எங்கேயும், எப்போதும் ஹெட்போன் என இருப்பது தான் இப்போதைய பேஷன். செல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும். அதனால் ஹெட்போனைப் பயன்படுத்துவது நல்லது தானே என்பார்கள் விவரம் தெரிந்தவர்கள். ஆனால் ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அது வேறு சில பிரச்சினைகளுக்கு நம்மை கொண்டு சென்றுவிடும்.
எந்நேரமும் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படும். அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு ‘சென்ஸரி நியூரல் லாஸ்‘ எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். மேலும் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படும். சாலை விபத்துகளில் கணிசமான விபத்துகள் ஹெட்போனில் பாட்டுக் கேட்டபடி வாகனம் ஓட்டுவதால் தான் நடக்கிறது.
தொடர்ச்சியாக ஹெட்போன் பயன்படுத்தும்போது, காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே தங்க ஆரம்பிக்கும். இது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பை ஏற்படுத்தும். அதிக இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது வலி வரும். ஹெட்போன் பழக்கத்தினால் தற்போது இளவயதிலேயே கேட்கும் திறன் பாதிக்கிறது. இதனால் வயதானவர்கள் பயன்படுத்தும் காது நன்றாக கேட்பதற்கான மெஷின்களை இளம் வயதிலேயே பயன்படுத்த நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அதிகமாக ஹெட்போன் பயன்படுத்தினால் மன ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள். ஹெட்போன் மாட்டிக்கொண்டே பணியில் ஈடுபடும்போது நாம் செய்யும் வேலையில் கவனம் இருக்காது. இதனால் வேலையை சரியாக செய்ய முடியாது. டிரைவிங், வாக்கிங் என எப்போதும் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பதால், வேலையை மெதுவாகத்தான் செய்ய முடியும் அல்லது தவறாக செய்ய நேரிடும். இதனால் கால விரயமும், சில சமயங்களில் பிரச்சினைகளும், விபத்துகளும் ஏற்படுகிறது. சிலர் ஹெட்போனில் பாட்டு கேட்டபடியே சாப்பிடுவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு சாப்பாட்டில் கவனம் இருக்காது.
சுற்றி இருப்பவர்கள் நம்மை விட்டு விலகி இருக்க ஹெட்போன் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. மற்றவர்களுடன் மனம் விட்டு பேச வேண்டிய நேரங்களில் அதை தவறவிடும் சூழ்நிலை ஏற்படும். பிரச்சினையான நேரங்களில், இசையை கேட்பது மன அழுத்தத்தை குறைக்கும் என சிலர் நம்புகிறார்கள். மீண்டும் அந்த பிரச்சினை வெடிக்கும்போது அவர்களால் திடீரென முடிவெடுக்க முடியாமல் பெரிய மன அழுத்தத்துக்கு உள்ளாகிறார்கள்.
தொடர்ந்து ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும். ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு ‘ஆடிட்டரி ஹாலுசினேஷன்‘ என்ற மனநோய் வரும். இதனால் அவர்களுக்கு ஹெட்போனை கழற்றிய பிறகும் பாடல்கள் ஒலிப்பது போலவும், யாராவது பேசுவது போலவும் இருக்கும்.
மன அழுத்தத்துக்கு ஹெட்போன் மூலம் இசையை கேட்பது தற்காலிக தீர்வு மட்டும் தான். ஒரு புத்துணர்வுக்காக மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டுமே தவிர, இதற்கு அடிமையாவது கூடுதல் பிரச்சினையையே தரும். தனிமையிலிருந்து தப்பிக்க சுற்றி உள்ளவர்களிடம் பழகுங்கள். பிரச்சினைகளை மற்றவர்களிடம் மனம் திறந்து சொல்லுங்கள்.. மனபாரம் குறையும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.