தனக்கிருந்த நிறைவேற்று அதிகாரத்தை தான் முதலில் பயன்படுத்தியது முன்னாள் பிரதம நீதியரசரை நீக்குவதற்காகவே என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
நான் அமைச்சராக இருந்து, 42 நாட்களுக்குள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, 24 மணித்தியாலங்கள் கடந்து சென்றிருந்த போது 2015 ஜனவரி 10ம் திகதி இரவு, நீதித்துறையில் உயர் பதவியில் இருக்கும் அந்த நபர் தன்னிடம் வந்து, தன்னை நீக்கப் போவதாக கேள்வியுற்றது பற்றி கேட்டறிவதற்காக இங்கு வந்தேன் என்று கூறியதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
அப்போது அவர் “சார், நான் சார் கூறுவது போன்று நடந்து கொள்கின்றேன்” என்று கூறியதாகவும், அந்த சந்தர்ப்பம் வரை நீக்குவது பற்றி எந்த தீர்மானமும் எடுத்திருக்கவில்லை என்று நீதித்துறையில் உயர் பதவியில் இருக்கும் அந்த நபரிடம் கூறி அனுப்பியதாகவும் ஜனாதிபதி இங்கு நினைவுபடுத்தினார்.
இதற்கு முன்னர் வழக்குகளின் தீர்ப்பு எவ்வாறு அமைந்திருக்கும் என்று தான் அப்போது சிந்தித்துப் பார்த்ததாகவும் ஜனாதிபதி கூறினார்.
பின்னர் அடுத்த நாளும் முன் அறிவித்தலின்றி தன்னை வந்து சந்தித்து, “தேவையான விதமாக நடந்து கொள்வதற்கு தான் தயார் என்றும், தன்னை பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டதாக ஜனாதிபதி கூறினார்.
அவர் நாட்டின் நீதித்துறையில் உயர் பதவியில் இருப்பதால் நாட்டுக்கும், நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைக்கும் பாரிய பாதிப்பு ஏற்படும் என்று தான் அந்த சந்தர்ப்பத்தில் விளங்கிக் கொண்டு, அவரை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாக ஜனாதிபதி கூறினார்.
அரசாங்கம் என்ன செய்தது என்று கேள்வி எழுப்புவோர், நாடு இருந்த நிலமையையும் தற்போது இருக்கின்ற நிலமையையும் தௌிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
வரகாபொல வைத்தியசாலையில் நவீன உபகரணங்களுடன் சகல வசதிகளுடனுமான 06 மாடிக் கட்டிடத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருந்தார்.