‘உங்களில் இறையச்சம் உடையவர்களே சிறந்தவர்கள் ஆவார்கள்’ நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்

எப்போதும் ஒரு வகையான பயம், நம்முள் இருந்து கொண்டேதான் இருக்கின்றது. பல்வேறு வகையான பயம் நொடிக்கு நொடி மாறி மாறி நம்மை சுற்றி வந்துக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தைப் பற்றிய பயம், உலகைப் பற்றிய பயம், வயோதிகத்தில் குடும்பம் நம்மை கை விட்டுவிடுமோ என்ற பயம், மரணத்தைப் பற்றிய பயம், அதற்குப் பின்னால் வரும் சொர்க்கம், நரகம் பற்றிய பயம்… இவ்வாறு பலவிதமான பயங்கள் சிலநேரங்களில் மனதில் தோன்றலாம்.

இதற்கெல்லாம் காரணம் என்ன?. நம்மையும் இந்த உலகத்தையும் படைத்து ஆளுகின்ற இறைவனை நாம் அஞ்சி வாழாமல் மறந்து நடப்பதால் தான் இத்தகைய பயம் நம்மில் தோன்றுகிறது. இன்னும் உலகின் மீது பற்றுடன் கூடிய ஆசை வைப்பதும் இத்தகைய பயத்தை அதிகப்படுத்துகின்றது.

சர்வ ஆற்றல் மிக்க இறைவனுக்கு பயந்தும், அவனது தண்டனைக்கு அஞ்சியும் நடப்பதால் பயபக்தியுடைய இறைவிசுவாசிகள் உலகத்தில் ஏற்படும் சோதனைகளையும், வேதனைகளையும் கண்டு அஞ்சவோ, கவலைப்படுவதோ இல்லை என்பதை அருள்மறை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

‘அறிந்து கொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு (இவ்வுலகில்) அவர்கள் மீது எவ்வித பயமும் இல்லை. இன்னும் அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’ (10:62).

‘உங்களில் இறையச்சம் உடையவர்களே சிறந்தவர்கள் ஆவார்கள்’ என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதரின் கட்டளைக்கும் மாறு செய்யாமல் இணங்கி நடப்பதே இறையச்சம் ஆகும்.

இறையச்சம் உடையவர்களுக்கு மட்டுமே அருள்மறை குர்ஆன் வழிகாட்டும் என்று கீழ்கண்ட வசனம் இவ்வாறு கூறுகின்றது:

‘இது அல்லாஹ்வின் திருவேதமாகும். இதில் எவ்வித சந்தேகமும் அறவே இல்லை. இறையச்சம் உடைய பயபக்தியாளர்களுக்கு இவ் வேதம் நேர்வழி காட்டும். (2.2)

குர்ஆனை கொண்டு நேர்வழி பெற வேண்டுமானால் இறையச்சம் அவசியம் என்பதையும் குர்ஆனின் கருத்துக்களை உள்ளபடி அறிந்து கொள்ளவும், இறையச்சம் அவசியம் என்பதையும் மேலே சொன்ன வசனம் நமக்கு தெளிவு படுத்துகிறது.

இறையச்சம் உடைய அவனது நேசர்கள் கீழ்கண்டவற்றில் உறுதியாக செயல்படு கிறார்கள்:

‘இறைவன் தன்மீது விதியாக்கியதை தன்னைத் தவிர வேறு எவராலும் அடைய முடியாது என்றும், இறைவனைக் கொண்ட தன் ஜீவன் தன் உடலில் நிலைத்திருக்கிறது என்றும், இறைவன் நாடினால் அன்றி மற்றவர்களால் நன்மையோ, தீமையோ செய்ய முடியாது என்றும், (ஹலாலான) நேர்வழியில் பொருள் ஈட்டுவதை ஈமானின் அடையாளம் என்றும், பரிசுத்தமான கலப்பற்ற தூய எண்ணத்தோடு, இறைவனை வணங்கி வாழ்வதால் நிலையான நிம்மதியை பெறமுடியும் என்றும் இறையச்சம் உள்ளவர்கள் உளமார நம்பி நடக்கின்றார்கள்’.

இறையச்சம் நிறைந்த வெற்றியாளர்கள் குறித்து அருள்மறை குர்ஆன் இவ்வாறு பேசுகிறது:

‘இறையச்சம் நிறைந்த மூமீன்களே, நீங்கள் பொறுமையை கடைப்பிடியுங்கள், (துன்பங்களை) சகித்துக் கொள்ளுங்கள், (ஒற்றுமையுடன் உங்களை) பலப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் (நடந்து) கொள்ளுங்கள்’. (3.200)

இறையச்சமுடைய மக்கள் தேவையற்ற காரியங்களில் ஈடுபடுவதை விட்டும், வீண் பேச்சை விட்டும், வஞ்ச எண்ணம் கொண்ட தீயோர்களை விட்டும் இறைவன் அருளால் தங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

நாளும் நமது மனதை நோட்டமிட்டு அந்த மனதிற்குள் இறையச்சம் இருக்கின்றதா என்பதை நமக்கு நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளும்போது நம்முடைய ஈமான் (இறை நம்பிக்கை) பிரகாசமடைகின்றது.

இந்த இறையச்சத்தில் (தக்வாவில்) ஏதேனும் குறை ஏற்படும்போது அந்த பாதிப்பை நீக்கிட ‘தவ்பா’ என்ற பாவமன்னிப்பை கொண்டு பரிகாரம் செய்து நம்மை சீர்செய்து கொள்ளவேண்டுமென நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளார்கள்.

அனைத்தையும் அடக்கி ஆள்பவன் இறைவனே. வானத்திலும், பூமியிலும் அவனது ஆட்சியே சர்வ சதாகாலமும் நடந்துகொண்டு இருக்கிறது. திட்டமிடுவதும், தீர்மானிப்பதும் அது எதுவாக இருப்பினும் அவனது நாட்டம் இன்றி எதுவும் நடைபெறாது என்பதை குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

‘நபியே! நீர் கூறுவீராக, அல்லாஹ்வே ஆட்சியின் அதிபதியே! நீ நாடுபவர்களுக்கு ஆட்சியை கொடுத்தாய்! நீ நாடுபவர்களிடமிருந்து ஆட்சியை எடுத்தும் விடுகிறாய். இன்னும் நீ நாடியவரை கண்ணியப்படுத்துகிறாய். நீ நாடியவரை இழிவு படுத்துகிறாய். நன்மை, தீமை யாவும் உன் கைவசமே உள்ளது. நிச்சயமாக நீ எல்லாப் பொருட்களின் மீதும் சக்தி பெற்றவன்’. (3.26)

கீழ் இருப்பதை மேலாக்குவதும், மேல் இருப்பதை கீழாக்குவதும் சர்வ சகதியுமுள்ள இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றது என்பதை இந்த வசனம் நமக்கு தெளிவுபடுத்துகின்றது.

நம் ஆன்மாவிற்கு இவ்வுலகில் வாழ ஒரே ஒரு முறைதான் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதனை இறையச்சத்தால் நிறைவுடைய தாக்கி மகிழ்வது வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமையாகும்.

நாம் இழுத்துவிடும் மூச்சு நின்று போகும் முன்பு ஈமானின் அடிப்படையில் உள்ள நற்காரி யங்களை தாமதமின்றி இறையச்சத்தோடு நிறைவேற்றி பழகும் போது, வெற்றி என்னும் இறைவனின் அருள் நம்மை தேடிவரும்.