முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனது அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை வழங்கியதாகவும் மிகவும் மகிழ்ச்சியுடன் தன்னிடம் வந்த மகிந்த நன்றி எனக் கூறியதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
வார பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும்,
2005 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்சவை பெயரிட்டமையானது தான் தனது வாழ்க்கையில் செய்த மிகப் பெரிய தவறு எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கம் தற்போதைய வேகத்தை விட வேகமாக பணியாற்றினால் எனக்கும் விருப்பம்.
அரசாங்கத்தில் தற்போது அமைச்சர்களாக பதவி வகித்து வரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர்கள் கடந்த ஊழல் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள்.
அமைச்சர்களாக பதவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவர் சிலர் இதற்கு முன்னர் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள் அல்ல.
அரசாங்கத்தின் மந்தகதியான பயணத்திற்கு இதுவும் ஒரு காரணம் எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி – நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டு தரப்பையும் சேர்ந்த அமைச்சர்கள் ஒருவருக்கு ஒருவர் விமர்சித்து கொள்ளும் நிலைமை காணப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி – இதனை தான் நான் முன்னரும் கூறினேன். கடந்த 9 ஆண்டுகளாக ஒன்றாக திருடி சாப்பிட்டவர்கள் இருக்கின்றனர். கொள்ளையிட வேண்டும் என்ற தேவை காரணமாக பழைய அரசாங்கத்தை அவர்கள் ஆட்சிக்கு கொண்டு முயற்சிக்கலாம்.
கட்சி என்ற வகையில் நாங்கள் இவ்வாறான விடயங்கள் குறித்து தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். நல்லாட்சி என்பது இவர்களுக்கு, சாரைப்பாம்பின் மீது மண்ணெண்ணெய் பட்டது போல் உள்ளது.
கேள்வி – ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பது பற்றியும் பேசப்பட்டது. மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிச் சடங்கின் போது ஜனாதிபதி வாக்குறுதியளித்தார்.
எனினும் இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இது பற்றிய உங்களது நிலைப்பாடு என்ன?.
முன்னாள் ஜனாதிபதி – கட்டாயம் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும். அதில் இருவேறு கருத்துக்கள் கிடையாது. இது இந்த அரசாங்கத்தை சீர்குலைக்க கனவு காணும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உள்ள மகிந்த ராஜபக்சவுடன் இருக்கும் நபர்கள் ஏற்படுத்தும் பிரச்சினை.
கேள்வி – மைத்திரிபால சிறிசேன மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட போவதில்லை என கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது கூறினார்.
எனினும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவரே வேட்பாளராக போட்டியிடுவார் என அவருக்கு நெருக்கமான அமைச்சர்கள் சிலர் தற்போது கூறுகின்றனர். இது பற்றி உங்களது நிலைப்பாடு என்ன?.
முன்னாள் ஜனாதிபதி – அமைச்சர்கள் அப்படி கூறினாலும் ஜனாதிபதி தான் போட்டியிடுவதாக கூறவில்லையே. இந்த அமைச்சர்களின் வாய்களை மூட முடியவில்லை என்பதுதான் எனக்குள்ள பிரச்சினை. இவர்களின் வாய்களை மூட வேண்டும் இல்லையேல் விலக்க வேண்டும்.
ஜனநாயகத்தை போன்று கட்சியின் ஒழுக்கத்தையும் பாதுகாக்க வேண்டும். எனினும் மைத்திரி மீண்டும் போட்டியிடுவேன் எனக் கூறவில்லை.
வாக்குறுதியை அவர் மீறுவார் என நான் நினைக்கவில்லை. அவர் எங்கள் அனைவருக்கும் வாக்குறுதி வழங்கினார். மைத்திரி வாக்குறுதிகளை மீறிய அரசியல்வாதி அல்ல என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.