கிழக்கு மக்களே! இன்னுமின்னும் ஏமாந்து எம் நிலையை நாம் தாழ்த்திக்கொள்ள வேண்டுமா?

  ஏன் நாம் அமைச்சர் றிஷாதிடம் கிழக்கு மாகாண சபையை ஒப்படைக்க கூடாது?

இப்றாஹீம் மன்சூர்:கிண்ணியா

இன்று அமைச்சர் றிஷாத் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விசேட உலங்கு வானூர்தி ஒன்றை ஏற்பாடு செய்து உள்ளூராட்சி மாகாண அமைச்சர் பைசர் முஸ்தபாவை கிண்ணியாவிற்கு அழைத்து சென்றிருந்தார்.இந் நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் ஹாபிசும் அழைக்கப்பட்டிருந்தார்.இந் நிகழ்வில் கிண்ணியா சமூகம் மாத்திரமல்லாது ஒட்டு மொத்த கிழக்கு மாகாண  உள்ளூட்சி மன்றங்களும் பாரிய நிதியை மிக இலகுவாக பெற்றுக்கொண்டதோடு மேலும் பல நன்மைகளை இப் பயணத்தின் மூலம் திருகோணமலை மாவட்ட மக்கள் பெற்றுக்கொண்டனர்.இதில் நனைந்து கொள்ள முயற்சித்த கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர்,இது தனது முயற்சியினால் செய்யப்பட்ட ஒன்று என்றது போன்று தனது முக நூலிலும் இதர பல தமிழ் இணையங்களுக்கும் செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.இது ஊரான் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பெயரில் கத்தம் கொடுத்த கதை போன்று அமைந்துள்ளது.

அவரது முகநூலில்;

“தனது கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகாண சபைக்கு வருகை தந்த அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் அமைச்சர் றிஷாத் ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள 45 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தலா பத்து இலட்சம் ரூபாய் வழங்குவதற்தாக தீர்மானம் எடுக்கப்பட்டது ” 

என கூறியுள்ளார்.

பைசர் முஸ்தபா உள்ளூராட்சி மன்றம் மற்றும் மாகாண  அமைச்சர் என்ற வகையில் அவருடன் இது தொடர்பில் பேசுவது அவசியமானது.அமைச்சர் றிஷாத் வர்த்தக அமைச்சர்.ஏன் அவருடன் இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும் என்ற வினாவை எழுப்பி சிந்தித்தாலே இதில் பொதிந்துள்ள உண்மைகளை அறிந்து கொள்ளலாம்.கிண்ணியாவில் பாராளுமன்ற உறுப்பினர் உள்ள நிலையில் இதில் மு.காவைச் சேர்ந்த கிழக்கு முதலமைச்சர் மாத்திரமே கலந்து கொண்டிருந்தார்.இருந்தாலும் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடாவை சேர்ந்த பிரதி அமைச்சர் அமீர் அலி இதில் கலந்து கொண்டிருந்தார்.இது அமைச்சர் றிஷாதின் சேவை என்பது தெட்டத் தெளிவாவதால்  இது தொடர்பில் அதிகம் கதைக்க தேவையில்லை என கருதி இத் தோடு இவ்விடயத்தை நிறைவு செய்கிறேன்.

இது அமைச்சர் றிஷாதின் சேவை பாதையில் ஒன்று என்ற விடயத்தை நிறைவு செய்தாலும் இதில் கிழக்கு மக்கள் சிந்திக்கத் தக்க பல விடயங்கள் உள்ளன.கிண்ணியா வைத்தியசாலையானது கிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள ஒரு வைத்தியசாலையாகும்.தற்போதைக்கு இதில் அதிகம் அமைச்சர் றிஷாத் தனது மூக்கை நுழைத்து சேவை செய்ய வேண்டுமாக இருந்தால் அதற்கு கிழக்கு முதலமைச்சரின் உதவி தேவை என்பது யாராலும் மறுக்க முடியாது.கிழக்கு முதலமைச்சர் மு.காவை சேர்ந்தவர்.இந் நேரத்தில் அமைச்சர் றிஷாத் முதலமைச்சருடன் உடன்பட்டு செல்லாது போனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாது.இந் நேரத்தில் அமைச்சர் றிஷாத் கட்சி பேதம் பார்க்க வில்லை.(இதனை முதலமைச்சர் தனது சுய அரசியலுக்கு பயன்படுத்த முயற்சித்ததாலயே நான் இதனை எழுத தூண்டப்பட்டேன் என்ற விடயத்தை இவ்விடத்தில் பதித்துக் கொள்ள விரும்புகிறேன்).இதனை தனது அரசியலுக்காக பயன்படுத்த முயற்சிக்கவில்லை.இது தான் அமைச்சர் றிஷாதின் பண்புகள்.

அமைச்சர் றிஷாத் என்ன தான் மு.காவையும் இதில் இணைத்து சேவை செய்தாலும் தனது கட்சியை சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக இருந்தால் மிக இலகுவாக தனது சேவைகளை செய்து கொள்வார்.கிழக்கு மாகாண சபையின் 75வது அமர்வின் போது மு.காவின் மாகாண சபை உறுப்பினர் அன்வர் கிழக்கு சுகாதார அமைச்சர் டெங்கு விவகாரத்தில் சரியான விதத்தில் செயற்படவில்லை என கூறியிருந்தார்.இவர் குற்றம் சுமத்திய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் மு.காவை சேர்ந்தவர்.இதனை இன்னுமொரு விதத்தில் சொல்வதானால் மு.காவின் கட்டுப் பாட்டில் உள்ள கிழக்கு மாகாண சபை டெங்கு நோய் விவகாரத்தில் முறையாக செயற்படவில்லை என்பதாகும்.இதனை செய்யக் கூடிய அரசியல் அதிகாரங்கள் மு.காவின் கையில் உள்ள போதும் மு.கா தகுந்த முறையில் முயற்சிக்கவில்லை என்பதாகும்.எறிபவன் கையில் கம்பில்லாமல் அமைச்சர் றிஷாத் தனது சேவைகளை கிழக்கு முதலமைச்சருடன் இணைந்து செய்கிறார்.மக்களுக்கான அரசியல் செய்ய நினைக்கும் அமைச்சர் றிஷாத் ஏன் இன்னுமொரு கட்சியை மக்களுக்கு சேவை செய்ய நாடிச் செல்ல வேண்டும்? ஏன் நாம் அமைச்சர் றிஷாதின் கையில் கிழக்கு மாகாண சபையை ஒப்படைக்க கூடாது?

கிழக்கு மக்களே! 

நன்றாக சிந்தியுங்கள்.இன்னும் இன்னும் ஏமாந்து எம் நிலையை நாம் தாழ்த்திக்கொள்ள வேண்டுமா?

குறிப்பு : நான் எழுதும் கட்டுரைகளை அமைச்சர் றிஷாதிற்கு எதிராக எடிட் செய்து எனது பெயரில் வெளியிடப்படுவது தொடர்பில் அவதானமாக இருக்கவும்.