ஹஸனலி, பஷீர் போன்றோர் வெளியேறி அமைக்கும் கூட்டு, வெறும் பிரமுகர்களின் கூட்டாக இருக்கும் என்று ஆருடம் சொன்ன ஹகீம் அவர்கள் இன்றைய நிந்தவூர் சனத்தைப் பார்த்ததும் நித்திரை தொலைத்திருப்பார் என்று கிழக்கின் எழுச்சியின் செயலாளர் சேகு இஸ்ஸடீன் அஸ்ஸுஹூர் நேற்றைய நிந்தவூர் கூட்டம் பற்றி கேட்டபோது கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
கிழக்கின் எழுச்சி ஹகீம் அவர்களின் தலைமைத்துவ குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி விமர்சிக்க ஆரம்பித்து, ஹகீம் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல என்ற தெளிவை மு.கா உயர் பீட உறுப்பினர்கள் மத்தியிலும், கட்சி போராளிகள் மத்தியிலும் உருவாக்கியது. இதன் பின்னரே கட்சிக்காரர்களால் பரவலாக ஹகீம் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
தலைமை கிழக்கிற்கு வேண்டும் என்ற கோஷத்தை கிழக்கின் எழுச்சி மக்கள் மயப்படுத்தியிருந்த போதும், ஹஸனலி அவர்களின் தலைமையை திருத்தி மீண்டும் ஹகீமையே தலைவராக வைத்திருக்க வேண்டும் என்ற வாதத்தை மக்கள் அங்கேயே மறுத்ததும், அந்த கருத்துக்கு எதிராக கூச்சல் இட்டதும் கிழக்கின் எழுச்சியின் வெற்றியாகும்.
ஹகீம் மீது அத்தனை குற்றச் சாட்டுக்களையும் சுமத்தி, அவர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் செய்த துரோகங்களையும் பட்டியலிட்ட பின்னர், ஹகீமையே முஸ்லிம்களின் தலைவராக சாட்ட முனைவது, முஸ்லிம்கள் ஹகீமின் தலைமைத்துவத்திற்குத்தான் லாயக்கானவர்கள் என்று அவரே முடிவு கட்டியதனாலா?
கல்லெறிந்து கொல்லப்பட வேண்டிய நபரை, தொடர்ந்தும் முஸ்லிம்களின் தலைவராக இருக்கச் சொல்வது அவர் இன்னும் சூழ்நிலையின் கைதியாகவே இருக்கின்றார் என்பதையே காட்டுகின்றது. ஆனால் அவரின் இந்த நிலைப்பாட்டில் கிழக்கின் எழுச்சி முற்றிலுமாக நிராகரிக்கின்றது.
மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அவர் தன் நிலைப்பாட்டை மாற்றி தலைமையை கிழக்கிற்குக் கொண்டு வர முயல வேண்டும், இல்லை என்றால் கிழக்கின் எழுச்சி அவருக்கான ஆதரவை மறு பரிசீலனை செய்ய வேண்டியது வரும் என்றார்.