இறுதிப் போட்டிக்கு செல்லப்போவது யார் ?

21-1432191543-msdhoni-kohli-ipl8-600

 ஐ.பி.எல்., இரண்டாவது தகுதிச்சுற்றில் தோனியின் சென்னை அணியும், கோஹ்லியின் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி பைனலுக்கு செல்லும் என்பதால், இரு அணியும் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றன. 

 எட்டாவது ஐ.பி.எல்., தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 24ம் தேதி நடக்கும் பைனலுக்கு மும்பை அணி ஏற்கனவே முன்னேறிவிட்டது. இன்று ராஞ்சியில் நடக்கும் 2வது தகுதிச்சுற்றில் சென்னை, பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு செல்லும்.  
 சென்னை அணியை பொறுத்தவரையில் லீக் சுற்றில் அசத்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது. இருப்பினும், ‘தகுதிச்சுற்று-1’ ல் மும்பையிடம் வீழ்ந்த சோகத்தில் உள்ளது. அணியின் துவக்க வீரர் பிரண்டன் மெக்கலம் இல்லாதது பெரிய இழப்பாக உள்ளது. இவருக்குப் பதில் வந்த மைக்கேல் ஹசி, பந்துகளை எதிர்கொள்ளவே தடுமாறுகிறார். இதனால் டுவைன் ஸ்மித், டுபிளசி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

  
 லீக் சுற்றில் பெங்களூருவுக்கு எதிராக இரண்டு அரைசதம் (52, 62) கடந்த ரெய்னா, மீண்டும் ‘பார்மிற்கு’ திரும்பினால் நல்லது. தவிர, சொந்தமண்ணில் விளையாடும் கேப்டன் தோனி, ஜடேஜா, நேகி, டுவைன் பிராவோவும் ரன் குவிப்பது அவசியம்.  
 நெஹ்ரா நம்பிக்கை: வேகப்பந்துவீச்சில் பெங்களூருவுக்கு எதிரான 2 போட்டியிலும் 7 விக்கெட் வீழ்த்திய நெஹ்ரா, இத்தொடரில் அதிக விக்கெட் சாய்த்த பிராவோ (23), மோகித் கூட்டணி கைகொடுக்க வேண்டும். சுழலில் அஷ்வின், ஜடேஜா, நேகி என, மூன்று பேர் இருந்தும் விக்கெட் வேட்டை அதிகமாக இல்லாதது ஏமாற்றம்.  
 கெய்ல் வருகை: பெங்களூரு அணியின் லீக் சுற்றில் சென்னை அணிக்கு எதிராக இரு முறையும் களமிறங்காத கெய்ல், கோஹ்லி, டிவிலியர்ஸ் என, மூன்று பேரை எப்படி சமாளிக்கின்றனர் என்பதைப் பொறுத்து தான் சென்னை அணியின் வெற்றி அடங்கியுள்ளது. தவிர, இவர்களுடன் மன்தீப் சிங்கும் அதிரடி காட்டுவது பெங்களூருவுக்கு பலம் தான். தவிர, ‘எலிமினேட்டர்’ போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிராக பெற்ற இமாலய வெற்றியும் கூடுதல் நம்பிக்கை தந்துள்ளது. ‘மிடில் ஆர்டரில்’ தினேஷ் கார்த்திக் ஏமாற்றம் தொடர்வது சோகம்.  
ஸ்டார்க் பலம்: வேகப்பந்து வீச்சில் மிட்சல் ஸ்டார்க், அரவிந்த், ஹர்சால் படேல், டேவிட் வைஸ் என வேகக்கூட்டணி அசத்துகிறது. இன்றும் இவர்களின் விக்கெட் வேட்டை தொடர்ந்தால், சென்னைக்கு பெரும் தொல்லையாகி விடும். சுழற்பந்துவீச்சாளர் சகால் அதிக ரன் விட்டுத்தருவதை கட்டுப்படுத்த வேண்டும்.  
 இந்திய ஒருநாள், ‘டுவென்டி-20’ அணியின் கேப்டன் தோனி, டெஸ்ட் அணியின் கேப்டன் கோஹ்லி என, இரு கேப்டன்களும் மோதுவதால், பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
யாருக்கு வாய்ப்பு
ஐ.பி.எல்., அரங்கில் சென்னை, பெங்களூரு அணிகள் இதுவரை 19 முறை மோதியுள்ளன. இதில் சென்னை 11, பெங்களூரு 7 போட்டிகளில் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை. இம்முறை இவ்விரு அணிகள் மோதிய 2 போட்டியிலும் சென்னை அணி வென்றது.  

மழை வருமா  
ஐ.பி.எல்., தொடரில் இன்று 2வது தகுதிச் சுற்று போட்டி நடக்கும் ராஞ்சியின் வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 40, குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசாக இருக்கும். வானம் தௌிவாக இருக்கும் என்பதால் மழை வர வாய்ப்பு இல்லை.