நிதியமைச்சர் தனது பதவியை கைவிட வேண்டும் : பந்துல குணவர்தன

அறிக்கை வெளியிடுவது சம்பந்தமாக அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் முறைசாரா செயற்பாடு குறித்து அவருக்கு சிறிதளவேனும் வெட்கம் இருந்தால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க எட்டு விடயங்களுடன் கூடிய நிதியமைச்சின் அறிக்கை என்று பகிரங்க அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விற்பனைக்கு முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக அறிக்கையில் நிதியமைச்சர் கூறியுள்ளார்.

எனினும் அந்த அறிக்கை நிதியமைச்சின் அறிக்கை அல்ல. அது நிதியமைச்சரின் ஊடக செயலாளர் வெளியிட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் கூறியுள்ளார் என்பதால், பொறுப்பு சம்பந்தமாக ஒரு நிலையற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக நிதியமைச்சர் தனது பதவியை கைவிட வேண்டும் எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.