முல்லைத்தீவு மாவட்டம், கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நல்லாட்சி அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதுடன், அவற்றுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கவும் வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
விமானப்படை வசமுள்ள தமது சொந்த நிலங்களை விடுவிக்குமாறு கோரி கேப்பாப்பிலவு மக்கள் 14ஆவது நாளாகவும் முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்பில் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள கேப்பாப்பிலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தமது பூர்வீக நிலங்கள் விமானப்படை வசமுள்ளதாகவும் அதனை விடுவிக்குமாறு கோரியும் 14ஆவது நாளாகவும் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கைகள் குறித்து நல்லாட்சி அரசு கவனம் செலுத்த வேண்டும்.
வடகிழக்கு தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தியிருந்தது. அப்போது, இது தொடர்பில் கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்படும் என அரசு குறிப்பிட்டிருந்தது.
அம்மக்கள் நீண்டகாலமாக இவ்வாறான பொய் வாக்குறுதிகளினால் ஏமாற்றப்பட்டு கலந்துரையாடல்களில் நம்பிக்கையில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சிறுபான்மை மக்களது ஆதரவோடு ஆட்சியில் அமர்த்தப்பட்டுள்ள நல்லாட்சி அரசுக்கு இந்த விடயத்தில் விசேட பொறுப்புள்ளது.
எனவே, இந்தப்பிரச்சினைக்கு இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அதன் பொறுப்பாகும்.
30 வருட கால யுத்தத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களுக்கு தொடர்ந்தும் அசௌகரியங்களை ஏற்படுத்துவது சிறந்ததல்ல. நாட்டில் உருவாகியுள்ள சுதந்திர காற்றை அம்மக்களும் சுவாசிக்க வேண்டும். அவர்களுக்கு வாழ்வதற்கும், விவசாயம் செய்வதற்கும் தேவையான காணிகளை நல்லாட்சி அரசு வழங்க வேண்டும். –என்றார்.