உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகளுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டு விலைகளை நிர்ணயிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் நெல் உற்பத்தியாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நெல்லுற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் மற்றும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசி பற்றாக்குறையை காரணமாக நெல்லுற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி வகைகளுக்கு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி்ல் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
அதேபோன்று வர்த்தக நோக்கில் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிற வகையான அரிசி வகைகள் மீது தனியான வரிவிதிப்பை மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, சந்தையில் அரிசியின் விலையில் தளம்பல் நிலை ஏற்படாது என கருதப்படுகிறது.