ஒருவர் மீது பழி போட வாய்ப்பு கிடைத்துவிட்டால் அவர் மீது இல்லாத பொல்லாத பழியை சுமத்துவது எமது சமூகத்தில் சாதாரணமாக காணக்கூடியதான ஒரு செயலாகும்.இன்று இவ்வாட்சியின் மீது முன் வைக்கப்படும் அனைத்து குற்றச் சாட்டுக்களையும் மஹிந்த தலை மீது போட்டு இன்றைய ஆட்சியாளர்கள் தப்பித்துக்கொள்ள முனைவதை அவதானிக்க முடிகிறது.சில காலங்கள் முன்பு முஸ்லிம்களின் மீது இடம்பெற்ற இனவாத செயல்களுக்கு அன்று நாட்டை ஆண்ட மஹிந்தவை குறை கூறினார்கள்.அதில் சில நியாயங்கள் இல்லாமலுமில்லை.தற்போது அவர் ஆட்சியில் இல்லாத நேரத்திலும் அவரையே குறை கூறுவதில் சிறிதேனும் நியாயம் இருப்பதாக தெரியவில்லை.
இன்று இலங்கை முஸ்லிம்களிடையே நிலவும் அரசியல் அதிகார போட்டியின் காரணமாக இலங்கை முஸ்லிம்களின் வாழ்வு கேள்விக்குறியான நிலையில் உள்ளது.இலங்கை அரசின் சிறு பான்மையினருக்கான தீர்வுப் பொதியில் இக் கால கட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.இந் நேரத்தில் முஸ்லிம்கள் தாங்கள் சம்பந்தப்படும் விடயங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளார்கள்.முஸ்லிம்களை பொறுத்தமட்டில் இலங்கை நாட்டில் சில காலங்கள் முன்பு கோரத் தாண்டவமாடிய இனவாத நிகழ்ச்சி நிரலின் தந்தையாக மஹிந்த கருதப்பட்டார்.அவரை வீழ்த்தினால் அனைத்து பிரச்சினைகளும் முடிவுக்கு வந்துவிடும் என்ற நிலைப்பாட்டில் இருந்தனர்.அந் நேரத்தில் ஜனாதிபதித் தேர்தலும் வந்தது.முஸ்லிம்கள் ஒருமித்து நின்று தங்களது வாக்குப் பலத்தை காட்டி மஹிந்தவை வீழ்த்த பிரதான காரணமானார்கள்.இதனைத் தொடர்ந்து தாங்கள் ஏதோ சாதித்துவிட்டோமென பெருமூச்சு விட்டவாறு இலங்கை முஸ்லிம்களும்,முஸ்லிம் அரசியல் அதிகாரமிக்கவர்களும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது.இந் நல்லாட்சிக்கான கூட்டை நம்பி இலங்கை மக்கள் எதற்காக வாக்களித்தார்களோ அவர்களின் நம்பிக்கையை இவ்வரசு சிறிதளவேனும் பூர்த்தி செய்யவில்லை.இலங்கை மக்களும் இவ்வரசின் உண்மையான முகத்தை படிப்படியாக அறிய ஆரம்பித்துள்ளனர்.இவ்வரசு தனது ஆதரவை பலவாறான திசைகளில் இழந்து வருகின்றமையை இதனூடாக அறிந்து கொள்ளலாம்.
முஸ்லிம்களை பொறுத்தமட்டில் மஹிந்த மீது பூரண வெறுப்புக்கொண்டவர்களாகவே இருந்தார்கள்.அவ் வெறுப்பை அவ்வளவு இலகுவில் முஸ்லிம்களின் உள்ளத்தில் இருந்து கழற்றி எறிய முடியாது.அண்மைக் காலமாக இவ்வரசு பற்றி சிறு சிறு சல சலப்புக்களும் சலிப்பு வார்த்தைகளும் முஸ்லிம்களிடையே எழ ஆரம்பித்துள்ளதை அவதானிக்க முடிகிறது.இது இந் நல்லாட்சிக்கான பெரும் அபாய ஒலியாகும்.இன்றும் முஸ்லிம்களுக்கெதிரான ஏதாவது நிகழ்ச்சி நிரல் அரங்கேறும் போது முஸ்லிம்களிடையே இது மஹிந்தவின் செயல்தான் என்ற சிந்தனை முதலில் எழுவதை அவதானிக்க முடிகிறது.அந்தளவு முஸ்லிம் மக்களின் உள்ளத்தில் மஹிந்தவின் நாமம் நஞ்சாக பதிந்துள்ளது.இதற்கு பிரதான காரணம் மஹிந்தவிற்கு எதிரான முஸ்லிம் அரசியல் வாதிகள் மஹிந்தவின் நாமத்தை விற்றே தங்களது அரசியல் பிழைப்பை நடாத்த வேண்டிய தேவை இருந்தது.அனைத்தையும் அரசியலாக மாற்றி அரசியல் ஆதாயம் தேடிக்கொண்டனர்.அன்று நடந்த இனவாத நிகழ்ச்சிகளில் இன்று எது குறைந்துள்ளது? அன்று நாளுக்கு நாள் மஹிந்தவை விமர்சிப்பதையே பிரதான தொழிலாக கொண்டிருந்த அசாத்சாலி.முஜீபுர் ரஹ்மான் போன்றோர் இன்று எங்குள்ளனர்.முஜீபுர் ரஹ்மான் இன்னும் மஹிந்தவையே பல இடங்களில் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.இலங்கை முஸ்லிம் மக்களை சிந்தனா அரசியலில் இருந்து புறந்தள்ளி உணர்ச்சி அரசியலுக்குள் நுழைவிக்கச் செய்ததில் இவர்களுக்கும் மிகப் பெரும் பங்குண்டு.இன்று மஹிந்த ராஜ பக்ஸ எந்தவிதமான அதிகாரத்திலும் இல்லை.அதிகாரத்தில் இல்லாத போதும் அவரை குற்றம் சுமத்துவது எந்த விதத்தில் தகும்? அது மாத்திரமல்ல பொது பல சேனா இன்றைய ஆட்சியாளர்களின் செல்லப் பிள்ளை போன்று பாராளுமன்றம் சென்று பகலுணவுண்டு படுத்துறங்கி இன்றைய ஆட்சியாளர்களை பாராட்டியும் வருகிறது.இவ் அமைப்பை எப்படி மஹிந்தவின் கூலியாட்களாக கூறுவது?
இன்றும் இனவாத நிகழ்ச்சிகளின் பின்னால் மஹிந்த தான் உள்ளார் என முஸ்லிம்கள் நம்புவது முஸ்லிம்களுக்கு மிகவும் ஆபத்தானது.முஸ்லிம்களை பொறுத்தமட்டில் பேரின தேசியக் கட்சிகளுடன் இணைந்து தங்களது பயணத்தை மேற்கொள்ளும் போதே பேரம் பேசும் வல்லமை பெறும்.முஸ்லிம்களின் வாக்குகளும் பயன்பெறும்.உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்களே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்தார்கள்.இத் தேர்தலில் முஸ்லிம்கள் தனிக் கட்சியாக நின்று எதனையும் சாதித்திருக்க முடியாது.இவ்வாறான சந்தர்ப்பங்களின் போதே முஸ்லிம்கள் தங்களது விடயங்களை சாதிக்கலாம்.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முஸ்லிம்கள் மிகப் பெரும் பேரம் பேசும் வல்லமை பெற்றிருந்தும் கிஞ்சித்தேனும் சாதிக்கவில்லை.இன்றைய அரசை சு.க மற்றும் ஐ.தே.க ஆகியன இணைந்து அமைத்துள்ளன.பலமிக்க மூன்றவாது அணியாக மஹிந்த ராஜ பக்ஸவின் அணியை கூறலாம்.இந்த ஆட்சி முஸ்லிம்களுக்கு பாதிப்பாக அமைந்துள்ளது.இருந்த போதிலும் இன்று நிகழும் அனைத்திற்கும் மஹிந்த ராஜ பக்ஸ தான் காரணம் என முஸ்லிம்கள் நம்பும் போது இவ்வரசு முஸ்லிம்களின் தலையில் குட்டுவதை இன்னும் பலமாக்கும்.அப்படித் தான் இவ்வரசு முஸ்லிம்களின் தலையில் குட்டிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.முஸ்லிம்கள் தங்களது பாதையை மஹிந்த பக்கம் திருப்பினால் அல்லது தங்களது எதிர்ப்புக்களை வழங்கினால் இவ்வாட்சி முஸ்லிம்களை பற்றி கவனத்திற் கொள்ளும்.அதை விடுத்து இவ்வாட்சியை புனித ஆட்சியாக கருதுவது ஆபத்தானது.இன்று இலங்கை அரசு கூட தங்களது இயலாமைகளை மஹிந்தவின் நாமத்தை கொண்டே மறைத்துக் கொள்கிறது.பிணை முறி மோசடி விடயத்தில் மஹிந்தவிடம் இவ்வரசு மாட்டிக்கொண்டு முழிக்கின்றமையை எமது கண் கூடாக அவதானிக்க முடிகிறது.அண்மையில் இடம்பெற்ற இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய ஆகிய அணிகளுக்குடையிலான கிரிக்கட் விளையாட்டின் போது ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார மஹிந்த பார்த்திருந்தால் நிச்சயம் தோல்விதான்.டொஸ் வென்று ரணில் பார்த்ததாலேயே வெற்றி கிட்டியதென சம்பந்தமில்லாமல் மஹிந்தவை தூசித்தும் மைத்திரியை புகழ்ந்துமிருந்தார்.இன்று மஹிந்த மீது முன் வைக்கப்படுகின்றவை இது போன்ற சம்பந்தமில்லாத குற்றச் சாட்டுக்களேயாகும்.
இலங்கை முஸ்லிம்களுடைய நிலையை அவதானிக்கின்ற போது மஹிந்த ராஜபக்ஸவின் காலத்திலிருந்ததை விடவும் அதிகமான இனவாத செயல்களை அவதானிக்க முடிகிறது.இலங்கை முஸ்லிம்களை இவ்வாட்சியின் பக்கம் கொண்டு சென்ற நிகழ்வுதான் அளுத்கமை கலவரமாகும்.அளுத்கமை கலவரத்தின் பின்னால் அமைச்சர் சம்பிக்க அணியினர் தான் இருந்தார்கள் என மஹிந்த தரப்பு பல இடங்களில் அடித்து கூறுகின்ற போதும் சம்பிக்க அணியினர் எதுவிதமான பதிலும் அளிக்காது மௌனத்தை பதிலாக்கியுள்ளனர்.அவரது மௌனம் வைத்து குறித்த விடயத்தை தான் ஏற்றுக்கொண்டதாகவும் நோக்கலாம்.அமைச்சர் றிஷாத் பொது பல சேனாவின் செயலாளர் ஞானசார தேரரை கைது செய்யுங்கள் அல்லாது போனால் நாங்கள் இவ்வாட்சியை விட்டும் விலகுவோமென அமைச்சரவையில் எச்சரித்த போது அமைச்சர் சம்பிக்க மஹிந்த ராஜபக்ஸவிடம்,உங்களுக்கு அவர் வேண்டுமா நாங்கள் வேண்டுமா என தீர்மானித்து கொள்ளுங்கள் என கூறியதான கதைகளையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அள்ளி வீசுகிறார்.இதன் பின்னணியில் சம்பிக்க தான் இருந்தார் என்றால் முதலில் சம்பிக்க போன்ற இனவாத முகங்களின் கூட்டுக்களைத் தான் முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும்.இன்று சம்பிக்க இவ்வாட்சியுடன் பின்னிப் பிணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.மஹிந்த சார்பு அணியினர் சம்பிக்க மீது இவ்வாறான குற்றச் சாட்டுக்களை முன் வைத்த போது அமைச்சர் ராஜித சேனாரத்ன இதன் பின்னணியில் மஹிந்த உள்ளதன் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக கூறியிருந்தார்.குறித்த சம்பவத்துடன் சம்பந்தமுடைய சம்பிக்க மௌனத்தை கடைப்பிடித்த போது அமைச்சர் ராஜித ஏன் ஓடி வந்து பதில் வழங்க வேண்டும்? இது இவருக்கும் சம்பிக்கவிற்கும் இடையில் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற சந்தேகத்தையும் கிளறி விடுகிறது.இக் கலவரம் தொடர்பான போதிய ஆதாரங்கள் இல்லாமல் நடவடிக்கை எடுக்காமல் விட்டிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ளலாம்.அமைச்சர் ராஜிதவிடம் ஆதாரம் இருந்தும் அளுத்கமை கலவரம் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாமை ஏன்? முஸ்லிம்களின் உயிர்களும் உடமைகளும் அந்தளவும் விலை குறைந்ததா?
இது போன்று பொது பல சேனா அமைப்பினரும் அளுத்கமை கலவரத்தின் பின்னணியில் முன்னாள் ஆட்சியாளர்கள் தான் இருந்தார்கள் என்ற விடயத்தை கூறியுள்ளது.பொது பல சேனா அமைப்பானது இக் கலவரம் தொடர்பில் கதைக்கப்படும் போதெல்லாம் இக் கலவரம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுங்கள் என தைரியமாக கூறுகிறது.இவ்விடயமானது இது தொடர்பில் ஆராயும் போது பல முக்கியமானவர்கள் அகப்படுவார்கள் என்பதை மறைமுகமாக கூறுகிறது.இன்று மஹிந்த அணியினரை எவ்வாறு பொறியில் மாட்டி தங்களது விடயங்களை சாதிக்கலாமென இவ்வரசு சிந்தித்துக் கொண்டிருக்கின்றமையை பிரபல ரக்பி வீரர் தாஜுதீன் போன்றோர் கொலைச் சம்பவத்தை மிகுந்த கரிசை கொண்டு விசாரிப்பதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.தாஜுதீன் கொலைச் சம்பவத்தை விட அளுத்கமை கலவரமானது மிகவும் பாரதூரமானது.இவ்வரசு ஏன் இதனை விசாரிக்க தயங்குகிறது? இவ்வாறான பல கேள்விகளை தொடுத்தும் பல சம்பவங்களை தொடர்பு படுத்தியும் பார்க்கின்ற போது இக் கலவரத்தின் பின்னால் இவ்வரசின் முக்கியஸ்தர்கள் உள்ளமை தெளிவாகிறது.அளுத்கமை கலவரம் திட்டமிடப்படாமல் எதேச்சையாக நடந்த ஒன்றா என்ற சந்தேகம் முஸ்லிம்களிடையே சிறிது உள்ளது.இது தொடர்பான அரசியல் முக்கியஸ்தர்களினதும் பொது பல செனாவினதும் கூற்றுக்களை அவதானிக்கின்ற போது இது ஏலவே நன்கு திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று தான் என்பதை துல்லியமாக்கின்றது.அளுத்கமை விடயத்தை வைத்து பேரின அரசியல் நன்கு இடம்பெறுவதும் இதில் பொதிந்துள்ள மற்றுமொரு செய்தியாகும்.இதனை வைத்து பார்க்கும் போது அரசியல் இலாபம் கருதியும் இவ்விடயம் இடம்பெற்றிருக்கலாம் என்பதை ஊகிக்க முடிகிறது.இதுவே முஸ்லிம்களிடமிருந்து மஹிந்தவை பூரணமாக பிரித்தெடுத்த நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இவைகள் பற்றி பேரின அரசியல் வாதிகள் அலசும் போதெல்லாம் அவர்கள் விடும் பிடியை வைத்து இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லிம் அரசியல் வாதிகள் முன் வைக்க வேண்டும்.தற்போது அளுத்கமை கலவரம் என்ற ஒன்று நடந்ததை பேரின அரசியல் வாதிகள் நினைவில் வைத்துள்ள போதும் முஸ்லிம் அரசியல் வாதிகள் மறந்துள்ளமை தான் மிகவும் கவலையான விடயமாகும்.
மஹிந்த ராஜ பக்ஸவின் காலத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் அநீதியானது எனக் கருதியே இவ்வரசு அதனை சரி செய்ய முனைந்தது.இதனை அமைச்சர் பைசர் முஸ்தபா அணைத்து கட்சிகளையும் ஒன்று கூட்டி கலந்துரையாடியே வர்த்தமானிப்படுத்துவோம் என ஆரம்பத்தில் கூறியிருந்தார்.இருந்தாலும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாடாமலேயே மேன் முறையீட்டு விசாரணைக் குழுவின் அறிக்கை வர்த்தமாணிப்படுட்டுள்ளது.இது தொடர்பில் சிறு பான்மை கட்சிகள் தங்களது பலத்த கண்டனத்தை விடுத்துள்ளன.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நீதி மன்றம் செல்லவும் ஆலோசனை நடாத்தி வருகிறது.இதுவும் சிறு பான்மையினரை இவ்வரசு புறக்கணித்தமைக்கான சான்றுகளில் ஒன்றாகும்.உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டு அண்ணளவாக இரண்டு வருடங்கள் கழியப் போகின்ற போதும் இவ்வரசு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடாத்த முன் வரவில்லை.இதனை புதிய முறையில் தான் நடாத்த வேண்டும் என்ற எண்ணத்தில் காலம் தாழ்த்துவதாக நோக்க முடியவில்லை.இந்த அரசின் ஆரம்ப கால வாக்குறுதிகளில் ஒன்று தான் தொகுதி வாரியில் பாராளுமன்றத் தேர்தலை நடாத்துவதாகும்.கடந்த முறை அது பற்றி அவர்கள் சிறிதும் அலட்டிக் கொள்ளாது தேர்தலை நடாத்தி இருந்தார்கள்.இவர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் பழைய முறையில் நடாத்தினால் தான் என்ன? உள்ளூராட்சி தேர்தல் முறைமை மாற்றம் ஏற்கனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால் பழைய முறையில் நடாத்த இவ்வரசு அமைச்சரவை மற்றும் பாராளுமன்ற அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இது தற்போது பாராளுமன்றத்தில் மிகப் பெரும் பலத்தை கொண்டுள்ள இவ்வரசுக்கு பெரிய விடயமல்ல.
அரசு இத் தேர்தலை காலம் தாழ்த்துவதன் மூலம் மக்களின் வாக்குரிமையை தடுக்கின்றது.ஒரு உள்ளூராட்சி மன்றத்தின் ஆயுட் காலம் நான்கு வருடமாகும்.இரு வருடங்கள் காலம் தாழ்த்துவதானது உள்ளூராட்சி மன்றத்தின் அரை ஆயுட் காலத்தை இவ்வரசு சப்பியுள்ளது.உள்ளூராட்சி மன்றங்களை மக்கள் பிரதிநிதிகள் ஆளும் போது அவர்கள் அதனை திறம்பட செய்து காட்ட வேண்டும் என்ற தேவை உள்ளது.உள்ளூராட்சி மன்றங்கள் அந்த வகையிலேயே வடிவமைக்கப் பட்டுள்ளன.அதனை அரச அதிகாரங்கள் ஆளும் போது ஊழல்கள் அதிகம் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமுள்ளன.ஊழலுக்கு எதிரான இவ்வாட்சி ஊழலுக்கு வாசல்களை திறந்து விட்டுள்ளது.தென்,மேல் மாகாணங்களில் இடம்பெற்ற கூட்டுறவு நிறுவனங்கள் பலவற்றின் மஹிந்த தன் மிக அதிக பெரும் பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.இவ்விடயமானது உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த வெற்றி பெறுவார் என்ற செய்தியை கூறியுள்ளது.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் மஹிந்த அணியினர் தனித்து போட்டியிடுவதற்கான வாய்ப்பே அதிகம்.அவர்கள் அதிகமான சபைகளை கைப்பற்றினால் இவ்வரசின் தொடர்ச்சியான பயணம் கேள்விக்குட்படும்.தற்போது சு.க உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்பாக கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்த ஆலோசனை நடாத்துவதாகவும் அறிய முடிகிறது.கிழக்கு மாகாண சபை சிறு பான்மையினரின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதன் காரணமாக அதனை மஹிந்த கைப்பற்றுவது கடினமானதொரு விடயமாகும்.இதன் வெற்றியை காட்டி மக்களை உள்ளூராட்சி மன்றத்தின் பக்கம் திசை திருப்புவதே அவர்களின் சிந்தனையாக நினைக்க தோன்றுகிறது.
தம்புள்ளை பள்ளிவாயல் அமைந்துள்ள பிரதேசமானது புனித பூமி பிரதேசத்தினுள் அமைந்துள்ளதன் காரணமாக அதனை அகற்ற வேண்டுமென மஹிந்த காலம் தொடக்கம் இன்று வரை அங்கு அடிக்கடி பிரச்சினைகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.இது மஹிந்த காலத்தில் முஸ்லிம்கள் சந்தித்த பிரச்சினைகளில் மிக முக்கியமானதொரு பிரச்சினையாகும்.இப் பிரச்சினை துளிர்விட்ட சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜ பக்ஸ அதனை தீர்த்துக் கொள்வதற்காக நாற்பது பேச்சர்ஸ் காணியை நகர புறத்தில் வழங்கி அங்கு மிகக் குறுகிய காலத்தில் அழகிய பள்ளிவாயால் ஒன்றை நிர்மாணித்து தருவதாகவும் உறுதியளித்திருந்தார்.மஹிந்த காணி வழங்கிய அமைவிடத்தை நோக்குகின்ற போது தற்போது பள்ளிவாயல் அமைந்துள்ள இடத்தை விடவும் சகல விதத்திலும் சிறந்த இடமாகும்.இருப்பினும் எமது அரசியல் வாதிகளில் சிலர் அதற்கு உடன்படவில்லை.இதனை விட்டுக்கொடுக்கின்ற போது இனவாதிகள் இதனை முதல் வெற்றியாக கொண்டு தனது அடுத்த எட்டை வைக்க முயற்சிப்பார்கள் என்ற நியாயமும் அவர்கள் விட்டுக்கொடுக்காமையில் உள்ளது.
தற்போது தம்புள்ளை பள்ளிவாயலின் நிலைமை மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளதை அவதானிக்க முடிகிறது.அதனை வேறு இடமொன்றிற்கு மாற்றுவதற்கு முஸ்லிம் கலாச்சார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.இன்று பாரிய நகரம் மற்றும் மேற்கு பிராந்திய அமைச்சர் சம்பிக்க ரணவக்க இருபது பேர்ச்சஸ் காணியையே பள்ளிவாயலுக்கு தர முடியும் என பகிரங்கமாக கூறியுள்ளார்.இதனை எதிர்த்து எமது அரசியல் வாதிகள் யாருமே வாய் திறந்ததாக தெரியவில்லை.மஹிந்த காலத்தில் இடமாற்றுவது பிழை,மைத்திரி காலத்தில் இடமாற்றுவது சரி என்ற நிலைப்பாட்டில் எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் உள்ளனரா? மஹிந்த காலத்தில் குறித்த பள்ளிவாயலை இடமாற்றுவதற்கு முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டிருந்தால் எமது பக்க நியாயத்தை ஏற்று முஸ்லிம்கள் விட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்ற நல்லெண்ணமாவது பேரின சமூகத்திடையே ஏற்பட்டிருக்கும்.இதன் பிற்பாடு தம்புள்ளையில் இன முறுகல்கள் அடிக்கடி எழுவதை அவதானிக்க முடிகிறது.அங்கு மத நல்லிணக்கம் சீர் கெட்டுள்ளது.தற்போதைய அரசு வழங்க சிந்தித்துள்ள காணி மக்கள் வாழும் பிரதேசத்தில் இருந்து மிகவும் தொலைவில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.தம்புள்ளை பள்ளிவாயல் விடயத்தில் ஒப்பீட்டளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்து அணுகுமுறைகள் மெச்சத்தக்கவையாக அமைந்துள்ளன.
மஹிந்த ராஜ பக்ஸ 2012ம் ஆண்டு காலப் பகுதியில் கிழக்கு மாகாணத்தில் ஒரு சிறு எண்ணிக்கை தவிர்ந்த மற்ற அனைத்து பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கியிருந்தார்.இன்று இவ்வாட்சியில் கிழக்கு மாகாண பட்டதாரிகள் நடு வீதியில் நின்று கூக்குரல் இடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.இவ்வாட்சி நிறுவப்படும் போது பத்து இலட்சம் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வாட்சியில் இரு வருடங்கள் கழிந்துவிட்டனை குறைந்தது நான்கு இலட்சம் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டுமல்லவா? இவ்வாட்சி இலங்கையை அபிவிருத்தி பாதையில் கொண்டு செல்வதை அவதானிக்க முடியவில்லை.இவ்வட்சியால் ஏன் அபிவிருத்தி செய்ய முடியாதுள்ளதென கேட்கும் போதெல்லாம் மகிந்த ராஜ பக்ஸ இந் நாட்டை கடன் எடுத்து ஓட்டியதாகவும் அதனை சமாளிக்கவே திண்டாடுகின்றோம் என்ற பாணியில் இவ்வாட்சியாளர்கள் பதில் அளிக்கின்றனர்.மஹிந்த ராஜ பக்ஸ தனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் கூட இலங்கை நாட்டடை அபிவிருத்தியில் நனைக்கச் செய்திருந்தார்.தான் முதன் முதலில் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றான உர மாணியத்தை 350 ரூபாய் விலையில் தனது ஆட்சிக் காலத்தின் இறுதி வரை எந்த வித குறைபாடுகளும் இன்றி வழங்கி வந்தார்.தற்போது இவ்வரசு உர மாணியத்தை பதிலாக பணம் வழங்குகின்றது.அவ்வாறு வழங்கப்படும் பணம் தங்களுக்கு தேவையான உர மானியாய்த்தை பெற்றுக்கொள்ள போதுமற்றதென விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மஹிந்த காலத்தில் இருந்ததை போன்றல்லாது இலங்கையின் தலை நகரம் பொலிவிழந்துள்ளது.தலை நகரில் போதை பொருள் பாவனை மீண்டும் தலை தூக்கியுள்ளது.பாதாள உலக அணியினர் மீண்டும் உருவாகியுள்ளனர்.தலைநகரில் செல்லுமிடமெல்லாம் நாளாந்தம் பல அமைப்பினர் ஆர்ப்பாட்டம் செய்வதை அவதானிக்க முடிகிறது.இதற்கெல்லாம் கூட மஹிந்த தான் காரணம் என குற்றம் சாட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
குறிப்பு: இக் கட்டுரை இன்று 15-03-2017ம் திகதி திங்கள் கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 79வது கட்டுரையாகும்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.