அம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணப்பணிகள் பொருட்டு காணிகள் வழங்கிய அனைவருக்கும் இழப்பீடுகளை வழங்கும் பணிகளை எதிர்வரும் நாட்களில் நிறைவு செய்வதற்கு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு நடவடிக்கையெடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கருத்துரைத்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டதாவது,
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியின் பொருட்டு காணிகளை வழங்கிய அனைத்து மக்களிற்கும் சாதாரணத்தை நிலைநாட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் குறிக்கோளாகும். காணிகளை வழங்கியதன் மூலமாக தம்முடைய இருப்பிடங்களை இழந்தவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது, காணிகளை இழந்தவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கும் பொருட்டு மற்றும் அம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பொருட்டு அரசாங்கம் ரூபாய் 2 பில்லியன்கள் நிதியை ஒதுக்கியுள்ளது. இந்நிதியை உரிய முறையில் பயன்படுத்துமாறு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அதிகாரிகளிற்கு ஆலோசனை வழங்கினார். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி காரணமாக காணிகளை இழந்த மக்களுக்கு இழப்பீடுகள் வழங்கும் செயன்முறை தொடர்பாக கலந்துரையாடும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலேயே அமைச்சர் இக்கருத்தை வெளியிட்டார். அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி உள்ளடங்கிய அரச அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்ட இக்கலந்துரையாடலானது துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சில் இன்று (2) நடைபெற்றது.
அம்பாந்தோட்டை துறைமுக திட்டத்தில் தற்பொழுது இரு கட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இத்திட்டத்தில் முதலாம் கட்ட நிர்மாணப் பணிகளின் பொருட்டு 1115 ஹெக்டேயர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இவற்றுள் 463 நிலபரப்புகள் உள்ளடங்கும். கையகப்படுத்தப்பட்ட நிலங்களிற்கு பதிலாக வேறு நிலங்களை வழங்குவதற்கும் நிலத்தின் மற்றும் அதன் அபிவிருத்தி பெறுமதியை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடுகளை வழங்கும் செயன்முறை தற்பொழுது முழுமையாக நிறைவடைந்துள்ளது.
அதன் பொருட்டு செலவிடப்பட்ட ரூபாய் 511 மில்லியன்கள் இலங்கை துறைமுக அதிகார சபையினால் வழங்கப்பட்டது. எது எவ்வாறாயினும் இரண்டாம் கட்டத்தின் பொருட்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் பொருட்டு பொது திறைசேரியால் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சிற்காக வழங்கப்பட்ட ரூபாய் 2 பில்லியன்கள் நிதி பயன்படுத்தப்படும். இலங்கை துறைமுக அதிகார சபையிடம் போதியளவு நிதியின்மையினால் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கமைவாக பொது திறைசேரியானது துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சிற்கு நிதியை ஒதுக்கியது.
பொது திறைச்சேரி எமக்கு வழங்கிய ரூபாய் இரண்டு பில்லியன்கள் நிதியை கொண்டு 237 காணிகளிற்கு நிலம் மற்றும் அபிவிருத்தி பெறுமதிகளை அடிப்படையாகக் கொண்டு முழுமையான இழப்பீடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் 129 காணிகளிற்கு அதன் மொத்த பெறுமதியில் 75 வீதம் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. ரூபாய் இரண்டு பில்லியன்களில் இச்செயற்பாடு ரூபாய் 892, 532, 701 .15 சதம் செலவிடப்பட்டுள்ளது. மிகுதியான இழப்பீட்டு தொகையை வெகு விரைவாக வழங்குவதற்கு நாம் நடவடிக்கையெடுத்துள்ளோம்.
நாம் வழங்கிய வேறு நிலங்களின் வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் மின்சாரம் மற்றும் நீர் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கையெடுத்துள்ளோம். இச்செயற்பாட்டின் பொருட்டு பொது திறைசேரியால் எமக்கு வழங்கப்பட்ட இரண்டு பில்லியன்கள் நிதி செலவிடப்படும். அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியின் பொருட்டு மிகவும் வறுமையான மக்களே காணிகளை வழங்கியுள்ளார்கள். கடந்த அரசாங்கமானது காணிகளை இழந்த இம்மக்கள் எதிர்கொள்ள நேரிட்ட துன்பங்கள் பற்றி போதிய கவனம் செலுத்தவில்லை. அம்மக்களின் வீடுகளை எடுத்தார்களேயொழிய அம்மக்களை பாதுகாக்கவில்லை. அன்று இழைக்கப்பட்ட தவறை திருத்திக்கொள்ளவே நாம் இன்று முயற்சிக்கின்றோமென´ இக்கலந்துரையாடலின் பொழுது அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேலும் குறிப்பிட்டார்.