ஹக்கீமின் வினையே ஹக்கீமை சுடப்போகிறது , முஸ்லீம் கூட்டமைப்பு உருவாகுவது உறுதியாகி விட்டது

 முஸ்லீம் காங்கிரசின் தலைவராக தொடர்ந்து வாழும் ஆசை ஹக்கீமிடம் இருந்தாலும் இக்கட்சியினை உருவாக்கி முஸ்லீம் காங்கிரசின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்த கிழக்கு மாகாண மக்களின் ஆசையினை நிறைவேற்ற  முடியாத, தெரியாத காரணத்தால்  பல விடயங்களில்  பொய் சொல்லி அனைவரையும், அனைத்து விடயங்களிலும்  ஏமாற்றி மறுதலையாக மாற்றும் தன்மை கொண்ட  ஹக்கீம்   பணம், பதவி, பட்டம், தனிப்பட்ட சுகபோக இன்ப வாழ்க்கைகள்,  போன்ற அவரது     பலவீனங்களுக்குள் மறைந்து வாழ்வதனையே  பலமாக ஹக்கீம் நினைத்துக்கொண்டிருக்கிறார் .  
 
 
மறைந்து வாழ்வது, பதில்களை மழுப்புவது, முடிவுகளை முடிவில்லாமல் வைத்திருப்பது, கட்சிப் போராளிகளை உதாசீனப்படுத்துவது போன்றவைகள்  பலமல்ல, அது மறைத்து வாழும் பயந்தாங்கொள்ளித்தனம். இந்த    பயந்தாங்கொள்ளித்தனம் தான் உண்மையினையும், நியாயத்தினையும் நேருக்கு நேராக முகம் கொண்டு பார்க்க முடியாத மனிதனாக ஹக்கீமை மாற்றியதுடன்  அதற்கு சாணக்கியம் என்ற பெயரையும் கொடுத்து சாமர்த்தியமாக ஹக்கீம் தப்பித்துக் கொள்ள  வழியையும் அமைத்துள்ளது  எனலாம். இவ்வாறான ஹக்கீமின்  அரசியல் சதுரங்க ஆட்டத்தினை  ஆடும் போது குறுகிய வட்டத்தில் வெற்றியை காண்பித்தாலும் நீண்ட கால நடத்தையானது ஹக்கீமுக்கு தோல்வியையே கொடுக்கப்போகிறது. 
 
 
அதாவுல்லா, அன்வர்  இஸ்மாயில், ஹரீஸ், வை.எல்.எஸ்.ஹமீட்  போன்றவர்களின் பிரச்சனைகளில் அடிப்படை பிரச்சனை கிழக்கிற்கு கெபினட் அமைச்சு வேண்டுமென்பதாகும், ரிசார்ட் பதுர்டீனுக்கும் இதுவே பிரச்சனை, ஹிஸ்புல்லாஹ்,  முஹைதீன் அப்துல்  காதர், ஜெமீல், சிராஸ் மீராசாஹிப், அன்ஸில், தாஹிர், எஸ்.எஸ்.பி மஜீத், அமீரலி போன்றவர்கள் ஹக்கீமின் மகுடி பகிடியாக இருந்ததால் ஆட மறுத்து விட்டார்கள். இது போல் கட்சியின் பூர்வங்கப் போராளிகள் ஹக்கீம் யார் என்பதை புரிந்து கொண்டதால் ஹக்கீமால் வெளியேற்றப்பட்டது       நேற்றைய மங்காத்தா , பஷீர் சேகுதாவூத் போன்றவர்கள்  வெளியேற்றப்பட்டது     ஹக்கீமின்  இன்றைய   மங்காத்தா,   ஹஸனலி, அன்ஸில், தாஹிர், தாஜூடீன்     போன்றவர்களை ஹக்கீம் வெளியேற்ற நினைப்பது நாளைய மங்காத்தா, இவ்வாறு வெளியேற்றப்பட்ட அனைவரும் “நாங்கள் முஸ்லீம் காங்கிரஸ்” என்றும் சுயநல அரசியல் சூதாட்ட தர்பாரில் இருக்கும்  ஹக்கீம் தலைமைத்துவத்துக்கு பொருத்தமானவரில்லை என்றும் கூறுகின்றார்கள்.
 
 
ஆனால் இவர்கள் இவர்களது பிரதேசங்களில்  பல தலைமைத்துவங்களைக் கொண்ட காட்சிகளாக உருமாறி கொடிகட்டிப் பறக்கின்றார்கள். ஆனால் ஹக்கீமின் ஆணவ, ஆவண ரீதியான தலைமைத்துவம் பல இடி மின்னல்களில் சிக்குண்டு எடுக்க தலையில்லாது வாலை தலையாக காட்டிக்கொண்டுள்ளது.  இதனை ஆரோக்கியமுள்ள, பூரணமுள்ள வடிவமாக காண, ஏற்றுக் கொள்ள  முடியாதுள்ளது. 
 
 
இக்காலப்  பகுதியில் தான் எமது நாட்டில்  இனப்பிரச்சினைக்கான தீர்வுகளும் எட்டிப்பார்த்துக் கொண்டிருக்கின்றன. முஸ்லீம்களும் அவர்களது கோரிக்கையான “நிலத்தொடர்பற்ற முஸ்லீம் தனியலகு”  அல்லது அதற்கு சமமான கரையோர மாவட்டத்தினை இச்சந்தர்ப்பத்தில் தான் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த பேச்சு வார்த்தை மேடைக்கு முஸ்லீம்களின் பிரதிநிதியாக யார் கலந்து கொள்வது என்பது பற்றி மக்களினால் தீர்மானிக்கப்படவேண்டியுள்ளது, ஹக்கீமின் முறையற்ற காய் நகர்த்தல்களால், தகர்ந்து போன முஸ்லீம் காங்கிரஸ் போராளிகள் பல காட்சிகளாக வளர்ந்து  இன்று கணிந்துள்ளதால் ஹஸனலியின் வெளியேற்றம் இக்கட்சிகளுக்கு மின்சாரம் போன்ற தொடர்பு வலையமைப்பினைக் கொடுத்து உயிரோட்டத்தினை ஏற்படுத்தியுள்ளது, முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின்  ஏக பிரதிநிதியாக    ஹஸனலியை அதிகமான  மக்கள் ஏற்றுக்கொள்வதால்  கிழக்கில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து  “முஸ்லீம் கூட்டமைப்பினை” உருவாக்கி அதன் மூலம் தேர்தல்களில் போட்டியிட்டு அதிகாரத்தினைக் கைப்பற்றி, கிழக்கில் ஆட்சியை ஏற்படுத்தி அங்கிருந்து ஒருவர் இனப்பிரச்சனை தொடர்பான பேச்சு வார்த்தை மேடைக்கு போகலாம்.
 
 
இவ்வாறான ஒரு கூட்டமைப்பு உருவாக தன்னையறியாமலேயே காரணமாக    இருந்த ஹக்கீமுக்கு கிழக்கு மாகாண மக்கள் உங்களது நன்றிகளை சொல்ல வேண்டும். ஹக்கீமின் அளவுக்கு மிஞ்சிய நடத்தை இங்கு அவருக்கே  நஞ்சாகி விட்டதால் அது “முஸ்லீம் கூட்டமைப்பு” ஒன்று உருவாகுவதை உறுதியாக்கிவிட்டது,  ஹக்கீமின் வினையே ஹக்கீமை சுடப்போகிறது. நிந்தவூரில் ஹக்கீம் சொன்னது போல் ஒரு கம்பான ஹக்கீமுக்கும், பல காம்புகள் ஒன்றிணைந்த முஸ்லீம் கூட்டமைப்பிற்கும் இடையேயுள்ள பலத்தினை நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
 
 
 இதன் பலன் அடுத்து நடைபெறவுள்ள (2017 .03 . 28 ) உயர் பீடக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 6 பேருக்கும் அதிகமான உறுப்பினர்கள் முஸ்லீம் காங்கிரசில் இருந்து தடை செய்யப்படுவார்கள் என்பதும் ஒரு எதிர்பார்ப்புத்தான் 16 வருடங்களாக கிழக்கு மாகாண மக்கள் ஹக்கீமை நம்பி ஏமாற்றமடைந்து அதன் மூலம்  கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையிலும், மர்ஹூம் அஷ்ரபின் கனவான  “நிலத்தொடர்பற்ற முஸ்லீம் தனியலகு”  அல்லது அதற்கு சமமான கரையோர மாவட்டத்தினை பெற்றுக் கொள்ளுதல் என்ற  அடிப்படையிலும் இந்த முஸ்லீம் கூட்டமைப்பு கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும் என்ற மக்களின் அழுத்தத்தின் அடிப்படையிலும் “முஸ்லீம் கூட்டமைப்பு ” அமையப்பெற்று அதன் மூலம் பல வெற்றிகளை சாதித்ததன் பலனாக   இனப்பிரச்சனை தீர்வுக்கான  பேச்சு வார்த்தை  மேடையில் கிழக்கு  மகனின் தலைமையில்  இப்பேச்சுவார்த்தைகள் இனிது இடம் பெற்று, எங்களது போராட்டத்தில் நாங்கள்  வெற்றி பெற கிழக்கு மாகாண மக்களின் அனைத்து ஆதரவுகளும் இக்கூட்டமைப்புக்குள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
 
 
எது எப்படியோ இந்த முஸ்லீம் கூட்டமைப்பு உருவாக காரணமாக இருந்த ஹக்கீமுக்கு கிழக்கு மாகாண மக்களின் சார்பாக நன்றிகள் 
 
அமீர் மௌலானா