அரசின் புதிய மீன்பிடி விதிமுறைகளால் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மீன்பிடி கடற்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கவனத்துக் கொண்டு வந்ததுடன், அதற்குத் தீர்வினையும் பெற்றுக் கொடுத்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் அமைச்சர் அமரவீரவை சந்தித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மட்டு மாவட்டத்தில் மட்டக்களப்பு, கல்லடி, பூநொச்சிமுனை மற்றும் காத்தான்குடி மீனவர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடியதுடன் அது சம்மந்தமான மகஜர் ஒன்றினையும் கையளித்தார்.
அரசின் புதிய மீன்பிடி விதிமுறைகளுக்கு அமைவாக, கடலில் பல நாள் தங்கும் ஆழ்கடல் மீன் பிடிப்பாளர்கள் மற்றும் மீன் பிடிப்படகுகள் துறைமுகங்களில் இருந்தே மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என்ற சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இதனால், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு, கல்லடி, பூநொச்சிமுனை மற்றும் காத்தான்குடி மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீன்பிடித் துறைமுகம் இல்லாத காரணத்தினால் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்துக்கு அல்லது ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்துக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு பல சிரமங்களையும் – அசௌகரியங்களை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்மந்தமாக பூநொச்சிமுனை ஆழ்கடல் மீன்பிடி சங்கம் மற்றும் பூநொச்சிமுனை கிராமிய கடற்தொழில் அமைப்பு என்பன மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவரும், இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் கவனத்துக்கு கொண்டு வந்தன.
இந்த விடயம் தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் மீன்பிடி கடற்தொழில் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், இப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கையின் பலனாக, மட்டக்களப்பு, கல்லடி, பூநொச்சிமுனை மற்றும் காத்தான்குடி மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூநொச்சிமுனை கடற்கரையில் ஆழ்கடல் மீனவர்களை பதிவு செய்யும் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் புதிய கிளை காரியாலயம் ஒன்றை அமைத்துத் தருவதாக அமைச்சர் அமரவீர உறுதியதித்ததுடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மீன்பிடி கடற்றொழில் அமைச்சின் பணிப்பாளரோடு கலந்துரையாடி மேற்கொள்வதாக தெரிவித்தார்.