கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்னெத்தி மற்றும் ஜே.வி.பி கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட ஜே.வி.பி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆறு புதிய ரக அதிசொகுசு வாகனங்களை கொள்வனவு செய்துள்ளனர் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த ஆடம்பர வாகனங்கள் ஆறும் தாய்லாந்தில் இருந்தே இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச வாகன அனுமதி பத்திரத்தின் கீழ் புதிய ஆடம்பர Toyota Hilux 4wd Diesel Double ரக வாகனங்களே கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வருடம் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியே குறித்த வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என்றும் குறித்த வாகனத்தின் இறக்குமதிக்கான மொத்த வரி ரூபா 30 மில்லியன் என சுங்கத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வரி அதிகரிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறு ஆடம்பர வாகனங்களை வரி செலுத்தாமல் இறக்குமதி செய்வதால் அரசாங்கத்திற்கு பாரியளவு நட்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகன இறக்குமதி தொடர்பில் உரிய அதிகாரிகள் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் குறித்த பட்டியலில் அனுர குமார திஸாநாயக்க, சுனில் ஹந்துன்னெத்தி, பிமல் ரத்னாயக்க, நலிந்த ஜயதிஸ்ஸ, விஜித ஹேரத், நிஹால் கயபத்தி ஆகியோரின் பெயர்கள் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.