தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பை அடைந்துள்ள நிலையில், சென்னை போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா செய்தியாளர்களை சந்தித்த்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
எம்.ஜி.ஆர் கட்சியின் வளர்ச்சிக்காக ஜெயலலிதாவை கொள்கை பரப்பு செயலாளராக கொண்டு வந்தார். 15 லட்சம் பேர் இருந்த கட்சித் தொண்டர்களின் என்ணிக்கையை 1.5 கோடி பேராக உயர்த்தியவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர் அரசியலை விட்டு விலகிவிடலாம் என ஜெயலலிதா நினைத்தார், நான் தான் அவரை ஆறுதல் படுத்தினேன்.
ஜெயலலிதா மறைந்த உடனேயே கட்சியை உடைக்க துரோகிகள் சதி செய்து விட்டனர். என் உயிரைக் கொடுத்தாவது கட்சியைக் காப்பாற்றுவேன். 1.5 கோடி தொண்டர்கள் உள்ள இந்தக் கட்சியை பன்னீர் செல்வத்தால் ஒன்றும் செய்ய முடியாது. கட்சியின் மீது விசுவாசமாக இல்லாமல் நன்றி மறந்து பன்னீர் செல்வம், கட்சியை பிரிக்க நினைக்கிறார்.
நான் நினைத்திருந்தால் ஜெயலலிதா மறைந்த அன்றே முதல்வர் ஆகியிருக்கலாம். எனக்கு எல்லா பதவிகளும் தேடி வந்தது ஆனால் பதவிகள் மீது எனக்கு ஆசையில்லை. அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமாக இருந்தது. கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின் போது ஓ.பன்னீர் செல்வம், நம் எதிரிக் கட்சியான திமுகவினரிடம் மிகுந்த நெருக்கத்தை காட்டினார். இது சம்பந்தமாக அமைச்சர்கள் என்னிடம் குறை கூறினர். மேலும், பன்னீர் செல்வத்தின் மீது தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர். பன்னீர் செல்வம் திமுகவை, சட்டசபையில் எதிர்த்து பேசியிருந்தால் அவர் முதல்வராக தொடர அனுமதித்திருப்பேன்.
அனைத்து உறுப்பினர்களும் எங்கள் பக்கம் இருப்பதால், எப்படி ஆட்சியமைக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். ஜெயலலிதா உடன் இருந்து அனைத்து போராட்டங்களிலும் பாடம் கற்றவள் நான். போராட்டங்கள் என் கைதூசிக்கு சமம். எத்தனை ஆண்கள் வந்தாலும், தனிப் பெண்ணாக நின்று சாதிப்பேன். முதல்வராக பொறுப்பேற்று சட்டசபை சென்று ஜெயலலிதா படத்தை அங்கே திறந்து வைப்பேன்.
இவ்வாறு பேசினார்.