ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான சட்டமூலத்திற்கு அந்நாட்டு பாராளுமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், குறித்த சட்டமூலத்தில் பிரித்தானிய மகாராணி அனுமதியளித்த பின்னர் சட்டவடிவம் பெறும் என அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகுவதற்கு அனுமதி பெறுவதற்கான சட்ட மூலம் பிரித்தானிய பாராளுமன்றத்தின் பிரபுக்கள் சபையில் இரண்டு முறை தோல்வி அடைந்தது.
அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் பிரித்தானியா பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, மூன்று மாதங்களுக்கு முன்னர், ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியுரிமையை பாதுகாப்பது தொடர்பாக உறுதி செய்யப்பட வேண்டும் என பிரபுக்கள் சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
எனினும், நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தங்களை பிரித்தானிய பாராளுமன்ற கீழவை நேற்று வாக்கெடுப்பின் மூலம் நிராகரித்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்து கடந்த ஆண்டு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரித்தானியா வெளியேற வேண்டும் என தெரிவித்து 52 வீதமான மக்கள் வாக்களித்திருந்தனர்.
இதனையடுத்து பிரதமராக பதவி வகித்த டேவிட் கெமரோன் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.