‘கட்சிக்காகப் பயன்படுத்த அஷ்ரப் எனும் காந்தத்தினால் இழுத்துக் கொண்டு வரப்பட்ட இரும்பு நான்’ என்கின்றார் பஷீர்

 

1994 இல் பெருந்தலைவர் அஷ்ரஃபினால் கட்சிக்கு அழைத்துவரப்பட்டவன் நான்.சம்மிட் ப்ளட்டில் அன்று நடந்த முதலாவது பொலிட் பீரோக் கூட்டத்துக்கு பார்வையாளர் அந்தஸ்த்தில் சென்ற போது நாரே தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற கோசம் முகட்டைத் தொட்டதை நினைத்துச் சிலிர்த்தவனாக எழுதுகிறேன். 

கட்சிக்குள்ளேயே கட்சியின் நன்மைக்காகவும், சமூகத்தின் உரிமைக்காகவும் போராடுகிற புதிய கலாச்சாரத்தை தொடங்கி வைப்பதற்காக எனது பிரதிநிதித்துவ அரசியலையும், கட்சியின் உயர் பதவியையும் தெரிந்து கொண்டே பலி கொடுத்தேன்.

கட்சித் தலைமையகமான தாறுஸ்ஸலாத்தில் நமது மக்களுக்கு இருக்கும் உரிமைக்காகக் கட்சிக்குள்ளே போராடிய அன்று சில உச்ச பீட உறுப்பினர்கள் கூச்சலிட்ட போது என் காதுகளுக்கு சம்மிட் ப்ளட்டில் ஒலித்த எனக்கான அந்த தந்த தக்பீர் முழக்கத்தை நினைத்துக் கொண்டேன். 

04 .02. 2017 இரவு இடம் பெற்ற உச்சபீடக் கூட்டத்தில் என்னை இடை நிறுத்திய வேளை நான் அவ்விடத்தில் உடல் ரீதியாக இருக்கவில்லை, ஆனால் எனது ஆன்மா அங்கு பிரசன்னமாகி இருந்தது. கட்சிக்கான எனது பங்களிப்பையும், கட்சி எனக்குத் தந்த கௌரவத்தையும், மற்றும் பதவிகளையும் நினைந்து அந்த ஆன்மா உணர்ச்சி கொப்பளிக்கப் பரவிக் கிடந்ததை உணர்ந்தேன்.

கட்சிப் பதவியில் இருந்து என்னை இடை நிறுத்துவது தொடர்பாக சில உறுப்பினர்கள் உச்சஸ்தாயியில் பேசிய போது பிரதிச் செயலாளர் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்கள் “பஷீர் விரும்புவதைத்தான் நீங்கள் செய்ய விளைகிறீர்கள், அவர் இப்போது நீதிமன்றம் செல்ல ஏற்கனவே தயாரிக்கப்பட்ட ஆவணங்களோடு தயாராக இருப்பார்” என்று சொன்னதாக அறியக்கிடைத்தது.

நான் அந்தளவுக்கு எந்தத் தயாரிப்பிலும் இருக்கவில்லை. கடந்த காலங்களில் கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்திய இழிவானவர்களின் பட்டியலில் நானும் இடம் பிடிக்க விரும்பவில்லை.நான் மக்களின் நீதிமன்றத்தில் வாதிடுவதற்கு முடியும் என்ற நம்பிக்கை உள்ளவன். மேலும் அரச பதவியோ, கட்சி உயர்பதவியோ மக்கள் முன் பேச அவசியமில்லை என்பதிலும் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவன் நான். 

எனவே, எந்தவொரு தருணத்திலும் எனது பதவிகளைக் காத்துக் கொள்வதற்காகவோ, தலமைப் பொறுப்பில் இருப்பவர்களால் எனக்கு இழைக்கப்படும் அதீதிகளுக்கு நீதி தேடியோ அல்லது பலிவாங்கும் நடவடிக்கையாகவோ பெருந்தலைவர் அஷ்ரஃப் உருவாக்கிய முஸ்லிம் காங்கிரசை நீதிமன்றத்தில் நிறுத்த எனது மனது ஒப்பாது. நான் மறைவான நிகழ்ச்சி நிரல்களோடு ஓடி வந்து கட்சியோடு ஒட்டிக் கொண்டவனல்ல. கட்சிக்காகப் பயன்படுத்த அஷ்ரப் எனும் காந்தத்தினால் இழுத்துக் கொண்டு வரப்பட்ட இரும்பு நான்.

இன்று இருக்கும் எந்த ஒரு முஸ்லிம் கட்சியும் முஸ்லிம்களுக்கான நிரந்தர விசை அல்ல, அந்த சக்தி முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமேயாகும். ஏனெனில் இன்னும் மக்கள் ஆதரவுத் தளத்தில் கட்டப்பட்ட அடித்தளம் இக்கட்சிக்கு மட்டுமே உண்டு. ஏனைய முஸ்லிம் கட்சிகள் பிரமுகர்களின் கூட்டு எனும் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளன. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிரந்தரமானது. அது பரம்பரை பரம்பரையாக நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் கொண்டது.ஆனால் தலைவர்கள் தற்காலிகமானவர்கள், நாளையும் அழியலாம் பின்னொரு நாளும் அழியலாம். எனவே நிரந்தரமான விசையான எமது கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தி செயற்கையாக- குறுக்கு வழியில் அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லமாட்டேன்.

கட்சியைத் தூய்மைப்டுத்தும் எனது பணி தொடரும். மக்களோடு பேச ஏது தடை? 

நான் வண்டியில் பூட்டப்பட்ட புரவி எருதுகளையும் , எஞ்சின்களையும் ஏற்றி இழுப்பேன், என்றென்றைக்குமான சாதாரண முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினராக.

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகு தாவூத்