மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது: –
ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அப்போதுதான், மக்களுக்கு அனைத்தும் வெளிப்படையாக தெரியவரும். ஜெயலலிதாவின் சிகிச்சை பற்றி ஓ.பன்னீர் செல்வம் எந்தக் கேள்வியையும் எழுப்பவில்லை. மருத்துவமனையில் பார்க்க அனுமதிக்கப்பட வில்லை என்று மட்டுமே கூறினார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி அபராதத்தை கடன் வாங்கி செலுத்துவேன். இதில் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் நானே தனியாக செலுத்துவேன்.
சகோதரி தீபாவுடன் எனக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை. அதேசமயம் தீபாவின் அரசியல் ஆர்வத்திற்கு நான் ஆதரவாக இல்லை. ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டனுக்கு நானும் தீபாவும் மட்டுமே உரிமையாளர்கள். அங்கு சசிகலா வசிப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான முறையில் ஆட்சி நடத்துகிறார்.
என்னைப் பொறுத்தவரையில் அ.தி.மு.க. உடையக் கூடாது. ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம். ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் தலைவராக விரும்பினால் ஆகலாம். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை ஓ.பன்னீர் செல்வம் ஏற்றது தான் வருத்தமளிக்கிறது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிளவு தற்காலிகமானது தான்.
சசிகலா என் தாய்க்கு சமமானவர். அதற்காக அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை நான் விரும்பவில்லை. டி.டி.வி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டதை அடிப்படை தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள். தினகரனை விட ஓ.பன்னீர் செல்வம் அனுபவமுள்ளவர், தகுதியும் திறமையும் கொண்டவர். தினகரனை நான் எதிர்க்கவில்லை, அவர் தலைமையை தொண்டர்கள் விரும்பமாட்டார்கள் என்பதே எனது கருத்து.
இவ்வாறு கூறியுள்ளார்.