சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை தொடர்ந்து கடும்சரிவைச் சந்தித்து வருவதால் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ள சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் சமீபகாலமாக பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. பொருளாதார நெருக்கடியால் தள்ளாட்டம் போட்டுவரும் சவுதி அரேபியாவை சரிவில் இருந்து மீட்கும் அரசின் முக்கிய நடவடிக்கையாக சவுதி நாட்டு மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் தற்போது ஜப்பான், சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்து அந்நாட்டின் பொருளாதாரச் சரிவை சமநிலைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மேலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பொருளாதார நெருக்கடியில் இருந்து சவுதி அரேபியாவை விடுவிப்பது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த சவுதி நாட்டு பட்டத்து இளவரசர் முஹம்மது-பின் சல்மான் கடந்த 13-ம் தேதி வாஷிங்டன் நகருக்கு வருகை தந்தார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை வெள்ளை மாளிகையில் நேற்று சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்க தொழில் நிறுவனங்கள் சவூதி அரேபியாவில் முதலீடு செய்வது குறித்து இரு தலைவர்களும் பேசினர். மேலும், சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்பட்டது.
இரு தலைவர்களின் சந்திப்பு இருநாடுகளுக்கிடையேயான உறவில் பெரிய திருப்பு முனையாக இருக்கும் எனவும், சவூதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா தேவையான உதவிகள் செய்ய உறுதியளித்துள்ளதாகவும் சவூதி இளவரசருக்கான ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் இளவரசர் சல்மானுக்கு டிரம்ப் வெள்ளை மாளிகையில் விருந்தளித்தார். அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டிரம்ப் முதன் முறையாக சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.