உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவதூறு வழக்கை தாக்கல் செய்ய உள்ளதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவதூறு வழக்கொன்றை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யும் வேலைத்திட்டத்தின் 8வது வெளிப்படுத்தலாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படும் என உதய கம்மன்பில நேற்று கூறியிருந்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் கருணாநாயக்க,

எனக்கு எதிரான இந்த குற்றச்சாட்டானது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட பிரச்சினை. சட்டமா அதிபர் திணைக்களம் முன்வைத்துள்ள சகல விடயங்களும் என்னிடம் உள்ளன.

அவற்றை பார்த்தால் எந்த அடிப்படையில் இந்த கொடுக்கல் வாங்கல் நடைபெற்றது என்பதை தெளிவாக சரியாக அறிந்து கொள்ள முடியும்.

நான் தொழில் சார் நிபுணர் என்ற அடிப்படையில் மிகவும் கஷ்டப்பட்டு நாட்டின் சட்டத்திற்கு அமைய முன்னேறியவன். மோசடிகளை செய்து முன்னேறவில்லை. நாடு ஒன்று முன்னேறிச் செல்லும் போது இவ்வாறான நடவடிக்கைகள் தேவைற்றன.

நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினையில் இருந்து மீட்பதே அவசியமானது.

இதனால், இப்படியான குற்றச்சாட்டுக்கு எதிராக மறக்க முடியாத பாடத்தை கற்றுக்கொடுப்பதற்காக உதய கம்மன்பிலவுக்கு எதிராக அவதூறு வழக்கை தாக்கல் செய்ய உள்ளதாக நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.