நாமல் ராஜபக்ஸவின் கூற்றை முஸ்லிம் சமூகம் சிந்திக்குமா?
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் இடம்பெற்ற முஸ்லிம்களுடனான உரையாடலின் போது முஸ்லிம்கள் தொடர்பான பல்வேறு உண்மைகளை போட்டு உடைத்தார்.அந்த உண்மைகளில் மிக முக்கியமானது கண்டியில் இடம்பெற்ற பொது பல சேனாவின் முதலாவது கூட்டத்திற்கு ஜாதிக ஹெல உருமயவே அனுமதி எடுத்து கொடுத்ததாக கூறியுள்ளார்.
இன்று ஒட்டு மொத்த ராஜபக்ஸ குடும்பத்தின் மீதும் பொது பல சேனாவின் காவலன் என்ற குற்றச் சாட்டு முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தபாய ராஜபக்ஸ பொது பல சேனாவின் காலி காரியாலயத்தை பிரதம அதிதியாக சென்று திறந்து கொடுத்தமையாலேயே விழுந்ததென்றால் மிகையாகாது.ஒருவரை அதிதியாக அழைத்தால் அங்கு அரசியல் முக்கியஸ்தர்கள் செல்வது வழமை.அந் நேரத்தில் பொது பல சேனா அமைப்பானது ஒரு சர்ச்சைக்குரிய அமைப்பாகவும் தோன்றியிருக்கவில்லை.
ஏன் ஜாதிக ஹெல உருமய பொது பல சேனாவின் கண்டி கூட்டத்திற்கு அனுமதி எடுத்து கொடுக்க வேண்டும்? இந்த அரசாங்கத்தை எதிர்த்து முதலில் வெளியேறிய பெருமையும் இந்த ஜாதிக ஹெல உருமயவையே சாரும்.பொது பல சேனா அமைப்பை முஸ்லிம்களுக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த அணியினர் பயன்படுத்த நினைத்திருந்தால் கோத்தபாய ராஜபக்ஸவை பிரதம அதிதியாக அனுப்பியிருப்பாரா? இவற்றை நன்றாக தொடர்புபடுத்தி பார்த்தால் பொது பல சேனாவின் பின்னணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அணி இல்லை என்பதும் இவ் அமைப்பானது முஸ்லிம்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து பிரிக்க நன்கு திட்டமிடப்பட்ட அணி என்பதும் உறுதியாகிறது.
இங்கு இன்னுமொரு மிக முக்கியமான விடயம் இவற்றின் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தான் உள்ளார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உட்பட கூட்டு எதிர்க்கட்சியை சார்ந்த பலரும் கூறி வருகின்ற போது அமைச்சர் சம்பிக்க எந்த பதிலும் வழங்கவில்லை.இதிலிருந்தாவது இதன் பின்னணியில் சம்பிக்க போன்றவர்களின் திட்டமிடல்கள் உள்ளமையை ஏன் இந்த முஸ்லிம் சமூகம் சிந்திக்க மறுக்கிறது?
மனதில் ஆளப் பதிந்த விடயங்கள் அவ்வளவு இலகுவில் மனதை விட்டகலாது.இருந்தாலும் இன்னும் முஸ்லிம் சமூகம் இதனை சிந்திக்க மறுப்பது ஆரோக்கியமானதல்ல.
தொடரும்….
அ.அஹ்மட்
(joint opposition tamil media unit director)