பண்பும் தலைமைத்துவமும்.
ஹக்கீம் ஹஸனலியை உயிரோடு இருக்கும் போது அழவைத்தார். மர்ஹூம் அஷ்ரஃபோடு நேசம் வைத்தவர்களை நன்றி கெட்டதனமாக புறந்தள்ளினார். இப்போது மறைந்த தலைவர் மீது மாசு கற்பிக்கும் நபர்களை ஹக்கீம் உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இப்போது நான் விடயத்துக்கு வருகின்றேன்.மர்ஹூம் அஷ்ரஃப் அவர்கள் மரணிக்கும் வரை அவரின் ஊடக இணைப்பதிகாரியாக பணியாற்றியவன் என்ற வகையில் இதைப் பதிவிடுகின்றேன்.
தலைவர் அஷ்ர.பினுடைய காலம் பௌத்த சிங்கள மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையே உறவுப் பாலமொன்று உருவாகியிருந்த காலம். 1977ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை அரசியலில் கோலோச்சிய முன்னாள் அமைச்சர் தயாரெத்னவினால் தீகவாப்பி பன்சலைக்கு ஒரு தொலைபேசியைக்கூடப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
அப்போது தீகவாப்பி பன்சலையில் மதகுருவாக நீண்ட காலமிருந்தவர் (புத்தரக்கித தேரர் என்று நினைக்கின்றேன்) அவர் ஒருநாள் மறைந்த தலைவரிடம் வந்து தனது நிலையை எடுத்துச் சொன்னவுடன் ஓரிரு தினங்களுக்குள் அமைச்சரின் அதிவிஷேட உத்தரவுக்கமைய புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் நிதியில் சுமார் 140,000.00 ரூபாவில் தொலைபேசி வசதி அளிக்கப்பட்டது. அதன் முதல் அழைப்பை மதகுரு தயாரெத்னவுக்கு எடுத்திருந்தார்.அங்கு தயாரெத்ன இல்லை.அவரது அலுவலரிடம் அமைச்சர் அஷ்ரஃப் தனக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட சில நாட்களுக்குள் பன்சலைக்கு தொலைபேசி வசதி கிடைக்கச் செய்துவிட்டார் ஏன்றார்.
இவ்வாறு தொடங்கிய உறவு பிற்காலத்தில் TNL லில் பிரபல்யமிக்க சோமதேரர் அவர்களுடன் தீகவாப்பி புனித பிரதேசம் தொடர்பாக நடந்த விவாதத்தில் தீகவாப்பி புத்தரக்கித தேரரை தலைவர் அஷ்ரஃபின் அல்லது முஸ்லிம் மக்களுக்கு நியாயமான கருத்தை முன்வைக்க நேர்ந்தது. மிகவும் பிரச்சினையான விவாதம் தலைவருக்கு வெற்றியைக் கொடுத்தது.
இதனடிப்படையில் ஒருநாள் தீகவாப்பி பிரதேச அபிவிருத்தி தொடர்பாக அங்கு சென்ற போது அமைச்சரையும் ஏனையவர்களையும் சைத்தியப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். யாருமே எதிர்பார்க்கவில்லை. பிரமுகர்களுக்கெல்லாம் மலர்தட்டு வழங்கப்பட்டன. பெரும்பாலான பௌத்தமதகுருமாரும் சிங்கள அரசியல்வாதிகளும் புடைசூழ நின்றிருந்த வேளையில் பூத்தட்டை கையளித்த மறுகணமே அதை கீழே வைத்துவிட்டார் தலைவர் அஷ்ரஃப் இதுதான் நடந்தது.
நண்பன் ஜவாத் சொல்வது போன்று தலைவர் கும்பிடு போடவில்லை. அப்படி கும்பிடு போட்டு வணங்கக் கூடியவரா அஷ்ரஃப்? அல்லது தலைவர் ? என்பதை ஜவாத் நெஞ்சைத் தொட்டுப் பார்க்க வேண்டும்.
ஜூம்ஆ
அன்றைய நாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய தலைவர் சமய கலாசார அமைச்சர் லக்ஷ்மன் ஜயக்கொடி தீகவாப்பிக்கு வந்திருந்த சமயம்.
தலைவர் அஷ்ரஃப் அம்பாரை மாவட்ட அரசியல் தலைவரும் அமைச்சரும் கூட. சக அமைச்சர்கள் விருந்தாளிகள் வந்திருந்த சமயம் மேடையை விட்டு விலக முடியாத நிலைமை தலைவருக்கு.
என்னை அழைத்தார். காகிதத்தில் குறிப்பு ஒன்றைத் தந்து தென்கிழக்குப் பல்கலைக்கழக அரபு இஸ்லாமிய கற்கை நெறிகளின் பீடாதிபதி கலாநிதி மௌலவி கே.எம்.எச்.கால்தீன் அவர்களிடம் மஸூரா பண்ணுமாறு கூறினார்.
கால்தீன் சேர் தனது பதிலில் இங்கேயே தொழலாம் என்றார். விரைவாக முடிக்கப்பட்ட கூட்டத்தில் அமைச்சர் ஜயக்கொடி, அதிகாரிகள் எல்லோரும் அப்படியே இருக்க, மதகுருமார் மற்றும் உதவியாளர்களால் தொழுகைக்கான இடவசதி துப்பரவு செய்யப்பட்டு விரிப்புகளும் போடப்பட்டன.
கால்தீன் சேர் இமாமாக நின்று தொழுகை நடாத்தினார். நாங்கள் எல்லோரும் ஜமாஅத்தில் இணைந்து கொண்டோம்.
முஸ்லிம்களின் வணக்க வழிபாடுகளைக் கண்டு குழுமியிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் வைத்தகண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்தான் அறிவான் நாங்கள் தொழுது கொண்டிருக்கும் போது பன்னீர் தெளித்தாற் போல் ஒரு மழை.
சாதாரண பிரஜைகளும், அதிகாரிகளும் அமைச்சரும் ஒன்றாகத் தொழுததைப் பார்த்து அங்கிருந்த மக்கள் இஸ்லாத்தின் மகிமைக்கு மனம் லயித்தார்கள் எனலாம். இதுதான் நடந்தது.
தலைவர் அஷ்ரஃப் தனது இஷ்டப்படி தொழ முற்படவில்லை. கால்தீன் சேர் போன்ற மார்க்கப்பற்றுள்ள கல்விமானிடம் மஸூரா செய்துதான் தொழுதார்.
நிலை இப்படியிருக்க நண்பன் ஜவாத் தொழவில்லை என்றவாறு சொன்னார்.அவரும் நின்றதாகச் சொன்னார். அப்படியென்றால் தீகவாப்பியில் உங்களுக்கென்ன பெரிய வேலை? இறக்காமத்துக்கு ஓடோடிப் போய் ஜூம்ஆவில் கலந்து கொண்டிருக்கலாம்தானே. ஜூம்ஆ உங்களுக்கும் கடமைதானே.
அமைச்சர்தான் வேலையோடு இருந்தார். ஜூம்ஆ தொழவில்லை எனக் கொள்வோம். அவ்வாறில்லை ஒரு பேச்சுக்கு சொல்வோம். அவ்விடத்தில் ஜூம்ஆ தொழாமலிருக்குமளவுக்கு நமக்கென்ன வேலை?
எள்ளு எண்ணெய்க்கு காய்ந்தது எலிப்புளுக்குகள் ஏன் காய வேண்டும்?என்ற கதை போல் இருக்கிறது.
கலாபூஷணம் மீரா.எஸ்.இஸ்ஸடீன்