ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்ததன் பின்னரே ஜனாதிபதியும் பிரதமரும் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக பாராளுமன்றத்தை கலைத்தல் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நாட்டில் புதிய அரசாங்கம் பதவியேற்கும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ள நிலையில் ஜூன் மாத நடுப்பகுதியில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அதற்கு முன்னதாகவே பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சி கோரிவருகின்றது.
ஆனால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைக்கொண்டுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமாக தேர்தல் முறை மாற்றத்தைக்கொண்டு வந்த பின்னரே பாராளுமன்றத்தை கலைக்கவேண்டும் என்று வலியுறுத்திவருகின்றது.
இந்நிலையிலேயே நேற்றைய தினம் ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயம் குறித்து மிக நீண்டநேரம் ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.