யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்திய 2014ஆம் ஆண்டு இடம்பெற்ற அச்சுவேலி முக்கொலை வழக்கில் குற்றவாளிக்கு முத்தூக்குத் தண்டனையை விதித்து யாழ் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தனஞ்செயன் என்பவர் தனது மனைவி, மனைவியின் சகோதரி, மனைவியின் தாயார் மற்றும் மனைவியின் சகோதரர் மீது கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கொண்ட வாள்வெட்டில் மனைவி தவிர்ந்த மூன்று பேரும் உயிரிழந்திருந்தனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கத்திரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற இந்த கொடூர முக்கொலை வழக்கு கடந்த ஐந்து நாட்களாக யாழ். மேல்நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்பாக தொடர் விசாரணை இடம் பெற்றுவந்தது.
குறித்த வழக்கில் நேற்று இடம்பெற்ற விசாரணையில் கொலை சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக கைப்பற்றப்பட்ட வாள் அடங்கிய சான்றுப்பொருட்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்தில் இருந்து மன்றுக்கு எடுத்து வரப்பட்டிருந்ததுடன் வழக்கின் சாட்சிகளால் அவை அடையாளம் காட்டப்பட்டன.
மேலும் சந்தேகநபரிடம் நேற்று நீதிபதி சார்பில் விளக்கம் கோரப்பட்ட வேளை..
“நான் செய்தது மிகப்பெரிய குற்றம், 3 பேர் சாவதற்கு காரணமாக இருந்துள்ளேன், நான் செய்ததை நியாயப்படுத்தவில்லை, எனது நிலை அவ்வாறு ஏற்பட்டு விட்டது” என சாட்சியமளித்தார்.
வழக்கின் சாட்சிய பதிவுகள் யாவும் நிறைவடைந்துள்ள நிலையில் குறித்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்றைய தினம் வழங்கினார்.
சந்தேகநபர் தான் குற்றவாளி என்பது சந்தேகத்திற்கிடமின்றி சாட்சிகளுடன் மன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், குற்றத்தின் பாரதூரத்தன்மை கருதி ஒவ்வொரு கொலைக்கும் குற்றவாளிக்கு தனித்தனியாக தூக்கு வழங்கியதுடன், 14 வருட கடூழியச்சிறைத் தண்டனையுடன், தலா 1 இலட்சம் நட்ட ஈடு மற்றும் தலா 10 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார்.