கொலைகாரர்களே, நீங்கள் வளர்த்த மரத்தை நீங்களே வெட்டிக் கொன்றுவிட்டீர்களே !

உயர் பீடத்தில் இனி ஹஸன் அலி இல்லை.ஒரு மூத்த உறுப்பினர் அநியாயமாக ஏமாற்றப்பட்டு அகற்றப்பட்டுவிட்டார்.காங்கிறஸ் இனி எங்கள் கட்சி என்று சொல்வதற்கு உயர் பீடத்திலிருந்த கிழக்கின் ஒரே ஒரு ஸ்தாபக உறுப்பினர் ஹஸன் அலி மாத்திரம்தான்.அவரும் இனி இல்லை. இன்னும் சில வருடங்களுக்கு பின்னர் மத்திய மலைநாட்டின் மலைகள் உயர்ந்த வீதிகளினூடாக நீங்கள் செல்லும்போது நீளமாக உயர்ந்து நிற்கும் மரத்தின் கட் அவுடுகளையும்,அதில் சிரித்துக் கொண்டு கையை அசைத்துக்கொண்டிருக்கும் அறிமுகமில்லாத முகங்களையும் கண்டு சில பெரியவர்கள் சொல்வார்கள்.’’ஒரு காலத்தில் இது நாங்கள் வளர்த்த கட்சியாக இருந்தது.இது எங்களின் அடையாளமாக இருந்தது’’ என்று.அவ்வளவுதான்.

‘’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ’’ என்று பாரதியின் ஒரு பாடல் எனக்கு ஞாபகம் வருகிறது.மரம் என்ற வீணையின் நரம்புகளை அறுத்து,அதை நாட்டியவர்களின் விரல்களை உடைத்து அதை வேரோடு பிடுங்கி இன்று இன்னொரு இடத்தில் வைத்துவிட்டார்கள்.

தலைவர் யாராகவும் இருக்கலாம்.இறையச்சம் இருந்தால் மூக்கறுபட்ட கறுப்பின அடிமையாகக் கூட இருக்கலாம்.அவன் வேற்றுக்கிரகத்தில் இருந்து வந்தவனாகவும் இருக்கலாம்.ஆனால் எங்களைப் புரிந்தவனாக இருக்கவேண்டும்.எங்கள் பண்பாட்டை,எங்கள் மண் வாசனையை,எங்கள் மொழி வழக்கை..அப்பொழுதுதான் வயல்களில் வரம்புவெட்டும் எங்கள் கைகளின் பழுப்பைப் புரிந்து கொள்ள முடியும்.கடலில் துடுப்பு வலித்து மீன் பிடித்து வரும் எங்கள் மீனவர்களின் முதுகு வலியை உணர முடியும்.நூலெடுத்து தறி நெய்யும் எம்மவர்களின் கைவலியைப் புரிந்து கொள்ள முடியும்.வெயிலில் நெல் காயவைக்கும் வெயிலின் சூட்டைப் புரிந்து கொள்ள முடியும்.இதைப் புரிந்த யாரும் எங்கள் தலைவராக வரட்டும். எங்களை ஆளட்டும்.மலை நாட்டில் இருந்தும் வரட்டும்,கடல் தீவில் இருந்தும் வரட்டும். ஆனால் நல்லவராக இருக்கட்டும்.உள்ளத்தில் கபடமில்லாமல் ஸலாம் சொல்லட்டும்.உண்மைக்கு உண்மையாக சுஜூது செய்யட்டும்.எங்கள் தாய்மார்களுக்கு,மனைவியருக்கும்,குழந்தைகளுக்கும் காவலனாக இருக்கட்டும்.காமுகனாக அல்ல.அப்போது நாங்கள் அடிபணிகிறோம். 

எங்கே தவறு நடந்தது என்று சிந்தித்துப்பார்க்கிறேன்.யார் அழிந்தாலும் எனது கோப்பையில் மட்டும் கஞ்சி நிறைய வேண்டும் என்று நினைக்கும் உயர் பீட உறுப்பினர்கள்.
எமது மக்களின் பண்பாட்டையும்,ஏக்கத்தையும் புரிந்து கொள்ள விரும்பாத,முடியாத தலைவரின் தலைக்கனம்.
கொள்கை போனாலும்,கோட்பாடு போனாலும் உரிமை போனாலும் பரவாயில்லை எங்கள் தலைவரே எங்கள் ஆண்டவர் என்று ரட்சிக்கும் அடிமட்டத் தொண்டனின் அறியாமை.

இவை மூன்றும் மாறாத வரைக்கும் இந்த மண்ணில் இனி மாற்றம் வராது.

இனி என்ன நடக்கும்?
அதே பாடல்,அதே ராகம்.அதே பல்லவி.அறிமுகமில்லாத மனிதர்களோடு உங்களைத் தேடி ஓடி வருவார்கள்.கட்டியணைத்து முத்தமிட்டு வாக்குகளை வாரி வழங்குவீர்கள்.மலையில் ஏறிப்போய் விடுவார்கள்.

மீண்டும் அதே பாடல்.அதே ராகம்.அதே பல்லவி.
மீண்டும் அதே பாடல்….இது இனி இப்படியே தொடரும்.

இங்குதான் கவலையெல்லாம் கோபமாக மாறுகிறது.

எதுவுமே புரியாத அறிவிலிகளா நாம்.

வயலை எரித்து விட்டு வேலி மட்டும்போதும் என்று நினைக்கும் முட்டாள்களா நாம்.

இடுப்பில் இருந்த கோவணத்தை அவிழ்த்து தலையைச் சுற்றி முண்டாசு கட்டும் மூடர்களா நாம்?

மக்களையெல்லாம் அழித்து விட்டு மன்னனை மட்டும் காப்பாற்றும் மடையர்களா நாம்?

கொள்கையையும் கோட்பாட்டையும் பகரம் வைத்து காப்பாற்றும் தலைவனிடம் என்ன பயன் இருக்கப்போகிறது?

நட்ட மரத்தை வெட்டிவிட்டு நிழல் தேடியோடுவது எத்தனை மடமை.

இது புரியாதவர்களா நாம்.

நாளை உங்கள் குழந்தைகளுக்கு சாந்தமாமாவைக் காட்டி சோறூட்டும்போது சொல்லும் கதையாகிவிட்டது காங்கிறஸ்.

முன்னொரு காலத்தில் ஒரு அழகான ஊரில் ஒரு பெரிய மரம் இருந்திச்சாம்.ஊரில் இருந்த எல்லோரும் அந்த மரத்தை நேசித்தார்களாம்.ஒரு நாள் ஒரு பெரிய அரக்கன் வந்து நான் இந்த மரத்தைப் பாதுகாக்கிறேன் என்று சொன்னானாம்.எல்லோரும் நம்பினார்களாம்.அந்த அரக்கன் மரத்தை வெட்டி,வெட்டி விற்றுவிட்டு அந்த இடத்தில் ஒரு வேலியை கட்டினானாம்.ஊர் மக்கள் வந்து எங்கே மரம் என்று கேட்டால் வேலிக்குள் பாதுகாப்பாக இருக்கிறது என்றானாம் அந்த அரக்கன்.அதை நம்பிய மக்கள் அரக்கன் மரத்துக்கு நல்ல காவலன் என்று நினைத்து அவனை ஊருக்கு தலைவனாக தெரிஞ்சாங்களாம்..அரக்கனும் இப்படி முட்டாள்களா இந்த மக்கள் என்று நினைத்து மக்கள் கொடுக்கும் சாப்பாட்டையும் சாப்பிட்டு,மரம் வித்த காசையும் பெற்று மக்களை ஏமாற்றியே வாழ்ந்து வந்தானாம்……

ரவூப் ஹக்கீம் காங்கிறசுக்கு எப்போது தலைவரானாரோ அன்று இத்துப்போன மரம் இன்று செத்துப்போய்விட்டது.
கொலைகாரர்களே,நீங்கள் வளர்த்த மரத்தை நீங்களே வெட்டிக் கொன்றுவிட்டீர்களே.அதுவரைக்கும் எனக்குப் புரிகிறது.வெற்றிக்களிப்பில் ஏன் சிரிக்கிறீர்கள் என்று மட்டும் புரியவில்லை.

எனது எழுத்தும் என்னோடு சேர்ந்து அழுகிறது.