பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்கள் அமைச்சர் ரிஷாட்டுடன் சந்திப்பு
பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பள்ளி வாசலுக்கு தேவையான புனரமைப்பு வேலைகளுக்கு உதவியளிப்பதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் உறுதியளித்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மஜ்லிஸின் பிரதிநிதிகள் அமைச்சர் ரிசாட் பதியுதீனை கண்டி பொல்கொல்லையில் அமைந்துள்ள கூட்டுறவுக்கல்லூரியில் சந்தித்து முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு கஷ்டங்கள் குறித்து விபரித்தனர்.
குறிப்பாக இஸ்லாமியக் கடமைகளை மேற்கொள்வதில் தாங்கள் எதிர்நோக்கும் சிரமங்களை அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர். பள்ளிவாசலின் திருத்த வேலைகள் இருப்பதாகவும் வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகைக்கென சில வசதிகளை செய்து தருமாறும் அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட அமைச்சர் திருத்த வேலைகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
பேராதனைப் பல்கலைக்கழக 2ஆம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக விடுதி கிடைப்பதில்லையாகையாகையால் அவர்கள் வேறு இடங்களில் தங்கிப் படிப்பதில் கஷ்டங்கள் இருப்பதாக தெரிவித்த அவர்கள் அதற்கான மாற்று வழியொன்றையும் அமைச்சரிடம் பிரஸ்தாபித்தனர்.
கடந்த வருடம் நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் மாணவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சர் ரிஷாட்டின் ஏற்பாட்டில் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவுடனும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடனும் தனித்தனியாக நடாத்திய சந்திப்பின் பின்னர் முஸ்லிம் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சர் ரிஷாட் கேட்டறிந்தார்.
இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில் மீண்டும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவை தாம் சந்தித்து பேச்சு நடாத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் லங்கா சீனி கூட்டுத்தாபனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பௌசர், அமைச்சரின் ஆவணக்காப்பாளர் முனவ்வர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.