ரஷியாவில் ஊழல் மலிந்து விட்டது. எனவே பிரதமர் பதவியில் இருந்து டிமிட்ரி மெத்வதேவ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி போராட்டம் அறிவித்தது.
நாடு முழுவதும் 99 நகரங்களில் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் 72 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதி அளிக்கவில்லை. தலைநகர் மாஸ்கோவில் நடந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி தலைமை தாங்கினார்.
போராட்டங்களில் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர். இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மாஸ்கோவில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சிநவால்னி உள்பட 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாஸ்கோ தவிர செயின்ட் பீட்டர்ஸ் பார்க், விலாடி வோஸ்டோக், நவோசி பிரிஸ்க், டாமஸ்க், உள்ளிட்ட பல நகரங்களில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் கைது செய்யப்பட்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிம்ளீ சொப்பனமாக திகழ்கிறார். வருகிற 2018-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் புதினை எதிர்த்து போட்டியிடுகிறார்.