பேயோட்டிய பெருந்தலைவன்.-பகுதி 5 (இறுதிப் பகுதி)
*******************************************************************************
ஒரு விபச்சாரன்.ஒரு பேயோட்டி.ஒரு சூனியக்காரன்.ஒரு இணைவைப்பாளன். ஐந்து வேளை இறைவனைச் சுஜூது செய்யும் எமது சமூகத்தின் அரசியல் தலைவனின் முகவரி இது.நாம் வாக்களித்து தெரிவு செய்தது இவரைத்தான். இவர்தான் எங்களுக்குப் பொறுப்புதாரி. எங்களுக்கு உரிமை பெற்றுத்தருவார் என்று நாம் கண்மூடியாய்க் காத்திருப்பது இவரைத்தான்.எமது ஆட்டுமந்தைகளுக்கு ஓநாயை இடையனாய்க் காவல் வைத்த கதைதான் எங்கள் அரசியல் கதை.
விரல்கள் வெடித்துவிடுமளவிற்கு எழுதியாயிற்று. உண்மைகளின் உறுதியான நகங்களைக் கொண்டு போராளிகளின் இதயங்கள் வலிக்குமளவிற்கு பிறாண்டியாயிற்று.தெளிவு பெற விரும்பும் உள்ளத்திற்கு இதுவரைக்கும் சொன்னவைகள் இனிப் போதும்.ரவூப் ஹக்கீம் என்று கூகுளில் அடித்தால் குமாரி என்பது கூடவே வருகிறது.
இல்லை.எத்தனை தடவை நீ என் செவிட்டுக்காதுகளுக்குள் உரக்கக் கத்தினாலும்,என் இமைகளை இழுத்து விரித்து என் கண்களைத் திறந்தாலும், நேரான பாதையில் என் கைகளைப் பிடித்து முதுகைத் தள்ளிக்கொண்டு போனாலும் ஹக்கீம்தான் என் தலைவன் என்று கூறும் அபூ ஜஹ்லின் கூட்டத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஏனைய எல்லோருக்கும் இனிச் சொன்னவைகள் போதுமானது.
‘’அவர்கள் ஊமையர்கள்.செவிடர்கள்.குருடர்கள்.அவர்கள் திரும்பமாட்டார்கள்’ என்று குர்ஆன் விழிக்கும் துரதிஷ்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஏனையவர்களுக்கு இனிச் சொன்னவைகள் எல்லாம் ஹக்கீமை அப்பால் எறிவதற்குப் போதுமானவை.
அவர் ஒழுக்க ரீதியாகத் தவறியவர்.அகீதா ரீதியாகத் தவறியவர் என்பதற்கு ஆதாரங்களை நான் அடுக்கியாயிற்று.ஹக்கீமின் அரசியல் ரீதியான தவறுகள் எங்களை நேரடியாகப் பாதிப்பவை என்பதால் மிகவும் முக்கியமானவை. அவை ஒரு வீடியோத் தொடர் மூலம் இனி வெளிவரும் இன்ஷா அல்லாஹ். என்னால் முடியுமானதை நான் செய்கிறேன்.என் எண்ணங்களை அறிந்தவன் எனதிறைவன்.அவன் என்னைப் பொருந்திக் கொள்வானாக. எனது எண்ணங்களில் என்று கலப்படங்கள் கலந்து விடுகிறதோ அன்று எனது விரல்களை உடைத்து,நாவையும் அறுத்து மீண்டும் எனது தனிமைக் காட்டுக்குள் அவன் என்னைச் சபித்தும் விடுவானாக.
ஒரு காலத்தில் ஜாஜ்ஜுவல்யாமாக ஜொலித்துக்கொண்டிருந்த ரோம சாம்ராஜ்யம் புஷ்வாணமாகிப் பொரிந்து போனது.அதற்கு முக்கியமான காரணம் சாம்ராஜ்யத்தின் அரசர்களான சீஸர்கள் ஹக்கீமை விட ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தார்கள். விபச்சாரம் அவர்கள் வாழ்க்கையில் பிரிக்க முடியாத அங்கமாகப்போயிற்று.ஊழலில் அவர்கள் ஊறித் திளைத்தார்கள். மக்களை அந்நியர்கள் தாக்கும் போது அவர்கள் அரியணையில் இன்பமாக வைன் அருந்திக்கொண்டிருந்தார்கள்.அவர்களால் இறுதியில் சாம்ராஜ்யமே சின்னாபின்னமாகிவிட்டது.இதுதான் ஹக்கீமைத் தலைவராக வைத்திருப்பதால் எமக்கு நடக்கவிருப்பதும் இதுதான்.
ஒரு தலைவன் எப்படியிருப்பானோ அவ்வாறுதான் சமூகமும் இருக்கும் என்பது நியதி.அதனால்தான் நபிகளார் கடிதங்கள் எழுதும்போது அந்நிய நாட்டு மக்களுக்கு எழுதவில்லை.மன்னர்களுக்கே எழுதினார்கள்.மன்னன் சரியென்றால் மக்களும் சரி.மன்னன் தவறென்றால் மக்களும் தவறு என்பதை இஸ்லாத்தின் நிலைப்பாடு.இதற்கு அழகானதொரு உதாரணத்தைப் பின்வருமாறு சொல்லலாம்.
பிர்அவ்னின் கொடுமையில் இருந்து பனூ இஸ்ரவேலர்களை மூஸா நபி விடுவித்துக் கடலைக் கடந்து கொண்டுவந்தார்.ஆனால் அவர்கள் மூஸா நபி தங்களைக் காப்பாற்றியவர் என்று கூடப் பார்க்காமல் அவருக்கு மாறு செய்தவர்களாகவே இருந்தார்கள். செய்யத் குத்ப் இதன் காரணத்தை விளக்கும்போது ‘நீண்டகாலமாக ஒரு மோசமான தலைவனின் கீழ் அடக்கி ஒடுக்கப்பட்டு இருந்ததன் காரணமாக மக்களும் மோசமானவர்களாக மாறிவிட்டனர்’ என்றார்.
இதுதான் எமது சமூகத்திற்கு இன்று நடக்கிறது. மோசமானவர்களின், விபச்சாரர்களின் தலைமைகளின் கீழ்,இணைவைப்பாளர்களின் கீழ்,ஊழல் செய்பவர்களின் கீழ் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.இப்படிப்பட்ட சமூகத்திற்கு இறைவன் எந்தவிதமான வெற்றியையும் கொடுக்கமாட்டான்.
மோசமான சமூகங்களைத் திருத்த அல்லாஹ் நபிமார்கள் என்ற நல்ல தலைவர்களை அனுப்பினான்.மக்கள் மாறு செய்தபோது தலைவர்களை அனுப்பியவன் அல்லாஹ்வாக இருந்தும் அந்த சமூகத்தை அவன் அழித்தானென்றால் மோசமானவர்களைத் தலைவர்களாக தெரிந்திருக்கும் எமது சமூகத்தின் நிலையைச் சிந்தித்துப்பாருங்கள்.இப்படிப்பட்ட சமூகங்களுக்கு எந்த விடிவும் வராது.
ஹக்கீம் அவர்கள் எமது சமூகத்திற்கு தலைமை தாங்க எந்தவிதத் தகுதியும் இல்லாதவர்.அது இப்பொழுது எல்லோருக்கும் புரிகிறது.கடந்த காங்கிறசின் கூட்டங்களில் மக்களின் உணர்வு அதனை உணர்த்துகிறது.
ஹக்கீம் அவர்கள் எமது சமூகத்தைத் தலைமை தாங்கத் தகுதியில்லாதவர் என்று தெரிந்ததன் பின்னரும் அவரை வைத்திருப்பது எமது சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. வட கிழக்குத் தீர்வு என்ற தருணத்தில் அவரை வைத்திருப்பது மிகவும் ஆபத்தாக முடியும். முஸ்லீம்களின் நிலைப்பாடென்று ஒன்றைச் சொல்லிவிட்டு அவர் மலைநாட்டிற்குப் போய்விடுவார். கடைசிவரைக்கும் கஷ்டப்படுவது நாமாகத்தான் இருக்கும்.அதற்கு முன்னர் நாம் சுதாரித்துக்கொள்ளவேண்டும்.
ஹக்கீமை ஒரு காலமும் உயர் பீடம் விலக்காது.ஏனெனில் ஹக்கீம் சப்பிச் சுவைத்துவிட்டு வீசும் எச்சங்களை எட்டிப்பிடிக்க இருகையேந்திக் காத்துக்கிடப்பவர்கள் அவர்கள்.
காங்கிறசின் தற்போதைய யாப்பு மூலமும் அவரை அகற்றமுடியாது. அகங்காரங் கொண்ட சர்வதிகாரியைப் போல காங்கிறசின் யாப்பை அவர் மாற்றி வைத்திருக்கிறார்.
ஹக்கீமை அகற்ற இறைவனுக்கு அடுத்து, ஒரே ஒரு சக்தியால் மட்டும் முடியும்.அந்தச் சக்திதான் அவரை தலைவராக்கித் தோளில் வைத்தது.அந்தச் சக்திதான் அவரை தூக்கி வீசவல்லது.அதுதான் மக்கள் சக்தி. உங்களையும், என்னையும் எல்லோரையும் போன்ற சாதாரண மக்கள்.அந்தச் சாதுகள் மிரளவேண்டும். ஹக்கீமின் காடு கொள்ளாது.
அரபு வசந்தம் போல ஒரு கிழக்கு வசந்தம் எமக்குத் தேவைப்படுகிறது.கட்சி சாராத இளைஞர்களின் எழுச்சி ஒன்று எமது சமூகத்திற்கு அவசியப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட வழிகளில் எமது எதிர்ப்பை நாம் வெளிக்காட்டவேண்டும்.இறந்த கால அரசியலின் எச்ச சொச்சங்களில் தொக்கி நிற்காத,அரசியல் கறை படாத இளைஞர்கள் ஒன்று சேரவேண்டும். அரசியலுக்கு வெளியே இருந்து நாம் அழுத்தங்களைக் கொடுக்கவேண்டும். காங்கிறசின் உயர் பீடத்தால் செய்ய முடியாததை,யாப்பினால் செய்ய முடியாததை எமது இளைஞர்களால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எந்த மரக்கொப்பில் ஏறி நின்று மன்னன் மகுடி ஊதினாலும் ஆயிரம் கைகள் சேர்ந்து அசைத்தால் போதும் மன்னன் தொப்பென்று தரையில் விழுவான்.
எமது பயணம் நீண்டது.ஆனால் நீதியானது.
-முடிந்தது-
RAAZI MUHAMMEDH JAABIR